இராமநாதபுரம்
மாவட்டம் திருப்புல்லாணி அருகே பள்ளபச்சேரியில் ஒரே கோயிலில் ஐந்து கழுமரங்கள்
மக்கள் வழிபாட்டில் உள்ளன. கழுவேற்றப்பட்டதன் அடையாளமாக உள்ள இத்தகைய கழுமர
வழிபாடுகள் மாவட்டம் முழுவதும் பரவலாக
காணப்படுவது ஏதோவொரு வரலாற்றுச் செய்தியை நினைவுபடுத்துவதாக உள்ளது.
பள்ளபச்சேரி கோவிந்தன் கோயில் கழுமரங்கள் |
கழுவேற்றம்
கழுவேற்றம் என்பது கொடூரமான ஒரு மரணதண்டனையாக
முற்காலத்தில் வழங்கப்பட்டு வந்துள்ளது. மரம் அல்லது இரும்பால் செய்யப்பட்ட
கூர்முனையுள்ள கழுவில் எண்ணெய் தேய்த்து வழுவழுப்பாக்கி இருப்பர். கழுவேற்ற
வேண்டியவர்களை நிர்வாணமாக்கி அவர்களின் ஆசனவாயை கழுவில் சொருகிவிடுவர். ஆள்
நடமாட்டமில்லாத காட்டுப்பகுதிகளில் அமைக்கப்படும் இத்தகைய கழுவில் ஏற்றப்பட்டவர்கள்
பல நாட்கள் கதறி துடிதுடித்து உயிர் விடுவர். அவர்களின் உடல் நாய், நரி, கழுகு,
பருந்து போன்றவற்றிக்கு உணவாகிவிடும். அரசை
எதிர்ப்பவர்கள், திருடர்கள் போன்றவர்களுக்கு இதுபோன்ற தண்டனை வழங்கப்பட்டு
வந்துள்ளதாகத் தெரிகிறது.
கழுமர
வழிபாடு
இவ்வாறு கழுவேற்றிக் கொல்லப்பட்டவர்களின் உயிர்
அந்தக் கழுமரங்களில் உறைந்து தெய்வத்தன்மை அடைவதாக மக்கள் நம்புவதால் இத்தகைய
கழுமரங்களை காலங்காலமாக வழிபட்டு வருகிறார்கள். பெரும்பாலும் கழுவேற்றிக் கொல்லப்பட்ட
வீரர்களையே மக்கள் வழிபடுகிறார்கள்.
கழுவேற்றப்பட்டு இறந்தவர்களை அவர்களின்
உறவினர்கள் மற்றும் ஊர் மக்கள் மட்டுமின்றி, சில இடங்களில் கழுவேறக் காரணமானவர்களின்
உறவினர்களும் வணங்குகிறார்கள். திருநெல்வேலி,
தூத்துக்குடி மாவட்டங்களில் உள்ள உடையார் கழுமர வழிபாட்டை இதற்கு உதாரணமாகச் சொல்லலாம்.
களரி கோயிலில் கருவறை தெய்வமாக கழுமரம் |
கழுவேற்றம் நடந்ததன் நினைவாக இராமநாதபுரம்
மாவட்டத்தின் பல இடங்களில் கல்லால் செதுக்கப்பட்ட கழுமரங்களை மக்கள் வணங்கி
வருகிறார்கள். மரம், இரும்பால் ஆன பழமையான கழுமரங்கள் அழிந்துபோன நிலையில் கல்லால்
செதுக்கப்பட்ட கழுமரங்களை புதியதாய் உருவாக்கி வழிபட்டு வருகிறார்கள். இத்தகைய கல்
கழுமரங்களின் கீழ் அதில் உயிர் விட்டவர்களின் சிற்பங்களை செதுக்கி வைக்கிறார்கள்.
சில இடங்களில் கழுமரங்களே கருவறைத் தெய்வமாக உள்ளன. மக்கள் தெய்வங்களாக இவர்கள்
வணங்கப்பட்டு வருகிறார்கள். இவ்வகை
வழிபாடுகள் இன்னும் உயிர்ப்புடன் உள்ளன.
இந்நிலையில் இராமநாதபுரம் மாவட்டம், திருப்புல்லாணி அருகே பள்ளபச்சேரி கோவிந்தன் கோயிலில் ஐந்து
கழுமரங்கள் உள்ளன. ஒரே கோயிலில் இவ்வளவு கழுமரங்கள் காணப்படுவது இங்கு மட்டுமே.
பள்ளபச்சேரி கோவிந்தன் கோயில் கழுமரங்கள் |
இப்பகுதி கிராமக்கோயில்கள் பற்றி ஆய்வு செய்து
வரும் திருப்புல்லாணி சுரேஷ் சுதா அழகன் நினைவு அரசு மேல்நிலைப்பள்ளி தொன்மைப்
பாதுகாப்பு மன்றத்தைச் சேர்ந்த ஒன்பதாம் வகுப்பு மாணவி மு.அபிநயா இக்கோயில்
வழிபாடு பற்றி ஆய்வு செய்து கோவிந்தன் கோவில் –
வழிபாடும் வரலாறும் என்ற தலைப்பில் கட்டுரை சமர்ப்பித்தார். இக்கட்டுரையின்
அடிப்படையில் இம்மாவட்டம் முழுவதும் உள்ள கழுமர வழிபாடு பற்றி இம்மன்ற
பொறுப்பாசிரியரும், இராமநாதபுரம் தொல்லியல் மற்றும் வரலாற்றுப் பாதுகாப்பு
மையத்தின் நிறுவனருமான வே.இராஜகுரு, இராமநாதபுரம் தொல்லியல் மற்றும் வரலாற்றுப்
பாதுகாப்பு மையத்தின் தலைவர் காளிமுத்து, கமுதி ஒருங்கிணைப்பாளர் வெள்ளைப்
பாண்டியன் ஆகியோர் ஆய்வு செய்தனர். இதுபற்றி
தொல்லியல் ஆய்வாளர் வே.இராஜகுரு கூறியதாவது,
![]() |
மாணவி அபிநயா |
கழுமரங்களில்
உள்ள சாமிகள்
இங்குள்ள
கழுமரங்களில் தெற்கத்தி முனியசாமி, கோவிந்தன், ஊர்வலசாமி, கருப்பணன், நொண்டிக்கருப்பணன்
ஆகியோரின் சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளன. இரு கைகளிலும் ஆயுதங்கள் ஏந்தி
காட்சியளிப்பதால் இவர்கள் போர்வீரர்களாக இருந்திருக்கலாம்.
கழுமரங்களின்
நடுவே இராக்கச்சியம்மன், இருளாயி, காளி ஆகிய பொம்மடி தெய்வங்கள் உள்ளன. இங்கு பெண்
தெய்வங்களுக்கு கோழியையும், ஆண் தெய்வங்களுக்கு ஆடுகளையும் பலி கொடுக்கிறார்கள்.
நூறு
ஆண்டுகளுக்கு முற்பட்ட இரு கல்வெட்டுகளில் இக்கோயிலை வழிபடும் கோடாங்கி மகன்
உடையான், இராக்கன் மகன் கருப்பணன் சாத்தார் ஆகிய இரு வகையறாக்களின் பெயர்கள்
குறிப்பிடப்பட்டுள்ளது.
அவித்த
தட்டைப்பயறு, கானம், கருப்பட்டி, தேங்காய், வாழைப்பழம், பச்சரிசி, பலகாரம் ஆகியவற்றை
பள்ளையம் இட்டு வணங்குகிறார்கள்.
இராக்கச்சியம்மனை
வணங்கும்போது “கட்டுச்சோறு
கட்டி கனத்தவழி போறோம்” என்று சொல்லி கோவிலைச்
சுற்றி வருகிறார்கள். இதன்மூலம் இவ்வூரில் இருப்பவர்கள் இடம்பெயர்ந்து இங்கு
வந்துள்ளதை அறிய முடிகிறது.
ஆட்டின்
இரத்தத்தை பொங்கலுடன் கலந்து உருண்டை
உருட்டி புது மண்சட்டியில் வைத்து அதிகாலையில் கருடனுக்குப் படைக்கிறார்கள்.
கருடன் அதை கண்ணிமைக்கும் நேரத்தில்
தூக்கிச் சென்று விடுகிறது. இது
கழுவேற்றப்பட்டவர்கள் கழுகுக்கு இரையாக்கப்பட்டதன் நினைவேந்தலாக உள்ளது.
மதுரை தொடர்பு
மாவட்டம் முழுவதும் இவ்வழிபாடு ஆய்வு
செய்யப்பட்டது. திருப்புல்லாணியிலிருந்து கமுதி வழியாக மதுரை செல்லும்
வழித்தடத்தில் அதிகஅளவில் கழுமரங்கள் உள்ளன.
மண்டலமாணிக்கம் அருகே கழுவன் பொட்டல் என்ற ஊர் உள்ளது. இங்கு கழுவேற்றம்
நடந்ததற்கான தடயங்கள் கண்டறியப்பட்டன. இதன் அருகில் ஒரு பள்ளபச்சேரி உள்ளது. மதுரை
அருகே திருப்புவனத்தில் ஒரு கழுவன் பொட்டல் உள்ளது.
கண்ணன்குடி கோயில் கழுமரங்கள் |
உத்தரகோசமங்கை அருகே கண்ணன்குடி,
கோவிந்தனேந்தல், உப்பாணைகுடி, கமுதி அருகே மண்டலமாணிக்கம் ஆகிய ஊர்களில் உள்ள
கோயில்களில் தலா மூன்று கழுமரங்கள் உள்ளன. களரியில் கழுமரம் கருவறை தெய்வமாக
வணங்கப்படுகிறது.
![]() |
உப்பாணைக்குடி கோயில் கழுமரங்கள் |
மண்டலமாணிக்கம் கோயில் கழுமரங்கள் |
வழிபாடுகள் உணர்த்துவது
மதுரையில் சமணர்களை கழுவேற்றினர் என
பெரியபுராணம் கூறியபோதும் அதை பல தொல்லியல் ஆய்வாளர்கள் ஏற்றுக்கொள்வதில்லை.
இந்நிலையில் பல நூற்றாண்டுகளாக இப்பகுதிகளில் கழுமர வழிபாடு இருப்பது வியப்பாக
உள்ளது.
இத்தகைய கழுமர வழிபாடு பாண்டியநாடு முழுவதும் பல இடங்களில் காணப்பட்டாலும், இதன்
காரணங்கள் ஒவ்வொரு பகுதியிலும் வேறுவேறாக உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment