Pages

Tuesday 2 May 2017

இராமபிரானை ‘இலங்கை வழி திறந்த பெருமாள்’ எனப் புகழும் கல்வெட்டு பள்ளி மாணவர்கள் ஆய்வில் கண்டுபிடித்தது



பள்ளிகளில் மன்றங்கள்
கல்வி இணைச் செயல்பாடுகள் மூலம் மாணவர்களிடம் பல்வேறு  சமூகப் பண்புகளை வளர்க்க பள்ளிகளில் பலவித மன்றங்கள் செயல்பட்டு வருகின்றன. மதிப்பெண்கள் மட்டுமே மாணவர்களின் சாதனையாக பேசப்பட்டுவரும்  இக்காலகட்டத்தில், இத்தகைய மன்றங்களில் மாணவர்களை ஈடுபடுத்துவது சற்று கடினமான  காரியமாக உள்ளது.  



இராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி சுரேஷ் சுதா அழகன் நினைவு அரசு மேல்நிலைப்பள்ளியில் தொன்மைப் பாதுகாப்பு மன்றம் மூலம் மாணவர்களுக்கு பாரம்பரியம் பற்றிச் சொல்லித் தரப்படுவதுடன் அது பற்றிய நேர்முகப் பயிற்சியும் அளிக்கப்படுகிறது.


ஏற்கனவே படிஎடுக்கப்பட்ட கல்வெட்டுகளை அடையாளம் காண்கிறார்கள்
கல்வெட்டு படி எடுத்தல் 

கல்வெட்டுகளை படி எடுக்கவும், படிக்கவும் பயிற்சி பெற்றுள்ள இம்மன்றத்தைச் சேர்ந்த அபர்ணா, விசாலி, அபிநயா, சினேகா, விஜய், ராஜபாண்டியன், ராஜ்கண்ணா ஆகிய ஒன்பதாம் வகுப்பு மாணவர்கள் திருப்புல்லாணி ஆதிஜெகநாதப் பெருமாள் கோயிலில் உள்ள கல்வெட்டுகளை 03.03.2017 அன்று ஆய்வு செய்தார்கள். இதில் ஏற்கனவே படி எடுக்காத சில துண்டுக் கல்வெட்டுகள் பட்டாபிஷேக இராமர் சன்னதி அருகில் இருப்பதைக் கண்டறிந்தனர். இக்கல்வெட்டுகளை தொன்மைப் பாதுகாப்பு மன்ற பொறுப்பாசிரியரும், தொல்லியல் ஆய்வாளருமான வே.இராஜகுரு வழிகாட்டுதலில் படி எடுத்துப் படித்தனர். இதுபற்றி  வே.இராஜகுரு கூறியதாவது,  


கல்வெட்டுகளை படி எடுக்கும் மாணவர்கள்
கல்வெட்டு செய்தி
இராமபிரான் இலங்கையிலிருந்து திரும்பி வந்தபோது திருப்புல்லாணியில் பட்டாபிஷேகம் செய்துகொண்டதாக இக்கோயில் தலவரலாறு கூறுகிறது. அதை நினைவூட்டும் விதத்தில் இங்கு  பட்டாபிஷேக இராமருக்கு தனி சந்நிதி உள்ளது. இச்சந்நிதியில் இராமபிரான், இலட்சுமணன் சீதையுடன் நின்ற கோலத்தில் காட்சி தருகிறார்.
பிற்காலப் பாண்டியர் கலை அமைப்பில் உள்ள இந்த சந்நிதியில் துண்டுக் கல்வெட்டுகள் பல உள்ளன. ஆனால் அவை சிதைந்த நிலையில் இருப்பதால் அவற்றின் செய்தியை முழுமையாக அறிந்துகொள்ள இயலவில்லை.

கல்வெட்டுகளை படி எடுக்கும் மாணவர்கள்
இக்கல்வெட்டுகளின் எழுத்து அமைப்பைக் கொண்டு இவை 13 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பிற்கால பாண்டியர் கல்வெட்டுகள் என அறியமுடிகிறது. ஒன்றுக்கொன்று தொடர்புடைய சில கல்வெட்டுகள் மூலம் சில செய்திகளை அறிந்துகொள்ள முடிகிறது.
இவற்றில் எதிலும் மன்னர் பெயர் இல்லை. இரு கல்வெட்டுகளில் “கீழ்ச்செம்பி நாட்டு திருப்புல்லாணித் திருப்பதி ஸ்ரீவைஷ்ணவர்களுக்கு இக்கோயில்” என சொல்லப்பட்டுள்ளது. ஒரு கல்வெட்டு கோனேரின்மை கொண்டான்’ எனும் அரசாணை கல்வெட்டு ஆகும்.
இரண்டு கல்வெட்டுகள், இராமபிரானை ‘இலங்கை வழி திறந்த பெருமாள்’, என்றும் சீதையை பச்சை மரகதம் போன்ற அழகுடைய தலைவி எனும் பொருளில் ‘மாதகச் சொக்கப் பிராட்டி’ என்றும்  குறிப்பிடுகிறது. ‘சிவகாம சுந்தரநல்லூர்’ என்ற ஊரில் ஏற்கனவே கொடுக்கப்பட்ட பள்ளிச்சந்தமும், பழந்தேவதானமும் நீக்கி  பிற பகுதியை இக்கோயிலுக்கு திருவிடையாட்டமாக வழங்கிய தகவல்  ஒரு கல்வெட்டில் உள்ளது. பள்ளிச்சந்தம் கொடுத்த தகவல் இருப்பதன் மூலம் இப்பகுதியில் சமண, புத்த பள்ளிகள் இருந்திருப்பதை அறியமுடிகிறது. இதில் குறிப்பிட்டுள்ள ‘சிவகாம சுந்தரநல்லூர்’ திருவாடானை அருகில் உள்ள ஆனந்தூராக இருக்கலாம்.
கல்வெட்டுகளை படிஎடுத்து படித்துச் சொன்ன மாணவ மாணவியர்களை பள்ளித் தலைமையாசிரியர் பிரேமா, கோயில் பேஷ்கார் கண்ணன் ஆகியோர் பாராட்டினர்.
நாளிதழ் செய்திகள்

 

No comments:

Post a Comment