Pages

Saturday 2 July 2016

புல்லன் எனும் பெயரின் சமணத் தொடர்பு – வே.இராஜகுரு

அன்னதானம், அபயதானம், சாத்திரதானம், ஔடததானம் ஆகியவை சமணர்களின் நான்கு தானங்கள் ஆகும். இதில் சாத்திரதானம் என்பது கல்வியை பிறருக்கு கற்றுத்தருவது ஆகும். சங்க காலம் முதல் சமண புத்த மதத்தைச் சேர்ந்தவர்கள் அவர்கள் பள்ளி அமைத்து வாழ்ந்த இடத்திலேயே மாணவர்களுக்கு கல்வி கற்றுக் கொடுக்கும் சேவையையும் செய்து வந்துள்ளார்கள். அதனால்தான் தற்போதும் கல்வி நிலையங்கள் பள்ளி என அழைக்கப்படுகின்றன.
புல் என்ற சொல்லுக்கு அற்பம், அனுடநாள், இழிவு, கல்வி, பனை, பலி, புல்லு, புல்லென்னேவல், புன்மை, புல்லரிசி, தென்னை, புதர், மருந்துச்செடி, புணர்ச்சி என பொருள் கூறுகிறது கழகத் தமிழ் அகராதி.
புல்லன் என்பது கல்வியில் சிறந்தவர்களையும்,  பள்ளி அமைத்து கல்விசேவை செய்து வந்த சமணர்களையும்  குறிப்பிடும் சொல்லாக இருந்துள்ளது.  நக்கன் புல்லன் என்ற பெயரில் சமண துறவிகள் இருந்துள்ளனர்.
அதேபோல் கற்றோர்க்கும் மற்றோர்க்கும் எளிதிற் பொருள் புலப்படுமாறு தெரிந்த சொற்களால் இயற்றப்படும் செய்யுளில் புலன் என்னும் அழகு செறிந்ததென்பர் அறிஞர். இதை தொல்காப்பியர் கீழ்க்கண்டவாறு கூறுகிறார்,
“சேரி மொழியால் செவ்விதின் கிளந்து
தேர்தல் வேண்டாது குறித்தது தோன்றின்
புலன் என மொழிப புலன் உணர்ந்தோரே”
தொல்காப்பியம், செய்யுளியல் 233
அவ்வாறு கற்றோர்க்கும் மற்றோர்க்கும் எளிதில் பொருள் புரியுமாறு தெரிந்த சொற்களால் செய்யுள் இயற்றும் புலவர்களுக்கும், எளிதில் பொருள் புரியுமாறு பிறருக்கு கற்பிக்கும் ஆசிரியர்களுக்கும், தாம் அறிந்ததை பிறருக்கு தெளிவாக உரைக்கும்  புலன் உணர்ந்த அறிஞர்களுக்கும்  புல்லன் என பெயர் ஏற்பட்டு இருந்திருக்கலாம். சங்ககால புலவர்களில் நால்வர்களும், பதினெண்கீழ்க்கணக்கு நூல்களில் ஒன்றான  கைந்நிலையின் ஆசிரியர் ஒருவரும் புல்லன் என பெயர் பெற்று இருந்துள்ளனர்.
மதுரைக் கொல்லன் புல்லன் என்பவர் சங்ககாலப் புலவர்களில் ஒருவர். குறுந்தொகையின் 373 ஆவது பாடல் இவர் இயற்றியது. அகநானூறில் 43 வது பாடலையும், நற்றிணையில் 159 ஆம் பாடலையும் பாடியவர்     கருவூர்க் கண்ணம் புல்லன் என்பவர். இவரது ஊர் கருவூர். புல்லன் இவருடைய இயற்பெயர். இவர் நெய்தல் திணையும் பாலைத்திணையும் பாடியுள்ளார். நற்றிணையில் 333 ஆம் பாடலைப் பாடியவர் கள்ளிக்குடி பூதம் புல்லனார் இவரது இயற்பெயர் புல்லன். இவர் ஊர் கள்ளிக்குடி. இவர் பாலைத்திணையை பாடியுள்ளார். குறுந்தொகையின்  190ஆவது பாடலைப் பாடியவர் பூதம்புல்லனார் என்பவர்.  இவர் முல்லைத் திணையைப் பாடியுள்ளார்.
பதினெண்கீழ்க்கணக்கு நூல்களில் ஒன்றான  கைந்நிலையின் ஆசிரியர் பெயர் புல்லாங்காடனார். இவர் (திருப்)புல்லாணியைச் சேர்ந்தவர் என்பார் இராகவையங்கார்.மேலும் சைவ சமயத்தின் அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவர் கணம்புல்ல நாயனார். அவர் கணிதத்தில் கணிப்பதில் வல்லவர் என்பதால் இப்பெயர் அவருக்கு ஏற்பட்டிருக்கும்.
புல், புல்லன் என்ற பெயரில் இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள ஊர்களான (திருப்)புல்லாணி, புல்லூர், புல்லக்கடம்பன், புல்லங்குடி, புல்லமடை, புல்லந்தை, புல்லுகுடி, புல்லவயல் என பல ஊர்கள் சமணத் தொடர்புடையனவாக விளங்குகின்றன.
திண்டுக்கல் மாவட்டம்  பெரும்புல்லி என்னும் ஊரில் உள்ள கி.பி.9ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த கல்வெட்டில், (E.I. XXXII No. 31) இரண்டாம் வரகுண பாண்டியன் காலத்தில் மதுரையை கைப்பற்றிய சிங்களவரை விரட்டி மதுரையை மீட்க  நடந்த போரில்  பள்ளி வேளான் நக்கன் புல்லன் என்பவன் வரகுணனுக்கு உதவியாக இருந்தது குறிக்கப்படுகிறது. இவ்வூர் பெயரிலும் அந்த அலுவலர் பெயரிலும் புல் என்ற சொல் காணப்படுகிறது. இவர் சமண சமயத்தைச் சார்ந்தவராக இருக்கவேண்டும்.
எனவே புல், புல்லன் ஆகிய  சொற்கள் பத்தாம் நூற்றாண்டுக்குப் பின்பே அறிவினன், இழிந்தவன், ஒழுக்கமில்லாதவன்  என்ற பொருளில் அது அறிவிலிகளை குறிக்கும் சொல்லாக சைவம் வலுப்பெற்ற காலத்தில்  மாற்றப்பட்டிருக்கலாம்.
சமணர்கள் மற்றும் அவர்களை ஆதரித்தவர்களை இழிவு படுத்தும் நோக்கில் அவர்கள் குடியிருந்த ஊர்ப் பெயர்களை எல்லாம் இழிவு தரும் பொருளில் மாற்றி இருக்கிறார்கள். எடுத்துக்காட்டாக புல்லங்குடி, சீத்தை ஆகிய ஊர்கள்.
சீத்தை எனும் சொல் தமிழில் இருந்து சென்று  சிங்கள மொழியில் சீத்தய என  வழங்கப்படுகிறது. இது வணிகம் சார்ந்த சொல்லாக சிங்களத்தில் பயன்படுத்தப்படுகிறது. உத்தரகோசமங்கை அருகே கீழச்சீத்தையில் சமண தீர்த்தங்கரர் சிலை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அது சமணர்கள் வாழ்ந்த பகுதி. சங்ககாலம் முதல் இவ்வூர் ரோமானியர்களுடனும், பின்பு சீனர்களுடனும் வணிகத் தொடர்பில் இருந்தது  என சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
ஆனால் கழகத் தமிழ் அகராதியில் சீத்தை என்ற சொல்லுக்கு கீழ்மக்கள், பீழை, குணமின்மை, கைவிடப்பட்டவன் எனப் பொருள் உள்ளது.
அதேபோன்று புல்லங்குடி என்பதை புல்லன்+குடி என பிரித்தால் புல்லன் என்பதன் பொருள் கீழ்மகன், சிறியவன், அறிவீனன் என உள்ளது. இவ்வூரில் சமண பள்ளி இருந்து செயல்பட்டுள்ளது. இவ்வூரில் சமணர்கள் வாழ்ந்ததற்கான தடயங்கள் சமீபத்தில் கண்டறியப்பட்டுள்ளது.
இதன்மூலம் சமண மதத்தை அழிக்க நினைத்தவர்கள் சமணர்களால் புகழ் பெற்று விளங்கிய ஊர்களின் பெயர்களைக் கூட விட்டுவைக்கவில்லை என்பது வேதனையான உண்மை.

3 comments:

  1. தமிழிலும் தமிழர் வாழ்விலும் சமணத்தின் பங்கை பெரும்பாலானோர் குறைத்தே மதிப்பிடுகின்றனர். வெளியிலிருந்து வந்த சமயம் என்பதாலும் வைதீக சமயங்களை சார்ந்திருப்பதாலும் சமண காழ்ப்புணர்வு இன்றும் நீடிக்கின்றது. தமிழுக்கு சமணம் ஆற்றிய செய்நன்றியை என்றும் மறக்கக் கூடாது.
    தமிழின் இனிமையை தனியாய் உணர்ந்தால் சமணம் தவிர்க்க இயலாதது.
    திருப்புல்லாணி பெயர் விளக்கம் தங்களால் அறியப்பெற்றேன்.

    ReplyDelete
  2. புல்லன் விளக்கம் ஏற்புடையதாக உள்ளது.சார்ந்திருத்தல் தழுவுதல் எனும் பொருளில் கற்றோரைச்சேர்தல் உயர்வு என்பதால் மக்கள் கற்றுக் கொள்ளும் பொருட்டு தங்கி வாழ்ந்த ஊரைக்குறித்தது .தற்சமயம் பொருள் மாறி விட்டது. கழகம் என்பது முன்பு சூதாடி பொருள் சேர்க்குமிடம் ;இன்று கட்சிகளின் பெயர்.ஆனாலும் பொருள் சேர்க்க கட்சி பயன்படுவதால் பொருத்தமாகவே உள்ளது. நன்றி.

    ReplyDelete
  3. வெகு சிறப்பு // நீவீர் புல்லன்

    ReplyDelete