Pages

Monday 4 July 2016

என்று காண்பேன் இவர் போல் ஒருவரை!!!




தமிழ்நாடு தொல்லியல் கழக ஆயுள்கால உறுப்பினரும், இராமநாதபுரம் மாவட்ட தலைமை அரசு மருத்துவமனையின் குழந்தைகள் பிரிவு தலைமை மருத்துவருமான டாக்டர் க. இராஜமோகன் அவர்கள் 26.03.2016 அன்று சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே நடந்த சாலை விபத்தில் காலமானார். இவர் 1997 இல் தனது மருத்துவப்பணியை அழகன்குளம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் தொடங்கினார். அச்சமயம் அங்கு நடந்த அகழாய்வை பலமுறை நேரில் பார்த்து தொல்லியலில் தனக்கு இருந்த ஆர்வத்தை அதிகமாக்கிக் கொண்டார். மருத்துவராகவும் திறம்படச் செயல்பட்ட அவர், இந்தியா முழுவதும் உள்ள வரலாற்றுத் தலங்கள் பலவற்றை தனது குடும்பத்தாருடன் நேரில் கண்டுவந்தவர். 2015 இல் அழகன்குளத்தில் நடந்த அகழாய்வையும் தன் மகனுடன் நேரில் பார்வையிட்டு அங்கு கிடைத்த தொல்பொருள்கள் பற்றி அறிந்து கொண்டார். அவருடைய மனைவியும் ஒரு மருத்துவர்தான். மதுரையில் மருத்துவத்தில் மேற்படிப்பு படித்துவரும் அவருடைய மனைவியை பார்க்க வாராவாரம் மதுரை செல்லும் போதெல்லாம் கீழடியில் நடைபெற்று வரும் அகழாய்வை காண்பதற்கு செல்வது அவர் வழக்கம். 26.03.2016 அன்றும் காலை 8 மணிக்கு இராமநாதபுரத்தில் இருந்து கீழடிக்கு சென்றுவிட்டு மனைவி மகனுடன் இராமநாதபுரம் திரும்பிய போது இரு கார்கள் நேருக்கு நேர் மோதியதில் சம்பவ இடத்திலிலேயே பலியானார்.
அவர் இறந்த நாள் அன்று தனது கடைசி நிமிடங்களை கீழடியில் நடந்துவரும் அகழாய்வை தெரிந்துகொள்வதில் தான் கழித்துள்ளார். 18.04.1973 அன்று உலக மரபு நாள் அன்று பிறந்ததாலோ என்னவோ இயற்கையாகவே அவருக்கு மரபு சார்ந்த விசயங்களில் மிகுந்த ஆர்வம் இருந்தது. அனைவரிடமும் எளிமையாகப் பழகக் கூடியவர். இராமநாதபுரம் மாவட்ட தொல்லியல் மற்றும் வரலாற்று மையம் தொடங்கியதில் முக்கியப் பங்கு வகித்தவர். நமது மரபு சார்ந்த விசயங்களை இன்றைய இளைஞர்களிடம் கொண்டு செல்லவேண்டும் என்பதில் மிகுந்த அக்கறை கொண்டிருந்தார்.
இராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் உள்ள தொல்லியல் தடயங்களை வெளிக்கொணர மிகுந்த முனைப்புடன் செயல்பட்டவர். உத்தரகோசமங்கை அருகே கீழச்சீத்தையில் திருப்புல்லாணி பள்ளி ஆசிரியர் இராஜகுரு மற்றும் மாணவர்களுடன் இணைந்து தொடர்ந்து இரு நாட்கள் களமேற்பரப்பாய்வு நடத்தி ரோமானிய, சீன பானை ஓடுகள் மற்றும் பழம்பொருள்கள் ஆகியவற்றை கண்டெடுத்து சங்ககாலம் முதல் அவ்வூர் வெளிநாடுகளுடன் கொண்டிருந்த வணிகத்தொடர்பை வெளிக்கொண்டுவந்தார்.
உங்களை நினைக்கையிலே கண்ணீர் தான் பெருகுது வார்த்தை வரவில்லை நினைக்காமல் இருக்கவும் முடியவில்லை. நீங்கள் இல்லாமல் தொல்லியல் மற்றும் வரலாற்று பாதுகாப்பு மையம் இல்லை. நீங்கள் எங்களுடனே இருப்பதாகவே நாங்கள் இருக்கிறோம். 
                                                    - வே.இராஜகுரு

No comments:

Post a Comment