தினமலரில்
சென்னை: சிந்துசமவெளி நாகரிகம், திராவிடர்களின் நாகரிகம் என்பதை, ரிக் வேதத்தின் வழியாக, பிரபல கல்வெட்டு ஆய்வாளர் ஐராவதம் மகாதேவன் விளக்கினார்.
ஒன்றுக்கொன்று...
சென்னை, தரமணி ரோஜா முத்தையா
ஆராய்ச்சி மையத்தில், சிந்துசமவெளி குறியீடுகளை விளக்கும், டிராவிடியன் ப்ரூப் ஆப் தி இண்டஸ்
ஸ்க்ரிப்ட் வையா தி ரிக் வேதா என்ற
புத்தகத்தின் வழியாக, ஐராவதம் மகாதேவன்
அளித்த விளக்கம்: சிந்துசமவெளி
முத்திரைகளை தொடர்ந்து ஆராய்ந்து, அவற்றை அடையாளம்
கண்டால், ஒன்றுக்கொன்று
தொடர்புடைய, திராவிட மொழியின்
அர்த்தங்கள் கொண்டதாக உள்ளன என்பதை அறிய
முடிகிறது.
அவை, தொல் திராவிட
வடிவங்களே என்பதும் உறுதியாகிறது. சிந்து சமவெளி முத்திரைகளை வாசிப்பதன் மூலம், சிந்துசமவெளி மரபுகள், இரண்டு நீரோடைகளாக பிரிந்துள்ளதாக சான்றுகள்
அறிவிக்கின்றன. அவை, முந்தைய திராவிட
மரபின் வேர்கள், பண்டைய தமிழகத்திற்குள்ளும், சிந்து சமவெளியிலும் இருப்பதை, சிந்துவெளி முத்திரைகள்
உறுதிப்படுத்துகின்றன.
பாண்டியர்களின் மூதாதையர்கள், சிந்து
சமவெளியில் வணிகத்தில் ஈடுபட்டவர்களாக
இருந்திருக்கலாம். அவர்கள், தெற்கு நோக்கி
நகர்ந்து, திராவிட மொழி
பேசியிருக்கலாம். குறிப்பாக, பண்டை தமிழ்
பேசியவர்களாக இருந்திருக்கலாம்.
தொடர்பு அதிகம்
முந்தைய இந்திய - ஆரிய பண்பாட்டுக்குள் உள்ள (ரிக் வேதம்)
வார்த்தைகள், சிந்துவெளியில்
இருந்து, கடன் மொழியாக
நுழைந்திருக்கின்றன. ரிக் வேதத்தில்
வரும்
பூசன் என்ற கடவுளின் பெயர், சிந்துவெளி மக்களிடம்
இருந்து எடுக்கப்பட்டதாக அறிய
முடிகிறது. சிந்துசமவெளி நாகரிகம், முன் வேத பண்பாட்டை விட, காலத்தால் மிக முந்தையது என்பது, இதனால் விளங்குகிறது.
சிந்துசமவெளி குறியீடுகளுக்கும், பண்டை
தமிழ் வார்த்தைகளுக்குமான தொடர்பு அதிகம்
இருப்பதை, சங்க கால தமிழ்
சொற்கள் மூலமாக அறியலாம். சிந்துவெளி
குறியீடுகளில், மாற்றுதல், பெறுதல், சாலைகள்
சந்திக்கும் தெருக்கள், வணிகன் உள்ளிட்ட குறிகளுக்கு இணையான
வார்த்தைகள், தொல்தமிழில் உள்ளன. எனவே, சிந்துசமவெளி நாகரிகம், திராவிடர்களின் நாகரிகம் என்பதை அறிய முடிகிறது. இவ்வாறு அவர் விளக்கம்
அளித்தார்.
தினமணியில்
ரிக் வேதத்தில் பல்வேறு திராவிடச் சான்றுகள் உள்ளதாக "தினமணி' முன்னாள் ஆசிரியரும், கல்வெட்டியல் ஆய்வாளருமான ஐராவதம் மகாதேவன் கூறினார்.
சிந்துவெளி நாகரிகம், எழுத்துகள் தொடர்பாக 50 ஆண்டுகளாக ஐராவதம் மகாதேவன் ஆய்வுப் பணியில்
ஈடுபட்டுள்ளார். தரமணியில் உள்ள ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகத்தில் தன் ஆய்வுக்
கட்டுரையை வெள்ளிக்கிழமை அவர் வெளியிட்டு பேசியது:
""ரிக் வேதத்தில்
காணப்படும் திராவிடச் சான்றுகள் தொடர்பாக மேற்கொண்ட ஆய்வில் மூன்று விஷயங்கள்
உறுதியாகத் தெரிய வருகின்றன.
சிந்துவெளி நாகரிகத்தின் மொழி, திராவிட
மொழியின் முற்கால வடிவம் ஆகும்.
சிந்துவெளி நாகரிக மக்கள் தென்னகம் நோக்கி இடம்பெயர்ந்ததால் தென்னிந்தியாவில் அவர்களின் குடியேற்றம்
நடந்துள்ளது. இதன் காரணமாக, சிந்து திராவிடத் தாக்கம் தென்னக திராவிட
மொழிகளில் காணப்படுகிறது.
இதற்குச் சான்று பகரும் வகையில், சங்க
இலக்கியப் பாடல்களில் பல்வேறு சொற்கள் உள்ளன.
அவற்றுள் முக்கியமாக பாண்டிய குடிபெயர்களாகிய மாறன், செழியன், வழுதி, பாண்டியன்
என்ற சொற்களின் மூல வடிவங்கள் சிந்துவெளி இலச்சினைகளில்
ஒருங்கிணைந்த சொல் தொடராக இடம்பெற்றுள்ளன. (இதை படங்கள் மூலம் ஐராவதம் மகாதேவன் விளக்கிக்
காட்டினார்.)
ஆரிய மக்களும், திராவிட மக்களும்
கலந்து இந்திய சமுதாயம் தோன்றிய பின்னரே ரிக் வேதம்
இயற்றப்பட்டது எனலாம். ரிக் வேதத்தில் திராவிடச் சான்றுகள் பல உள்ளன. சிந்துவெளி
நாகரிகத்தின் பெயர்களும், பட்டங்களும் ரிக் வேதத்தில் மொழிபெயர்ப்புகளாகக்
காணப்படுகின்றன.
அதாவது, சிந்துவெளி
நகரங்களில் வாழ்ந்த வணிகக் குழுவினரின் தலைவன் பிற்காலத்தில் வேளாண்மை, மாடு மேய்த்தல் போன்ற தொழில்களின் அதி
தேவதையாக பூஷண் என்ற பெயருடன்
உருவாகியது ரிக் வேதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்குச் சான்றாக பல தொன்மைக் கதைகளும்
உள்ளன'' என்றார் ஐராவதம்
மகாதேவன்.
இந்த நிகழ்ச்சியில் அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் வா.செ.குழந்தைசாமி, எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன், சூழலியல் ஆய்வாளர் தியோடர் பாஸ்கரன், கணையாழி ஆசிரியர் ம.ராஜேந்திரன் உள்பட
ஏராளமானோர் நிகழ்ச்சியில்
பங்கேற்றனர்.
No comments:
Post a Comment