Pages

Wednesday 12 November 2014

வரலாறு வாழும் தமிழகம் - தினமலர் - என் பார்வை

இந்தியர்களுக்கு வரலாற்று உணர்வு இல்லை' என்று மேனாட்டு அறிஞர்கள் ஒரு சிலர் சொல்லிச் சென்றுள்ளனர். அது உண்மை தான். ஏனெனில் எத்தனையோ வரலாற்று சின்னங்களை வடித்து வைத்த நம் கலை வல்லுனர்கள் அவற்றை உருவாக்கிய தொழில் நுட்பத்தை வருங்கால சந்ததியினர் அறியும் வகையில் எவ்விதத்திலும் பதிவு செய்ய தவறிவிட்டனர். அதனால் தான் விண்முட்டும் விமானம் கொண்ட தஞ்சை பெரிய கோயில் அமைப்பின் நுட்பம் நமக்கு விளங்கவில்லை. அக்கோயிலில் பொறித்து வைக்கப்பட்டுள்ள கல்வெட்டுகள் எத்தனையோ வரலாற்று செய்திகளை, சமூக பிரச்னைகளுக்கான தீர்வுகளை நமக்கு சொல்லாமல் சொல்லுகின்றன. நமது மக்கள் மெய்க்கீர்த்தி என்ற பெயரிலே மன்னர்களின் வரலாற்றை ஒரு குளிகையில் (மாத்திரையில்) அடைத்தது போல் எழுதி வைத்திந்தார்கள். அதனை நாமும் அறிந்திருக்கவில்லை. அயலவருக்கும் அறிவிக்கதெரியவில்லை. எனவே தான் அவர்கள் நம்மை பார்த்து வரலாற்றுணர்வு அற்றவர்கள் என்று வக்கனை பேசுகின்றனர்.தமிழ் வளர்த்த மதுரையை சுற்றிதான் எத்தனை வரலாற்று சின்னங்கள். ஆதித்தமிழன் பேசிய தமிழ் மொழிக்கு எழுத்து வடிவம் கொடுத்தவர்கள் மதுரை மக்களே என்பதைத்தான் மாங்குளம், அரிட்டாபட்டி, ஆனைமலை, அழகர்கோயில், திருவாதவூர் மலைகள் சொல்லிக் கொண்டிருக்கின்றன.கோயில்களே பள்ளிகள் : நமது நாட்டில் ஊரெங்கும் கோயில்கள், அவையெல்லாம் ஏதோ நம்மக்களை மூடர்களாக்கும் மூலதனங்கள் என்று சிலர் எண்ணிக் கொண்டுள்ளனர். இல்லை. அவையெல்லாம் நமது ஆண்ட பரம்பரையின் அறிவுத்தேடல்கள். கோயில்களே ஒரு காலத்தில் நமது பள்ளிகள். நீதிமன்றங்கள், வங்கிகள், வேலைவாய்ப்பு மையங்கள், ஓதுவார் சாலை என்னும் மருத்துவமனைகள், ஆதரவற்றோரை அரவணைத்த ஆஸ்ரமங்கள், அனைவருக்கும் வேண்டியவற்றை செய்த அரசு அலுவலகங்கள், காவல் நிலையங்கள், கலைக் கருவூலங்கள், அருங்காட்சியகங்கள். ஒன்றிலே எல்லாமாக செய்யப்பட்ட கோயில்கள் என்னும் பாரம்பரிய சின்னங்கள் தான் நமது வலிமை. நமது வரலாறு, நமது வாழ்வு.உன்னத கலைப்படைப்பு : 'தென்னக எல்லோரா' என்னும் வகையில் கழுகுமலையில் கலைக்கோயில் ஒன்று கண்டான் பாண்டிய பெருவேந்தன். வடக்கே அஜந்தா என்றால், தெற்கே ஒரு சித்தன்ன வாசல். பனைமலை என ஒன்றுக்கு இரண்டாக ஓவியக்கலைக்கு ஒப்பற்ற சான்றுகள். நுண்கலைகளின் நேரிய வளர்ச்சிக்கு சான்றாக ஆனைமலை, அரிட்டாபட்டி, கீழவளவு ஓவியங்கள். அதற்கும் மேலாக 4,000 வருட பழமைவாய்ந்த ஓவியங்களுக்கும் பஞ்சமில்லை. செந்தவரை, கீழ்வாலை, உடையாள் நத்தம், மல்லப்பாடி, சிறுமலை, கிடாரிப்பட்டி, திருமலை, கருங்காலக்குடி என எங்கெங்கு காணினும் நம் பழங்குடி மக்களின் கலைப்படைப்புகள் தான்.வாழும் வரலாறுகள் : நீதிபதிகளுக்கு, வக்கீல்களுக்கு என்னென்ன தகுதிகள் என்பதை வரையறுத்திச் சொல்லும் மானூர் (நெல்லை) கல்வெட்டை சுப்ரீம் கோர்ட்டில் வைத்து போற்றுகின்றனர். ஆயிரத்து இருநூறு ஆண்டுகளுக்கு முன்பே தமிழன் வரையறுத்த சட்டமும் நீதியும் இது. ஒரு கோயில் இருந்தால் அது ஊர். நான்கு கோயில்கள் இருந்தால் அது நகரம். பல கோயில்கள் இருந்தால் மாநகரம். காஞ்சியே 'தமிழ்நாட்டின் முதல் மாநகரம்' என கல்வெட்டுகள் சொல்கின்றன. நாடெல்லாம் பொள்ளலாகச் சிலைவடித்த காலத்தில் தமிழகத்தில் மட்டும் உள்ளீடு முழுவதும் செம்பொன்னால் சிலைவடித்தவர்கள் தமிழர்கள். ஆடவல்லான், அர்த்தநாரீசுவரர், ரிசபாந்தியர், கல்யாணசுந்தரர் என எத்தனை உன்னதமான கலை வடிவங்கள் நம் கோயில்களில் உள்ளன. கொடிய மனம்கொண்ட சிலர் இவற்றை கோடிகளுக்கு விலைபேசி அயலவருக்கு விற்பதும் பின் பெரும் பாடுபட்டு நாம் மீட்பதும் செய்திகள்.

மண்ணை வெட்டினால் வரலாறு. ஆற்றை தோண்டினால் காசுகள், கல்லை தட்டினால் இசை, என்று எங்கெங்கு காணினும் வரலாறாகவே வாழ்கிறது தமிழகம். இவற்றையெல்லாம் இனிவரும் தலைமுறை செய்ய முடியுமா? செய்யத்தயாராக இருக்கிறோம். எனவே தான் இருப்பதையேனும் காக்க வேண்டிய கட்டாயக் கடமையில் நாம் இருக்கிறோம்.பாதுகாக்கும் கடமை : தொல்லியல் மரபுச் சின்னங்களை பாதுகாக்க பல சட்டங்கள் உள்ளன. 300 மீ., வரை ஆக்கிரமிப்புகள் கூடாது. சட்டங்கள் வலுவிழந்து வேடிக்கை பார்க்கும் நிலைதான் உள்ளது. ஒரு கூட்டம் பாரம்பரிய சின்னங்களை பங்குபோட துடிக்கின்றது.

இதற்கு என்ன தான் வழி. மக்களின் மனமாற்றம் விழிப்புணர்வு, நாமிருக்கும் நாடு நமதே என்ற எண்ணம், நமது வரலாற்று சின்னங்களை நமது தந்தையர் வாழ்ந்த வீடுகளாக, நமை ஈன்ற தாயார் வாழ்ந்த கோயில்களாக கருத வேண்டும். கற்பனையாக எழுதப்பட்டவையல்ல நமது வரலாறுகள். அவற்றிற்கெல்லாம் அடிப்படை ஆதாரங்கள் ஊர்களிலே உள்ளன என்பதை நாம் உணர வேண்டும். எதிர்கால சந்ததியினருக்கு உணர்த்த வேண்டும்.-சொ.சாந்தலிங்கம்

தொல்லியல் அறிஞர்,

மதுரை. 98946 87358

  

No comments:

Post a Comment