மன்றத்தினர் |
கன்னியாகுமரி
மாவட்டத்தில் குழித்துறைக்கு வடகிழக்கில் நான்கு கீ.மீ தொலைவில் அமைந்துள்ளது
சிதறால் கிராமம். திருச்சாரணத்துமலை என்னும் பாறைக் குன்றில் அமைந்துள்ளது இவ்வூர்.
ஒரு பாறையின் மீது தொங்கும் நிலையில் உள்ள மற்றொரு பாறை அமைப்பில் இயற்கையாக
அமைந்த குகைத் தளத்தில் பகவதி கோயில் அமைந்துள்ளது. குகை மேற்கு பார்த்து உள்ளது.
இயற்கையான குகையில் உள்ள தீர்த்தங்கரர்கள் மற்றும் இயக்கியர் சிற்பங்கள் இப்பகுதியின்
முக்கிய சமணத்தலமாக இதைக் கருத இடமளிக்கின்றன. இச்சிற்பத் தொகுதிகளில் ஐந்து தலை
நாகம் காக்கும் பார்சுவநாதர் மற்றும் பத்மாவதி இயக்கியின் உருவங்கள் கருணை
பொழியும் வகையில் வடிக்கப்பட்டுள்ளன.
மற்ற சிறு உருவங்கள் அர்த்த பரியங்க ஆசனத்தில் அமர்ந்து முக்குடைகள்
தலைக்கு மேல் விளங்கும் வகையில் உள்ளவை. மகாவீரர் உருவம் முக்குடைகள் அலங்கரிக்க,
சைத்யமரத்துடன் (பிண்டி) இரண்டு உதவியர் சூழக் காணப்படுகிறது. அம்பிகா இயக்கி
உருவம் இரண்டு குழந்தைகளுடன் யானை முத்திரை அருகில் இருக்க, திரிபங்க வளைவுகளுடன்
மிக எழிலாகவும் நேர்த்தியாகவும் வடிக்கப்பட்டுள்ளது. அனைத்து முக்கியச் சிற்பங்களும்
பறக்கும் வித்யாதாரர் மற்றும் அடியவர் உருவங்களுடன் காணப்படுகின்றன. ஒவ்வொரு
உருவத்தின் கீழும் அதை செய்தளித்தவர்களின் பெயர், ஊர் பற்றிய விபரங்கள்
வட்டெழுத்தில் வெட்டப்பட்டுள்ளன. இங்கு கி.பி.13ஆம் நூற்றாண்டு வரை சமண சமயம் செழிப்புடன் இருந்தது என்பதற்கு இக்கல்வெட்டுகள்
சான்றாக அமைகின்றன.
பகவதி
கோயில் மேற்கு நோக்கி அமைந்துள்ளது. பிற்காலத்தில் இக்குகை ஒரு முன் மண்டபம், கூடம்,
பலிபீடம், மடைப்பள்ளி ஆகிய கட்டுமானங்களுடன் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. இக்கோயில்
மூன்று அறைகளாகப் பிரிக்கப்பட்டு நடுவில் தீர்த்தங்கரர் சிற்பமும் வலப்பக்கம் தேவி,
இடப்பக்கம் பார்சுவநாதர் உருவங்களும் வைக்கப்பட்டுள்ளன. தொடக்கத்தில் விமானம்
ஒன்றும் இக்கோயிலில் இருந்தது. தெற்குப்பகுதியில் உள்ள கல்வெட்டு தமிழ்மொழியில் வட்டெழுத்தில்
எழுதப்பட்டுள்ளது. விக்கிரமாதித்திய வரகுணனின் 28 ஆவது ஆட்சியாண்டினை இக்கல்வெட்டு
குறிக்கிறது. பேராயிற்குடி அரிட்டநேமி பட்டாரகரின் சீடர் குணந்தாங்கி சூரத்திகள்
இப்பகவதி கோயிலுக்குச் சில பொன் அணிகலன்களைக் கொடுத்ததை இக்கல்வெட்டு
தெரிவிக்கிறது. மண்டபத்தில் வெட்டப்பட்டுள்ள கி.பி.1300 ஆம் ஆண்டைச் சேர்ந்த (கொல்லம் ஆண்டு 475) தமிழ்க்கல்வெட்டு
பகவதி கோயிலின் செலவுகளுக்காக கீழ் வேம்பநாட்டு ராஜவல்லிபுரத்தைச் சேர்ந்த
நாராயணன் தமிழ்ப் பல்லவரையன் வழங்கிய கொடையைத் தெரிவிக்கிறது.
நல்ல புகைப்படங்கள்.
ReplyDeleteஇதனைப் பற்றிய செய்திகளும் வெளியிட்டால் நன்றாக இருக்கும்.
சிதறால், சீனத்தலைவர்களுக்கு தெரிந்த (நமக்கு அதிகம் தெரியாத) ஒரு புதையல்.
நன்றி
அ.ஸ்ரீ விஜயன்
நண்பரே சிதறால் பற்றிய செய்திகளை இப்போது வெளியிட்டுள்ளேன். தொடர்ந்து வாசியுங்கள் நிறைய தகவல்கள் தொடர்ந்து வரும். நன்றி
Delete