Pages

Friday, 10 July 2020

இராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே முதுமக்கள் தாழிகள் கண்டுபிடிப்பு - வே.இராஜகுரு


இராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே குண்டாற்றின் கரையில் உள்ள நரசிங்கம்பட்டியில் பெருங்கற்காலத்தைச் சேர்ந்த முதுமக்கள் தாழிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இவை சுமார் 3000 ஆண்டுகள் பழமையானவை.

புதையல் இருப்பதாகக் கருதி இப்பகுதியில் சிலர் தோண்டியுள்ளனர். அதிலே முதுமக்கள் தாழிகள் வெளிப்பட்டுள்ளன. இப்பகுதியில் ஆடு மேய்த்துக் கொண்டிருந்தவர்கள் மூலம் இதை அறிந்த இராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவனத்தின் கமுதி ஒருங்கிணைப்பாளர் மு.வெள்ளைப்பாண்டியன், அமைப்பின் தலைவர் வே.இராஜகுருவிற்கு தகவல் தெரிவித்துள்ளார். அதனடிப்படையில் இன்று அப்பகுதியை ஆய்வு செய்த பின் வே.இராஜகுரு கூறியதாவது,


குண்டாற்றின் கிழக்குக் கரையில் சரளை மண் மற்றும் பாறைகள் உள்ள ஒரு மேட்டுப்பகுதியாக உள்ள இவ்வூரின் ஒரு பகுதியில், புதைந்தநிலையில் இரு முதுமக்கள் தாழிகள் உள்ளன. இதன் மேற்பகுதிகள் உடைந்துள்ளன. இதன் உள்ளே கருப்பு சிவப்பு வண்ணத்திலான மெல்லிய, தடித்த பானைகளின் ஓடுகள், உடைந்த கல் வளையம் ஆகியவை இருந்துள்ளன. ஒரு முதுமக்கள் தாழி 78 செ.மீ. விட்டத்தில் 1 இஞ்ச் தடிமனில் உள்ளது. மற்றொன்று அளவில் இதைவிடச் சிறியதாக உள்ளது. ஒரு தாழியின் உடைந்த ஓட்டின் வெளிப்பகுதியில் தாய் தெய்வம் போன்ற குறியீடு காணப்படுகிறது.  மனிதன் இறந்தபின் மீண்டும் தாயின் கருவறைக்குச் சென்று பிறக்கிறான் என ஆதிமனிதன் நம்பியதால் தாழிகள் நடுவில் அகன்று கருவுற்ற தாயின் வயிறு போன்று அமைக்கப்படுகிறது.


இக்காலத்தின் ஆரம்பத்தில் இறந்தவர்களின் உடலை ஊருக்கு வெளியே உள்ள காடுகளில் போட்டுவிடுவார்கள். அதை நரி, கழுகு போன்றவை இரையாய் கொண்டபின் அங்கு கிடக்கும் எலும்புகளை சேகரித்து, அதோடு அவர்கள் பயன்படுத்திய மண்பாண்டங்களையும்,  தானியங்களையும் உள்ளே வைத்து மூடி V வடிவ குழியில் வைத்து அடக்கம் செய்வார்கள். பிற்காலத்தில் தாழிக்குள் உடலை வைத்து அடக்கம் செய்யும் முறை இருந்துள்ளது.

கி.மு.1000 முதல் கி.மு.300 வரையிலான பெருங்கற்காலத்தைச் சேர்ந்த இடுகாடான இப்பகுதி சுமார் 100 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. ஆனால் இப்பகுதி தவிர மற்ற இடங்களின் மேற்பகுதியில் பானை ஓடுகள் ஏதும் காணப்படவில்லை.

பெருங்கற்காலத்தில் இரும்பு கண்டுபிடிக்கப்பட்டு அதனை பயன்படுத்தி வந்துள்ளனர். இப்பகுதியில் இரும்பின் மூலப்பொருள்கள் மற்றும் நுண்கற்கால செதில்கள் அதிகளவில் காணப்படுகின்றன.

மலைப்பகுதிகளில் காணப்படும் பெருங்கற்படைச் சின்னங்களை விட சமவெளிப் பகுதிகளில் உள்ள முதுமக்கள் தாழிகள் காலத்தால் முந்தியவை என்பதால்   இவை 3000 ஆண்டுகளுக்கும் மேல்  பழமையானவை எனலாம். இவ்வாறு அவர் கூறினார்.

நாளிதழ் செய்திகள்









இராமநாதபுரம் அருகே வைகைக் கரையில் ஒரு சங்ககால நகரம் கண்டுபிடிப்பு - வே.இராஜகுரு


இராமநாதபுரம் அருகே சோழந்தூரில் வைகையின் கிளையாறான நாயாற்றின் கரையில் சிதறிக் கிடக்கும் கருப்பு சிவப்பு பானை ஓடுகள் மூலம் புதைந்த நிலையில் ஒரு சங்க கால நகரம் இருந்த தடயத்தை இராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவனத்தினர் கண்டுபிடித்துள்ளனர்.

சோழந்தூர் பேருந்து நிறுத்தம் அருகில் உள்ள குளங்களை தூர்வாரும் போது உடைந்த ஓடுகள் வெளிப்பட்டுள்ளன. அவ்வூர் அரசு உயர்நிலைப் பள்ளி மாணவர்கள் மூலம் இதை அறிந்த ஆங்கில ஆசிரியர் சுல்தான் ஜமீர் அலி, இராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவனத்தின் தலைவர் வே.இராஜகுருவிடம் தகவல் தெரிவித்துள்ளார். அப்பகுதியில் மேற்பரப்பாய்வு செய்த பின் தொல்லியல் ஆய்வாளர் வே.ராஜகுரு கூறியதாவது,


இவ்வூரின் தெற்கில் இரண்டு பிரிவாக பிரிந்து ஓடும் நாயாறு, வைகையின் ஒரு கிளை ஆறாக இருக்கலாம். இது திருப்பாலைக்குடியில் கடலில் கலக்கிறது. இவ்வாற்றின் கரையில் உள்ள ஓடுகள் சிதறிக் கிடக்கும் மேடான பகுதியை திடல் என அழைக்கிறார்கள்.

குளங்களை தூர்வாரிய போது சுடுமண் உறைகிணற்றின் ஓடுகள், தடித்த, மெல்லிய கருப்பு சிவப்பு பானை ஓடுகள் வெளிவந்துள்ளன. ஒரு சுடுமண் உறையின் உயரம் 16.5 செ.மீ., அகலம் 4.5 செ.மீ. ஆகும். உறைகளை ஒன்றன் மீது ஒன்றாக அடுக்குவது, செருகுவது என உறைகிணறுகளில் இருவகைகள் உண்டு. ஒரே அளவுள்ள இரு வட்டமான சுடுமண் உறைகளை ஒன்றன் மீது ஒன்று அடுக்கிய அமைப்பு கொண்ட கிணறு இங்கு இருந்துள்ளது.


திடல் பகுதியில் கருப்பு சிவப்பு பானை ஓடுகளுடன், வெள்ளைக் களிமண்ணால் உருவாக்கப்படும் சீனநாட்டு போர்சலைன் ஓடுகளும் காணப்படுகின்றன.  இங்கு சுமார் 50 ஏக்கர் பரப்பளவில் பானை ஓடுகள் சிதறிக் கிடக்கின்றன. இங்கிருந்து ½ கி.மீ. தூரத்தில் முதுமக்கள் தாழியின் ஓடுகளும் உள்ளன. இதற்கு இடைப்பட்ட பகுதியில் சன்னாப் மேடு என்னுமிடத்தில் செங்கலால் கட்டப்பட்ட ஒரு கட்டடத்தின் அடிப்பக்கம் மட்டும் உள்ளது. இதில் உள்ள உடைந்த ஒரு செங்கலின் அகலம் 15 செ.மீ. உயரம் 6 செ.மீ. ஆகும். இது அழிந்துபோன ஒரு கோயிலாக இருக்கலாம். இதன் அருகில் கருங்கல்லால் ஆன முழுமையடையாத 5 அடி உயரமுள்ள அமர்ந்த நிலையிலான ஒரு திருமால் சிற்பம் உள்ளது. அதை முனீஸ்வரராக வழிபடுகிறார்கள். அதேபோல் குளத்தின் கிழக்கில் வட்ட வடிவ ஆவுடையாருடன் ஒரு சிவலிங்கமும் உள்ளது.


இவ்வூரில் சங்க கால கருப்பு சிவப்பு பானை ஓடுகளுடன் இடைக்காலத்தைச் சேர்ந்த தடயங்களும் காணப்படுகின்றன. இவ்வூரின் பெயர் சோழர்களை நினைவுபடுத்துகிறது. சங்க காலம் முதல் இடைக்காலம் வரை பல நூற்றாண்டுகளாக இவ்வூர் சிறப்புற்று இருந்துள்ளது. சங்ககாலத்தைச் சேர்ந்த சர்வதேச வணிக நகரமான அழகன்குளத்தின் சமகால ஊரான இவ்வூர் அங்கிருந்து 25 கி.மீ. தூரத்தில் உள்ளது.

ராமநாதபுரத்திலிருந்து சோழந்தூர் செல்லும் வழியில் சக்கரவாளநல்லூர் சங்ககால, இடைக்கால வாழ்விடப் பகுதியாகவும், தேவிபட்டினம், சிங்கனேந்தல், முத்துசாமிபுரம் ஆகிய ஊர்கள் இடைக்கால வாழ்விடப் பகுதிகளாகவும் உள்ளன. மத்திய தொல்லியல் துறை அல்லது தமிழ்நாடு தொல்லியல் துறை இப்பகுதிகளில் அகழாய்வு செய்து இவ்வூரின் வரலாற்று முக்கியத்துவத்தை வெளிக்கொணர வேண்டும் என்றார்.


நாளிதழ் செய்திகள்








ஜெயா டிவி செய்தி 

சிவகங்கை அருகே கோவானூர் ஊருணி படித்துறையில் பாண்டியர் கால கல்வெட்டுகள் கண்டுபிடிப்பு - வே.இராஜகுரு


சிவகங்கை அருகே கோவானூர் ஊருணி படித்துறையில் 800 ஆண்டுகள் பழமையான பாண்டியர்  காலக் கல்வெட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

இராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவனத்தின் தலைவர் வே.இராஜகுரு, தொல்லியல் ஆய்வாளர்கள் கொல்லங்குடி புலவர் காளிராசா, இராமநாதபுரம் மோ.விமல்ராஜ் ஆகியோர் கோவானூர் ஊருணி படித்துறையில் கி.பி.13 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த கல்வெட்டுகளைக் களஆய்வின் போது கண்டுபிடித்துள்ளனர்.

இதுபற்றி கல்வெட்டு ஆய்வாளர் வே.இராஜகுரு கூறியதாவது,

ஊரணி படித்துறை

சிவகங்கையிலிருந்து 10 கி.மீ தூரத்தில் உள்ளது கோவானூர். இவ்வூரின் முகப்பில் ஒரு ஊருணி உள்ளது. இதன் கிழக்குக்கரையில் படித்துறையும் வடக்கில் ஒரு வரத்துக்காலும் உள்ளன. இவை சுமார் 300 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டவை. இதில் பயன்படுத்தப்பட்டுள்ள கற்கள் இடிந்துபோன கோவிலில் இருந்து எடுத்துவரப்பட்ட்தாக உள்ளன. இத்தகைய கற்கள் இவ்வூரின் பல இடங்களிலும் சிதறிக் கிடக்கின்றன.

இதில் வெவ்வேறு தகவல்களைக் கொண்ட பழமையான 6 துண்டுக் கல்வெட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இவை கி.பி.13 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பாண்டியர் காலக் கல்வெட்டுகள். இவற்றின் மூலம் இவ்வூரில் திருவகத்தீஸ்வரமுடையார் என்ற சிவன் கோவில் இருந்துள்ளதை அறியமுடிகிறது.  அழிந்துபோன அந்த சிவன் கோவில் கற்களைப் பயன்படுத்தி படித்துறை கட்டியுள்ளனர்.


கல்வெட்டு செய்தி

கி.பி.1216 முதல் கி.பி.1244 வரை மதுரையை தலைநகராகக் கொண்டு ஆண்ட முதலாம் மாறவர்மன் சுந்தரபாண்டியனின் மெய்க்கீர்த்தி ‘பூமருவிய திருமடந்தையும் புவிமடந்தையும்’ எனத் தொடங்கும். இங்குள்ள ஒரு கல்வெட்டில் அம்மெய்க்கீர்த்தியின் 9 வரிகள் உள்ளன. இதில் தஞ்சையும் உறந்தையும் செந்தழல் கொளுத்தியது, மாளிகையும், மண்டபமும் இடித்தது ஆகிய தகவல்கள் உள்ளன.

இவ்வூர் சிவன் கோயிலுக்கு இறையிலி தேவதானமாக இரு ஊர்கள் வழங்கப்பட்டுள்ளன. இந்த ஊர்களில் ஏற்கனவே வழங்கப்பட்ட ஒரு வேலி, இரு மா அளவுள்ள நிலம் நீக்கி மீதமுள்ள பகுதி தானமாகக் கொடுக்கப்பட்டுள்ளது. பறை வரி, கடமை வரி ஆகிய வரிகள் மற்றும் பாண்டீஸ்வரமுடையார் எனும் கோவிலைச் சேர்ந்த சிவபிராமணர் பற்றியும் கல்வெட்டில் சொல்லப்படுகிறது.

இக்கல்வெட்டுகளில் அரசின் வரிக்கணக்கை நிர்வகிக்கும் மூன்று புரவரி திணைக்கள நாயகம் மற்றும் உழக்குடி முத்தன், தச்சானூருடையான், வீரபஞ்சான், முனையத்தரையன், அழகனான வானவன் விழயராயன், வந்தராயன் ஆகிய அரசு அதிகாரிகளின் பெயர்கள் கூறப்பட்டுள்ளன.


மிழலைக் கூற்றத்து நடுவிற் கூற்று, கீழ்க்கூற்று, மதுரோதய வளநாடு, கீரனூர் நாடு, காஞையிருக்கை ஆகிய நாடுகளும், நல்லூர், மிழலைக் கூற்றத்து தச்சனூர், புல்லூர்க்குடி, மதுரோதய வளநாட்டு புறப்பற்று, காஞையிருக்கை உழக்குடி ஆகிய ஊர்களும் கல்வெட்டில் குறிப்பிடப்பட்டுள்ளன. இவ்வூர் முருகன் கோயிலில் உள்ள ஒரு கல்வெட்டு மூலம் இவ்வூர் கீரனூர் நாட்டில் இருந்தாக அறியமுடிகிறது.

கல்வெட்டில் வேலி, இருமா ஆகிய நில அளவுகளைக் குறிக்க குறியீடுகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. நெடில் எழுத்துகள் பெரும்பாலும் கல்வெட்டில் வருவதில்லை. இதில் ஒரு கல்வெட்டில் நீக்கி நீக்கி என்ற சொல் நெடிலாகவும், மற்றொன்றில் நிக்கி நிக்கி என குறிலாகவும் வருகிறது.


மேலும் இவ்வூர் பொட்டலில் சங்ககாலத்தைச் சேர்ந்த கருப்பு சிவப்பு பானை ஓடுகள் காணப்படுகின்றன. அங்கு கி.பி.11-ம் நூற்றாண்டைச் சேர்ந்த அமர்ந்த நிலையிலான ஒரு திருமால் சிற்பம் உள்ளது. இதை காளி என வழிபடுகிறார்கள். இதன் கீழ்ப் பகுதியில் 200 ஆண்டுகள் பழமையான ஒரு கல்வெட்டு உள்ளது.  இவ்வாறு அவர் கூறினார்.

1926-ல் மத்திய தொல்லியல் துறை இவ்வூர் முருகன் கோயிலில் 7 கல்வெட்டுகளை படி எடுத்துள்ளது. இக்கோயில் சுற்றுச் சுவரின் வெளிப்பகுதியில் ஆவணப்படுத்தப்படாத சில கல்வெட்டுகள் உள்ளன. இதில் சோணாடு கொண்டருளிய மாறவர்மன் முதலாம் சுந்தரபாண்டியனின் ஒரு கல்வெட்டும் உள்ளது. சோழநாட்டை அம்மன்னன் கைப்பற்றிய தகவலை அது சொல்கிறது.

நாளிதழ் செய்திகள்