Pages

Saturday, 18 August 2018

இராமநாதபுரத்தில் 118 ஆண்டு பழமையான கப்பல் போன்ற ஒரு தேவாலயம்

கப்பல் போன்ற தோற்றம்


இராமநாதபுரம் சிங்காரத்தோப்பில் புனித அந்திரேயா பெண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் ஒரு சிறிய தேவாலயம் உள்ளது. இது ஆர்தர் ஹீபர் தாமஸ் என்பவர் இறைப்பணிக்காக இந்தியாவுக்கு கப்பலில் வந்ததன் நினைவாக  கட்டப்பட்டது. கப்பல் போன்ற வடிவில் உள்ள இது வெப்பத்தையும் மழையையும் தாங்கும் விதத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
ஆலய பின்பகுதி

இதுகுறித்து இராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவனத்தின் தலைவரும் தொல்லியல் ஆய்வாளருமான வே.இராஜகுரு கூறியதாவது,

கிறித்துவ மதத்தை உலகெங்கும் பரப்ப கத்தோலிக்க மற்றும் பிராட்டஸ்டன்ட் பிரிவைச் சேர்ந்த பல இறைப்பணி சபைகள் இருந்தன. போர்ச்சுகீசியர், டச்சுக்காரர், ஆங்கிலேயர், டேனியர் காலத்தில் இந்தியாவுக்கு அதிகளவில் வந்த இச்சபையினர்  பல இடங்களில் தேவாலயங்களைக் கட்டியுள்ளனர். இராமநாதபுரம் சிங்காரத்தோப்பில் உள்ள தேவாலயம்,  எஸ்.பி.ஜி. சபையினரால் ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்டது.

ஆர்தர் ஹீபர் தாமஸ்

இங்கிலாந்தில் வாம்ஸ்வொர்த் என்ற இடத்தில் கி.பி.1862 இல் பிறந்த ஆர்தர் ஹீபர் தாமஸ் என்பவர், எஸ்.பி.ஜி. (S.P.G - Society for the Propagation of the Gospel) சபையின் கிறித்துவ மத ஊழியத்திற்காக எஸ்.எஸ்.மனோரா என்ற நீராவிக்கப்பலில் 2.5.1887 அன்று சென்னை வந்தார். சில வாரங்கள் சென்னையில் தங்கியிருந்த பின் அவர் ராமநாதபுரத்திற்கு அனுப்பப்பட்டார். ராமநாதபுரம் சிங்காரத்தோப்பில் தங்கி இருந்து பணிபுரிந்து வந்தார்.
ஆர்தர் ஹீபர் தாமஸ்
 சென்னையில் ரெல்டன் என்பவரிடம் தமிழ் கற்க ஆரம்பித்த அவர் ராமநாதபுரத்திலும் தொடர்ந்து தமிழ் பயின்று வந்தார். அவர் தன் தம்பிக்கு எழுதிய கடிதங்களில் தான் கற்றுக் கொண்ட தமிழ்ச் சொற்களை ஆங்கிலத்தில் எழுதியுள்ளார்.  ராமநாதபுரம் பகுதிகளில் கி.பி.1888 பிப்ரவரியில் 110 முதல் 115 டிகிரி பாரன்ஹீட் வரை வெப்பம் இருந்ததாகவும், அந்தாண்டு டிசம்பரில் புயல் காரணமாக காலரா பரவி பலர் இறந்ததாகவும், சாயல்குடி பகுதிகளில் அதிகளவு மான்களைப் பார்த்ததாகவும் பதிவு செய்திருக்கிறார். 

அப்போதைய ராமநாதபுரம் மன்னர் பாஸ்கரசேதுபதி மற்றும் அவர் சகோதரர் தினகர் சேதுபதி ஆகியோருடன் நல்ல நட்புக் கொண்டிருந்தார். 

இவர் தனது 28 வது வயதில் 2.11.1890 அன்று மலேரியா காய்ச்சலால் ராமநாதபுரத்தில் காலமானார்.  உத்தரகோசமங்கை அருகே வெண்குளத்தில் இவர் பெயரில் ஒரு சர்ச் கட்டப்பட்டுள்ளது. மிகச்சிறந்த மிஷனரி ஊழியர் என இவரை கால்டுவெல் புகழ்ந்துள்ளார்.

கப்பல் போன்ற தேவாலயம்

3 ஆண்டுகள் அர்ப்பணிப்புடன் பணிபுரிந்து மரணமடைந்த  ஆர்தர் ஹீபர் தாமஸ் நினைவாக 500 பவுண்டு செலவில் ராமநாதபுரத்தில் தேவாலயம் கட்ட இங்கிலாந்தில் இருந்த அவர் நண்பர்கள் முடிவு செய்தனர். அவர் இந்தியாவுக்கு கப்பல் பயணம் மேற்கொண்டதன் 12 ஆம் ஆண்டில் இந்த தேவாலயம் உருவாக்கப்பட்டதால் அது ஒரு சிறிய கப்பல் வடிவில் கட்டப்பட்டுள்ளது.  இந்த ஆலயம் 28.03.1900 அன்று வழிபாட்டிற்கு திறக்கப்பட்டது.
1900 இல் திறப்பு விழாவின்போது
 ஆலய அமைப்பு 

          130 டிகிரி பாரன்கீட் வெப்பத்தையும், மழையையும் தாங்கும் விதத்தில்  இது அமைக்கப்பட்டுள்ளது. இதைக் கட்டுவதற்கு, கடல் சிப்பிகளில் இருந்து பெறப்பட்ட சுண்ணாம்பு மற்றும் இப்பகுதியிலேயே தயாரிக்கப்பட்ட செங்கற்கள் ஆகியவை பயன்படுத்தப்பட்டுள்ளன. கல், தேக்குமரம், ஓடுகள் ஆகியவை  அதிக விலை கொடுத்து வெளியில் இருந்து வாங்கப்பட்டன.  
ஆலய தரைதள பணியின்போது

காரை அரைக்கும் செக்குகள் மூலம் சுண்ணாம்பு சாந்து தயாரிக்கப்பட்டுள்ளது. தரையும் சுவரும் சுண்ணாம்புப் பூச்சு பூசப்பட்டு பின் சோப்புக்கற்களைக் கொண்டு  பளிங்கு போல் மெருகேற்றியுள்ளனர். 
சுண்ணாம்பு காரை அரைக்கும் செக்குடன் ஆலய கட்டுமான பணியின்போது

          இதன் வெளிப்புற குவிந்த கூரை அமைப்பும் சுண்ணாம்பு பூச்சும் உள்ளே குளிர்ச்சியாக இருக்கச் செய்கிறது. மேற்கூரையில் உள்ள சன்னல்கள் உள்ளே போதுமான வெளிச்சம் கிடைக்கச் செய்கிறது. பலிபீடத்தின் முன்பகுதியின் மேற்கூரை உயரமாக செவ்வக வடிவில் அமைக்கப்பட்டுள்ளது. 
SS MANORA SHIP in 1883

          முழுவதும் இந்திய பொருள்களைக் கொண்டே இந்த ஆலயம் கட்டப்பட்டுள்ளது. பலிபீடத்தில் உள்ள சிலுவை முதலியன மதுரையில் செய்யப்பட்டுள்ளன. இதன் மணி லண்டனில் இருந்து பெறப்பட்டுள்ளது. இதை போக்சன் என்ற ஆங்கிலேயர் மேற்பார்வையில் உள்ளூர் தொழிலாளர்கள் கட்டியுள்ளனர்.
நூறு ஆண்டுகள் கடந்தும் தாமஸ் பெயரை உச்சரித்துக் கொண்டிருக்கும் இந்த தேவாலயம், பிராட்டஸ்டன்ட் கிறித்துவத்தின் பாரம்பரியம், ஆங்கிலேயர் கால நினைவுகளையும் சுமந்துகொண்டுள்ளது  இவ்வாறு அவர் கூறினார்.

நாளிதழ் செய்திகள்







 epaper links
 

இராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ்.மங்கலம் அருகே வணிகர்களின் பாதுகாப்பு வீரர்கள் உருவாக்கிய பிரம்மதேயம் அறுநூற்று மங்கலம் கல்வெட்டில் தகவல்



இராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ்.மங்கலம் அருகே அறுநூற்று மங்கலம் சிவன்கோவிலில் உள்ள கல்வெட்டுகள் மூலம் வணிகர்களின் பாதுகாப்பு வீரர்களான அறுநூற்றுவர், பிராமணர்களுக்கு பிரம்மதேயமாக ஊர் உருவாக்கியுள்ளதை அறியமுடிகிறது.
இராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவனத்தின் தலைவர் வே.ராஜகுரு, ஒருங்கிணைப்பாளர் மோ.விமல்ராஜ், திருப்புல்லாணி அரசு மேல்நிலைப்பள்ளி தொன்மைப் பாதுகாப்பு மன்றத்தைச் சேர்ந்த பத்தாம் வகுப்பு மாணவிகள் மு.அபிநயா, மு.விசாலி, பா.அபர்ணா ஆகியோர், ஆர்.எஸ்.மங்கலம் அருகே அறுநூற்று மங்கலம் கண்மாய்க் கரையில்  இடிந்த நிலையில் உள்ள சிவன்கோவிலில் பிற்காலப் பாண்டியர் காலக் கல்வெட்டுகளை களஆய்வின் போது கண்டுபிடித்து படி எடுத்தனர்.
இது பற்றி தொல்லியல் ஆய்வாளர் வே.ராஜகுரு கூறியதாவது,
இவை முதலாம் மாறவர்மன் சுந்தரபாண்டியன், முதலாம் சடையவர்மன் வீரபாண்டியன், மூன்றாம் சடையவர்மன் வீரபாண்டியன் ஆகியோர் காலத்தைச் சேர்ந்தவை. கோயில் முன்பு கிடக்கும் கற்கள், தூண்களில் கல்வெட்டுகள் உள்ளன.
வணிகக் குழுவின் இராணுவ அமைப்பு
       இடைக்காலத்தில் பிராமணர்களின் குடியிருப்புகள் ‘மங்கலம்’ என அழைக்கப்பட்டன. அரசர்கள் பிராமணர்களுக்கு நிலதானம் தரும்போது தம் பெயருடன் ‘மங்கலம்’ என்பதையும் இணைத்து ஊர் உருவாக்கி உள்ளனர்.
அதேபோல் வணிகக் குழுக்களின் பாதுகாப்புப் படைவீரர்கள் எனக் கருதப்படும் அறுநூற்றுவர், தங்கள் பெயரில், பிராமணர்களுக்காக ஒரு ஊர் உருவாக்கி, அதை அவர்களுக்கு தானமாகக் கொடுத்துள்ளனர். இதனால் இவ்வூரின் பெயர் அறுநூற்றுமங்கலம் என ஆகியுள்ளது. இவ்வூரின் காவல் பொறுப்பையும் அவர்கள் ஏற்றுள்ளனர். இதே அறுநூற்றுவர் பெயரில் திருவாடானை அருகே அறுநூற்றுவயல் என்ற ஊரும் உள்ளது.
மூன்றாம் சடையவர்மன் வீரபாண்டியன் கல்வெட்டு
கோயில் முன்பாக கிடந்த ஒரு கல்வெட்டில், இராக்ஷஸ ஆண்டு துலா இரவி மாதம் புதன்கிழமையும் ஏகாதசியும் பெற்ற உத்திரத்து நாள் அரும்பூர்க் கூற்றத்து அறுநூற்று மங்கலத்து திருஅகத்தீஸ்வரமுடைய நாயனார்க்கு, பாரூர் எனும் பதினெண்பூமி நல்லூரைச் சேர்ந்த இராக்கதன் பூவண்டான் என்பவர் ராக்காலத்து பூஜைக்கு தேவையான அமுதுபடி, கறியமுது, திருவிளக்கெண்ணெய் பல நிவந்தங்களுக்குரிய செலவுக்கு அறுநூற்று மங்கலத்து பெருங்குளத்து பள்ளமடையில் இருந்து நீர் பாயும் ஒரு ‘மா’ நிலத்தைத் தானமாகக் கொடுத்துள்ளார் என குறிப்பிடப்பட்டுள்ளது. இக்குளமும், பள்ளமடையும் தற்போதும் உள்ளன. கல்வெட்டில் நிலத்தைக் குறிக்கும் ‘ரூ’ எனும் குறியீடு  உள்ளது. துலா இரவி என்பது துலா மாதம் ஆகும். சமஸ்கிருத ஆண்டில் ஐப்பசி மாதத்தைத் துலா மாதம் என்கிறார்கள்.
இக்கல்வெட்டில் மன்னன் பெயர் வீரபாண்டியன் என உள்ளது. இதன் எழுத்தமைதி மற்றும் இதிலுள்ள தமிழ் ஆண்டு கொண்டு, இது கி.பி.1297 முதல் கி.பி.1342 வரை மதுரையை ஆண்ட கடைசி பாண்டிய மன்னனான  மூன்றாம் சடையவர்மன் வீரபாண்டியன் என அறியமுடிகிறது.  இம்மன்னனின் 18 ஆம் ஆட்சியாண்டில் வெளியிடப்பட்ட இக்கல்வெட்டின்  ஆங்கில ஆண்டு கி.பி.1315 ஆகும்.
பதினெண்பூமி என்பது வணிகர் மற்றும் அவர்களின் பாதுகாப்பு வீரர் கொண்ட குழு ஆகும். இவர்களின் குடியிருப்பு பாரூரில் உருவானபின் பதினெண்பூமிநல்லூர் என அவ்வூர் பெயர் மாற்றப்பட்டிருக்கலாம். பாரூர் திருவாடானை அருகில் உள்ளது.
முதலாம் மாறவர்மன் சுந்தரபாண்டியன் கல்வெட்டு
கண்மாய்க்கரையில் நட்டுவைக்கப்பட்டிருந்த ஒரு கல்லில், முதலாம் மாறவர்மன் சுந்தரபாண்டியனின் (கி.பி.1216 முதல் கி.பி.1244 வரை) மூன்று வரி கொண்ட துண்டுக் கல்வெட்டு உள்ளது. இம்மன்னன் சோழநாட்டைக் கைப்பற்றி, பின் அவர்களிடமே வழங்கிய வரலாற்றுச் செய்தி இதில்  உள்ளது.
முதலாம் சடையவர்மன் வீரபாண்டியன் கல்வெட்டு
மற்றொரு கல்வெட்டு கி.பி.1253 முதல் கி.பி.1283 வரை மதுரையை ஆண்ட முதலாம் சடையவர்மன் வீரபாண்டியனின் 13 ஆம் ஆட்சியாண்டில் வெட்டப்பட்டது. இதன் காலம் கி.பி.1266 ஆகும்.

குலமாணிக்கம் சுந்தரபாண்டிய நல்லூர் குணாபதபெருமாள் என்பவர் இக்கோயில் இறைவனுக்கு நிலதானம் வழங்கியுள்ளார். குலமாணிக்கம் என்ற ஊர் பெயர் பிற்காலத்தில் சுந்தரபாண்டிய நல்லூர் என மாற்றப்பட்டுள்ளது. குலமாணிக்கம் இங்கிருந்து 8 கி.மீ. தூரத்தில் உள்ளது. அறுநூற்று மங்கலம், அரும்பொற்கூற்றம் என்ற நாட்டுப் பிரிவில் இருந்துள்ளது. 14ஆம் நூற்றாண்டு கல்வெட்டில் இது அரும்பூர் கூற்றம் என மாறியுள்ளது இவ்வாறு அவர் கூறினார்.

நாளிதழ் செய்திகள்