Pages

Saturday 25 February 2017

மான் குளம்பு போல் இலை, மணி போல் மலர் சங்க இலக்கியங்கள் போற்றும் மூலிகைக்கொடி – அடும்பு - வே.இராஜகுரு




அடும்புக்கொடி
      தாவரவளம் நிறைந்த தமிழ்நாட்டில் எண்ணற்ற மூலிகைத் தாவரங்களும் இயல்பாக வளர்ந்து வருகின்றன. நமது பாரம்பரியமிக்க தாவரங்கள் பற்றிய செய்திகள் சங்க இலக்கியங்களில் அதிகமாக உள்ளன. அத்தகைய பல அரியவகை தாவரங்கள் இராமநாதபுரம் மாவட்டத்தின் பல இடங்களில் இயற்கையாகவே செழித்து வளர்ந்து வருகின்றன.
இம்மாவட்டத்தில் கடலோர, ஆற்றோர பகுதிகளிலும், மணற்பாங்கான இடங்களிலும் அடும்பு எனும் மூலிகைக் கொடி அதிகளவில் காணப்படுகிறது. இது சங்க இலக்கியங்களில் அடம்பு, அடும்பு, அடப்பங்கொடி எனக் குறிப்பிடப்படும் கொடிவகைத் தாவரமாகும். சித்த மருத்துவத்தில் இதை கடலாரை, காட்டாரை  என்கிறார்கள். குறிஞ்சிப்பாட்டில் கபிலர் குறிப்பிடும் 99 மலர்களில் இதுவும் ஒன்று.
இதுபற்றி இராமநாதபுரம் தொல்லியல் மற்றும் வரலாற்றுப் பாதுகாப்பு மையத்தின் தலைவர் வே.இராஜகுரு கூறியதாவது,

அமைப்பு
குதிரையின் கழுத்து மணியைப் போல் உள்ள இக்கொடியின் மலர், செந்நீல நிறமுடையது. இதன் இலை ஆட்டின் குளம்பு போலிருப்பதால் இதை ஆங்கிலத்தில்  Goat’s Foot Creeper என்கிறார்கள். ஆட்டுக்கால் அடும்பு  என்ற பொருளில் Ipomoea pes-caprae என்றும், கவட்டிலை அடும்பு என்ற பொருளில் Ipomoea biloba என்றும் இதன் தாவரவியல் பெயர் அமைந்துள்ளது.

மான் குளம்பு போன்ற இலைகள்
 சங்க இலக்கியங்கள் மானின் குளம்பு போல் பிளவுபட்ட இலைகளுடன் இருப்பதாக இதை வருணிக்கின்றன. இக்கொடி மண் அரிப்பைத் தடுப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. இதன் அடியில் வலிமையான நீண்ட கிழங்கு இருக்கும்.
சங்க இலக்கியங்களில் அடும்பு    
நற்றிணை, குறுந்தொகை, கலித்தொகை, பட்டினப்பாலை, அகநானூறு, குறிஞ்சிப்பாட்டு, ஐங்குறுநூறு, பதிற்றுப்பத்து, பொருநராற்றுப்படை ஆகிய சங்க இலக்கியங்களிலும் சிலப்பதிகாரத்திலும் நெய்தல் திணைக்குரிய கொடியாக அடும்பு குறிக்கப்படுகிறது.
கடலில் நீராடிய பின் அடும்பு, நெய்தல் மலர்கள் கலந்து செய்த  மாலைகளை மகளிர் தங்கள் கூந்தலில் அணியும் வழக்கம் இருந்துள்ளது. தெய்வத்தை வேண்டி நோன்பிருப்பதற்காக நெய்தல் நில மகளிர் கடற்கரையில் படர்ந்துள்ள அடும்புக்கொடிகளைக் கொய்து அழிப்பர். அடும்பின் கொடியில் முட்டையிட்டு கடற்காகம் அடைகாக்கும். வளைந்த காலையுடைய நாரை, அடும்பின் கொடியில் மலர்ந்த அழகிய மலரை சிதைத்து கழியின் அருகில் உள்ள மீனை உண்ணும். 

மணி போன்ற மலர்
 கடலில் எழும் அலை கரையில் ள்ள அடும்புக் கொடியை விரைந்து சேர்வது  போல தலைவியை விரைந்து மணந்து கொள்ள தோழி தலைவனை வேண்டினாள். ஆமை, அடும்புக்கொடி சிதையுமாறு அதை இழுத்து வெண்மையான மணல் மேட்டில் முட்டை இட்டு மறைத்து வைக்கும். உப்பங்கழியில் மீன் பிடித்து உண்ணும் அன்னப்பறவை அடப்பங்கொடி பொருந்திய மணல் மேட்டில் தனது அழகிய சிறகினைக் கோதி உலர்த்தும். மகளிர் அடப்பங்கொடியைப் பறித்து விளையாடுவர்
நெய்தல் நிலத் தலைவனுடைய தேர் ஊர்ந்து செல்லும் போது அழகிய அடும்புக்கொடிகளை அதன் சக்கரம் அறுக்கும். ஆறு கடலில் சேரும் அடைகரையிலும் குளிர்ந்த கானலிலும் அடும்ப மலர்கள் அடர்ந்து பூத்துக் கிடக்கும். இவ்வாறு சங்க இலக்கியங்களிலும் சிலம்பிலும் அடும்பு பற்றிய செய்திகள் காணப்படுகின்றன.
மருத்துவச் சிறப்புகள்   
அடும்பின் வேர், இலை இரண்டும் மருத்துவக் குணமுடையவை. இதன் வேர் சிறுநீர் பெருக்கியாக செயல்பட்டு வயிறு மற்றும் கால்களில் ஏற்படும் வீக்கத்தை குறைக்கும். இதன் இலை மூட்டுவலி, வீக்கம், சர்க்கரை நோய், வயிறு தொடர்பான நோய்களுக்கும் மருந்தாகப் பயன்படுகிறது. 
 அடும்புக்கொடியை இராமநாதபுரம் மாவட்டத்தில் கடலாரை என அழைக்கிறார்கள். இம்மாவட்ட மக்கள் இக்கொடியின் வேர், இலையை மருந்தாக தயாரித்து பயன்படுத்தி வருகிறார்கள்.

நமது கடமை 
    நமக்கான மருந்தாக நாம் குடியிருக்கும் இடங்களின் அருகில் கிடைக்கும் மூலிகைகளையே நம் முன்னோர் அதிகளவில் பயன்படுத்தி வந்ததால் நோயின்றி நீண்ட காலம் வாழ்ந்தனர். அவர்கள் காட்டிய வழியில் பாரம்பரியமான நமது மூலிகைகளை இன்றைய இளைஞர்கள் பயன்படுத்தத் தொடங்கினால் மட்டுமே  அவற்றை அழிவில் இருந்து காக்கமுடியும். சாலை விரிவாக்கம், புதிய குடியிருப்புகள் உருவாகி வருவதன் காரணமாக கவனிப்பாரின்றி அழிந்து வரும் அடும்பு போன்ற மூலிகைத் தாவரங்களை போற்றி பாதுகாக்க வேண்டியது நமது கடமையாக உள்ளது. 
படங்கள்
இராமநாதபுரம் அருகே தேவிபட்டினம் – அழகன்குளம் கடற்கரை சாலையின் ஓரங்களில் காணப்படும் அடும்புக்கொடிகள்

நாளிதழ் செய்தி 

                           தி இந்து  





YOUTUBE VIDEO


2 comments:

  1. அடும்பு கொடி பற்றி அரிய செய்திகள் அறிந்தேன். நாம் போற்றிப்பாதுகாக்கப்படவேண்டியது பற்றி விழிப்புணர்வு தந்தமைக்கு நன்றி.

    ReplyDelete
  2. இதனை எவ்வாறு உபயோகிப்பது என்ற விவரங்களை கொடுக்கவில்லை கொடுத்தால் தான் அதனை உபயோகிக்க முடியும்

    ReplyDelete