Pages

Friday 3 February 2017

கடலுக்கு நன்றி செலுத்தும் மீனவர்களின் பாரம்பரிய பொங்கல் திருநாள் வளமை வழிபாடாகக் கொண்டாடப் படும் சப்தகன்னியர் வழிபாடு – வே.இராஜகுரு


சப்தகன்னியராய் தேர்வு செய்யப்பட்ட சிறுமியர் பொங்கல் வைக்கிறார்கள்
தாய்த்தெய்வ வழிபாடு 

மனித இனம் தோன்றிய காலம் முதல் உலகம் முழுவதும் பல நாடுகளில் பெண்களைத் தெய்வமாக வழிபடும் வழக்கம் இருந்து வருகிறது. வளமை, வலிமையின் அடையாளமாக பெண்களை தமிழர்கள் பழங்காலம் முதல் கருதி வந்தனர். அதனால் அவர்களின் நாட்டார் வழிபாட்டில் முதல் வழிபாட்டுக்குரிய கடவுளாக பெண் விளங்குகிறாள். பழந்தமிழ் இலக்கியங்களில் பெண் தெய்வ வழிபாடுகள் பற்றிய குறிப்புகளும் அதிகம் உள்ளன.
அனைத்து மனித உயிர்களுக்கும் தாயாகவும், என்றும் மாறாத, அழியாத கன்னித் தன்மையுடையவள் என்ற அடிப்படையில் கன்னியாகவும் பெண் தெய்வங்களை வழிபடும் மரபு காணப்படுகிறது. நதிகள், நாடுகள் ஆகியவை பெண்களின் பெயரால் வழங்கப்பட்டு வருவதும் பெண்ணை தெய்வமாக மதிக்கும் மனப்பான்மையின் வெளிப்பாடுதான்.

சப்த கன்னியர் வழிபாடு


வளமை வழிபாடான ஏழு கன்னியர் எனப்படும் சப்த கன்னியர் வழிபாடு, உழவுத்தொழில் செழிக்க, செல்வம் பெருக, குழந்தைகள் நோயின்றி வளர, தொழில் சிறக்க அனைவராலும் வழிபடப்படுகிறது. இவ்வழிபாடு தமிழகம் முழுவதும் அனைத்து ஊர்களிலும் காணப்படுகிறது.
      இராமநாதபுரம் அருகே மோர்ப்பண்ணை என்ற ஊரில் ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் நாளில் ஏழு சிறுமியரைக் கொண்டு பொங்கல் வைக்கச் செய்து, தங்களுக்கு மீன்வளம் தரும்  கங்காதேவியாக கடலை வழிபடுகின்றனர். இதுபற்றிய விவரம் வருமாறு, 

மோர்ப்பண்ணை ஸ்ரீரணபத்திரகாளி அம்மன் கோயில்

இராமநாதபுரம் மாவட்டம் உப்பூர் அருகே கடலூர் ஊராட்சியைச் சேர்ந்த மோர்ப்பண்ணை என்ற ஊரில் ஸ்ரீரணபத்திரகாளி அம்மன் கோயில் உள்ளது. இக்கோயில் கருவறையில் ஸ்ரீரணபத்திரகாளி, வாழவந்த அம்மன், கட்டாரி காளி ஆகிய தெய்வங்கள் உள்ளன. 


பொங்கல் நாளில் வழிபாடு 

இக்கோயிலை வழிபடும் கடையர் எனும் மீனவ சமுதாயத்தினர் ஒவ்வொரு ஆண்டும் ஊர் கூட்டம் போட்டு 11 முதல் 13 வயதுக்குட்பட்ட 7 சிறுமிகளை தேர்வு செய்கிறார்கள். வெவ்வேறு குடும்பத்தைச் சேர்ந்தவர்களுக்கு அடுத்தடுத்த ஆண்டுகளில்  வாய்ப்பு அளிக்கப்படுகிறது. இந்த ஆண்டு சுனந்தாவதி, ஹர்ஷினி, மன்மதா, அனிதா, சிங்கராணி, லத்திகா, சத்தியப்பிரியா ஆகிய சிறுமிகள் சப்தகன்னியராய் தேர்வு செய்யப்பட்டனர்.


பொங்கல் நாள் அன்று ஊரில் உள்ள அனைவரும் தங்கள் வீடுகளில் பொங்கல் வைத்தபின்பு, குறிக்கப்பட்ட நல்ல நேரத்தில் தேர்வு செய்யப்பட்ட ஏழு சிறுமிகளுடன் கோயிலுக்கு வந்து வணங்குகிறார்கள். பின்பு அச்சிறுமிகள் கடலிலும், குளத்திலும் நீராடுகின்றனர். கோயில் முன்பு அமைக்கப்பட்ட வேப்பிலைத் தோரணம் எதிரில், ஏழு அடுப்புகளில் ஏழு பானைகள் கொண்டு பெரியவர்களின் உதவியோடு பொங்கல் வைக்கிறார்கள். பொங்கல் பொங்கியதும் குலவையிடுகிறார்கள். பொங்கல் தயாரானதும் அப்பானைகளை கோயில் முன் வைத்து விட்டு அவ்வூர் முனியையா கோயிலுக்கு ஆண்கள் மட்டும் சென்று வழிபடுகிறார்கள். அதன் பின் மஞ்சள் கலந்த பால் நிரப்பப்பட்ட ஏழு  கரகச் செம்புகளோடு, ஏழு வாழையிலைகளில் பொங்கலை வைத்து அம்மனுக்குப் படைக்கிறார்கள்.

பாய்மரப்படகு 

தென்னம்பாளையில் அழகிய வண்ணம் பூசப்பட்டு தயாரிக்கப்பட்ட சிறிய பாய்மரப் படகின் உள்ளே பூசைப்பொருட்களோடு இலையில் பொங்கல் வைத்து அதன் நடுவில் நெய் ஊற்றி திரியிட்டு விளக்கு ஏற்றுகிறார்கள்.  கிராமத் தலைவர் கனியிடம் அந்த பாய்மரப் படகை கோயில் பூசாரி எடுத்துத் தருகிறார். அவர் அதை கைகளில் ஏந்திக்கொண்டு முன் செல்ல சப்த கன்னியர்களான அச்சிறுமியர் கரகச் செம்பை தலையில் ஏந்தி பின் செல்ல மேளதாளத்துடன் கடலை நோக்கிச் செல்லும் அவர்கள் கழுத்தளவு தண்ணீர் உள்ள இடத்துக்குச் சென்று பாய்மரப் படகை கடலில் விட்டு விட்டு, கரகச் செம்பில் உள்ள   மஞ்சள் கலந்த பாலை கங்காதேவியாக வழிபடும் கடலில் கொட்டி வழிபடுகிறார்கள். பாய்மரக் கப்பல் கடலில் காற்று அடிக்கும் திசையில் அடித்து ஆழ்கடல் பகுதிக்குச் செல்லும். படகில் உள்ள பூசைப்பொருட்களை கடல் கங்காதேவியிடம் கொண்டு சேர்ப்பதாக மக்கள் நம்புகிறார்கள். பல ஆண்டுகளுக்கு முன்புவரை பூசைப்பொருட்களோடு ஒருகிராம் தங்கமும் வைக்கும் வழக்கம் இருந்துள்ளது. தற்போது அது இல்லை.



பாரம்பாரிய விழா 

       உழவுத்தொழில் சார்ந்த பொங்கல் திருநாள் இவ்வூரில் தமிழர்களின் பழம்பெரும் அடையாளமான வளமை (Prosperity) வழிபாடாக கொண்டாடப்படுகிறது. உழவுத் தொழிலுக்கு உதவியாய் இருக்கும் சூரியன், காளைகளுக்கு நன்றி தெரிவித்து கொண்டாடப்படும் பொங்கல் இங்கு தங்கள் வாழ்வை வளமாக்கும் கடலுக்கு நன்றி செலுத்தி வணங்கும் திருநாளாக கொண்டாடப்படுவது சிறப்பான ஒன்றாக உள்ளது. விழாவில் இராமநாதபுரம் தொல்லியல் மற்றும் வரலாற்றுப் பாதுகாப்பு மைய தலைவர் வே.இராஜகுரு, செயலாளர் காளிமுத்து, கிராம செயலாளர் மழைமேகம், சமூக ஆர்வலர் துரைபாலன் உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டனர். 





 நாளிதழ் செய்திகள் 


தினமலர் 


 தி இந்து 


No comments:

Post a Comment