Pages

Sunday, 5 October 2025

உயிர் கொடுத்து ஊர் காத்த ‘மடைச்சி’ சாத்தாயி - வே.இராஜகுரு

 


இராமநாதபுரம் மாவட்டம், சக்கரக்கோட்டை கண்மாய்க்குள் இருக்கும் பழமையான சாத்தாயி கோயிலைப் பாதுகாக்க இராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவனம் அரசுக்குக் கோரிக்கை விடுத்துள்ளது.

இராஜசூரியமடை அருகில் சக்கரக்கோட்டை கண்மாயின் தெற்கில் பாழடைந்த நிலையில் சாத்தாயி கோயில் உள்ளது. இதுகுறித்து இராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவனத்தின் தலைவர் வே.இராஜகுரு கூறியதாவது,

நீரின்றி அமையாது உலகு என்றார் வள்ளுவர். நீர்தான் அனைத்திற்கும் ஆதாரமானது. நீர் நிலைகளை உருவாக்குவது ஒரு மன்னனின் தலையாயக் கடமையாக கருதப்பட்டது. இராமநாதபுரம் மாவட்டத்தில் சங்கிலித் தொடர் போன்ற கண்மாய்களை எட்டாம் நாள் பிறை வடிவில் பாண்டியரும், சேதுபதிகளும் அமைத்து விவசாயத்தைப் பெருக்கினர்.



கண்மாய்களிலிருந்து பாசனத்துக்கு தண்ணீர் வெளியேற மடை அமைப்பர்.  வைரம் பாய்ந்த பனை மரங்களின் உள் தண்டை நீக்கி அதை கண்மாய் கரையில் பதித்து, கோரை, நாணல், களிமண் கொண்டு அதை அடைத்து ஆரம்பகால மடைகள் உருவாக்கப்பட்டன. அதன் பிறகு பாறை, மரம், சுண்ணாம்பு, செங்கல் போன்றவை பயன்படுத்தி கட்டப்பட்ட மடைகள் வந்தன.

பாசனத்துக்காகவும், வெள்ளம் ஏற்படும்போதும் ஏரி, கண்மாய், குளம் ஆகியவற்றின் மடையைத் திறந்து மூடும் பணி செய்தவர்களை மடையர் எனக் கல்வெட்டுகள் குறிப்பிடுகின்றன. வெள்ளம் ஏற்படும்போது கண்மாயில் நீர் நிரம்பி கரை உடைந்து ஊர் அழிந்துவிடும் அபாயம் ஏற்படும். அச்சமயங்களில் இவர்களின் பணி மகத்தானது. இப்பணியை எல்லோராலும் செய் முடியாது. இதில் பயிற்சி பெற்றவர்களே இதைச் செய்ய முடியும். சில சமயங்களில் இப்பணி அவர்களின் உயிருக்கு ஆபத்தை விளைவித்துவிடும்.

அவர், வெள்ளக்காலத்தில் நிரம்பியுள்ள கண்மாய் நீரில் மூழ்கி மூச்சடக்கி, நீருக்கடியில் இருக்கும் மடையின் அடைப்பைத் திறந்துவிடுவார். அச்சமயம் வேகமாக வெளியேறும் நீர் அவரை உள் இழுக்கும். அதில் தப்பிப் பிழைத்தால் அவர் வீடு திரும்புவார். இல்லையேல் ஊருக்காக தன் இன்னுயிர் கொடுத்து உள்ளூர் மக்கள் மற்றும் மன்னர்களால் போற்றப்படுவார். தெய்வமாக வணங்கப்படுவார். விருதுநகர் மாவட்டம், இராஜபாளையம் அருகில் முதுகுடியில் குளத்தை திறக்கும் பணி செய்த போது ஊரின் நலனுக்காகத் இன்னுயிர் நீத்த பெருந்தேவப்பள்ளனின் பிள்ளைகளுக்கு, அவ்வூரார் கி.பி.1302-ல் உதிரப்பட்டியாக நிலம் வழங்கியுள்ளனர்.

சங்க காலத்திலேயே மடை அடைக்கும் பணியை பெண்களும் செய்துள்ளதை கீழடியில் கிடைத்த பானை ஓட்டில் எழுதப்பட்ட ‘மடைச்சி’ என்ற சொல் உணர்த்துகிறது.

இராமநாதபுரம் அருகே, வட்டவடிவமான சக்கரக்கோட்டை கண்மாயின் தெற்கிலுள்ள இராஜசூரியமடை, தனுக்காத்தமடை, பால்கரை ஆகிய ஊர்களின் விவசாயத்துக்காக சேதுபதி மன்னர்கள் புதிய மடைகளை அமைத்துள்ளனர்.  இதில் ராஜசூரியமடை, கி.பி.1676-ல் ராமநாதபுரத்தை ஆண்ட இராஜசூரிய சேதுபதி பெயராலும், அதன் அருகில் தனுக்காத்தமடை தளவாய் சேதுபதியின் தங்கை மகன் தனுக்காத்ததேவர் பெயராலும் உருவாக்கப்பட்டுள்ளது. மடைகளின் அருகில் உருவான ஊர்களும் அதன் பெயராலேயே அழைக்கப்படுகின்றன.

இராஜசூரியமடை அருகில், சக்கரக்கோட்டை கண்மாய்க்குள், மடைத்தூண்களைக் கொண்டு அமைத்த பழமையான ஒரு சிறிய கோயில் உள்ளது. சிற்பம் ஏதுமில்லாத இக்கோயில், மடையைத் திறந்து மூடும் பணியைச் செய்தபோது, இறந்துபோன சாத்தாயி என்ற இளம் பெண்ணுக்கானது ஆகும்.

கிழவன் சேதுபதி காலத்தில், ஒரு மழைநாளில், உடையும் நிலையில் இருந்த சக்கரக்கோட்டைக் கண்மாயின் தெற்கு மடைக்குப் பொறுப்பாளரான சாத்தாயி, மடையைத் திறந்து நீரை வெளியேற்றியபோது, நீரில் மூழ்கி, உயிரிழந்துள்ளார். அதை நினைவு கூறும் விதத்தில், அவர் இறந்த இடத்தில், மடை போன்ற அமைப்பில் ஒரு கோயில் கட்டப்பட்டுள்ளது. வழிபாட்டில் இருந்த இக்கோயில் தற்போது பழுதடைந்தநிலையில் உள்ளது. சாத்தாயி போன்ற ஒரு ‘மடைச்சி’ பெண் இல்லாததால் இராஜசூரியமடை அருகில் இருந்த தனுக்காத்தமடை என்ற ஊர், சக்கரக்கோட்டைக் கண்மாய் உடைந்ததால் 1980-ல் அழிந்து போனது குறிப்பிடத்தக்கது.

இதுபோல மடையைத் திறக்கும்போது இறந்துபோய் ஊரைக் காத்தவர்களை மடைக்கரையான் என்ற பெயரிலும் தெய்வமாக மக்கள் பல ஊர்களில் வழிபட்டு வருகிறார்கள். இவ்வாறு அவர் கூறினார்.

நாளிதழ் செய்திகள்