இராமநாதபுரம் கோட்டை நுழைவு வாயிலின் பழைய படம் |
பல்வேறுபட்ட பண்பாடுகள், நினைவுச் சின்னங்கள், வழிபாட்டு இடங்கள், இயற்கை அமைப்பு, தொல்லியல் தளங்கள் என பன்முகத்தன்மை கொண்ட ஒரு சிறிய உலகமாக இந்தியா திகழ்கிறது. ஒவ்வொரு இனத்துக்கும் வளமான பாரம்பரியம், வரலாறு இருக்கும். இளைய தலைமுறையினர் அவற்றை அறிந்துகொள்ளவும், பாரம்பரியச் சின்னங்களை போற்றிப் பாதுகாக்கும் மனப்பான்மையை அவர்களிடம் உருவாக்கவும் ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 18 அன்று உலகப் பாரம்பரிய தினம் கொண்டாடப்படுகிறது.
ஆரம்பத்தில்
பிரான்ஸ் நாட்டிலுள்ள நினைவுச் சின்னங்களுக்கான பன்னாட்டு அமைப்பு ஏப்ரல்
18-ஐ பன்னாட்டு நினைவுச் சின்னங்கள் தினமாக ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடி வந்தது.
1982-ல் நடந்த அந்த அமைப்பின் துனிசியா மாநாடு இதை உலகம் முழுவதும் கொண்டாட
யுனெஸ்கோ நிறுவனத்துக்குப் பரிந்துரைத்தது. 1983-ல் யுனெஸ்கோ இதை
அங்கீகரித்தது. பின்பு இந்நாள் நினைவுச் சின்னங்கள் மற்றும் தொல்லியல்
இடங்களைப் பாதுகாக்கும் உலகப் பாரம்பரிய தினமாக மாற்றப்பட்டது. 2021க்கான உலகப்
பாரம்பரிய தினத்தின் முழக்கமாக, “சிக்கலான கடந்த காலங்கள்: மாறுபட்ட
எதிர்காலங்கள்” என்பது உருவாக்கப்பட்டுள்ளது.
யுனெஸ்கோ நிறுவனம்
உலகம் முழுவதும் உள்ள தொல்லியல், பாரம்பரியம் மிக்க இடங்களை உலகப்
பாரம்பரியச் சின்னங்களாக அறிவிக்கிறது. இதில் இயற்கைப் பாரம்பரியச் சின்னங்களும்
அடங்கும். தஞ்சாவூர், கங்கை கொண்ட சோழபுரம், தாராசுரம் ஆகிய சோழர்காலக்
கோயில்களும், மாமல்லபுரத்தில் உள்ள பல்லவர் கால நினைவுச் சின்னங்களும்,
நீலகிரி மலை இரயில் பாதை, மேற்குத் தொடர்ச்சி மலை ஆகிய இயற்கைப் பாரம்பரிய
களங்களும் தமிழகத்தில் உள்ள உலகப் பாரம்பரியச் சின்னங்கள் ஆகும்.
மன்னார் வளைகுடா, பாம்பன் ரயில் பாலம், அழகன்குளம் அகழாய்வு, தேவாரப்
பாடல் பெற்ற திருவாடானை, ராமேஸ்வரம், மாணிக்கவாசகர் பாடல் பெற்ற உத்தரகோசமங்கை
ஆகிய சைவக் கோயில்கள், திருமங்கையாழ்வார்
பாடல் பெற்ற 108 வைணவ திவ்வியதேசங்களில் 44-வதாகப் போற்றப்படும் திருப்புல்லாணி,
அரேபியத் தொடர்பினால் சிறப்பு பெற்று மதநல்லிணக்கம் காத்துவரும் எர்வாடி, ஓரியூர்
கிறிஸ்துவ தேவாலயம், மாவட்டம் முழுதும்
பரவலாகக் காணப்படும் மான்கள், பல நூற்றாண்டுகள் வாழும் பெரிய அளவிலான பொந்தன் புளி
மரங்கள், பாரம்பரிய நெல் ரகங்கள், மூலிகைத் தாவரங்கள் ஆகியவை மட்டுமின்றி
இராமநாதபுரம் மாவட்டத்தின் பெரும்பான்மை மக்கள் தாய்வழிச் சமூகமாக மிகப் பழங்காலம்
முதல் இருந்துவருவதும் சிறப்புக்குறியதாகும்.
பாரம்பரியச்
சின்னங்கள் பற்றிய கண்காட்சிகள், புத்தகம், தபால்தலை வெளியிடுதல், பாரம்பரியத்தை
காத்தவர்களுக்கு பரிசுகள், விருதுகள் வழங்கிப் பாராட்டுதல், பள்ளி கல்லூரிகளில்
தொல்லியல் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்துவது, ஊடகங்கள் மூலம் பாரம்பரியச்
சிறப்புகளைத் தெரிவிப்பது போன்ற பல நிகழ்வுகள் இந்நாளில் உலகம் முழுவதும்
நடத்தப்பட்டு வருகின்றன. பாரம்பரியச் சின்னங்களை கட்டணங்கள் இல்லாமல்
இந்நாளில் பார்வையிடலாம். தற்போதைய கொரோனா காலகட்டத்தில் இத்தகைய நிகழ்வுகளை
இணையவழியில் நடத்தலாம். பாரம்பரியத்துடன் இணைந்த தொல்லியல், வரலாறு,
புவியியல், அறிவியல், மானிடவியல், சமூகவியல், கலை, பொறியியல் போன்ற பலதுறைகளில்
அறிஞர்களை இணைத்து பாரம்பரியம் சார்ந்த ஆய்வுகள் நடத்தப்படவேண்டும்.
அரசால் பாதுகாக்கப்படும்
தொல்லியல் சின்னங்களைக் கூட, அத்துமீறி மது அருந்தும் இடங்களாக்கும்
போது பாதுகாக்கப்படாத நினைவுச் சின்னங்கள் பற்றிச் சொல்லவேண்டியதில்லை. பல
ஆயிரம் ஆண்டுகள் பழமையான கல்வெட்டுகள், ஓவியங்களில் பெயிண்டால், உளியால் தங்கள்
பெயர்களை எழுதி வைப்பதும், காதல் கதைகள் பேசும் இடங்களாக பாரம்பரியச் சின்னங்களை
காதல் ஜோடிகள் பயன்படுத்துவதுமான செயல்பாடுகள் நமது பாரம்பரியத்தைக் காக்க
எவ்வளவு விழிப்புணர்வுடன் நாம் செயல்பட வேண்டி உள்ளது என்பதைக்காட்டும்.
வரலாறு, பண்பாடு ஆகியவை அதைத் தெரிந்தவர்களால் தான் அடுத்த தலைமுறைக்கு பரப்பப்படுகிறது. பண்பாட்டைக் காப்பதில் பெண்களே சிறந்து விளங்குகிறார்கள். பாரம்பரியத்தை வெறுமனே படிப்பவர்களாக இல்லாமல் அதன் மரபை, தொன்மையை பின்பற்றுபவர்களாகவும், காப்பவர்களாகவும், பிறர்க்கு கற்றுத் தருபவர்களாகவும் இருந்தால் தான் பண்பாடு காக்கப்படும் என்பதை நாம் மறந்துவிடக்கூடாது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
படம்
இராமநாதபுரம் கோட்டை
நுழைவு வாயிலின் பழைய படம்
கட்டுரையாளர்
தலைவர்,
இராமநாதபுரம்
தொல்லியல் ஆய்வு நிறுவனம்
நன்னாளில் நல்ல பதிவு. பாரம்பரியச் சின்னங்களைப் பாதுகாப்பதில் ஒவ்வொருவரின் பங்கும் உள்ளது என்பதை அனைவரும் உணரவேண்டும்.
ReplyDelete