அறிமுகம்
தமிழ்நாட்டில் உள்ள மாவட்டங்களிலே மிக நீண்ட கடற்பரப்பைக் கொண்டு
விளங்கும் இராமநாதபுரம் மாவட்டத்தில் சங்க காலம் முதல் இயற்கையான பல துறைமுகங்கள் செயல்பட்டு
வந்திருக்கின்றன. மருங்கூர்ப்பட்டினம், அழகன்குளம், தொண்டி, பெரியபட்டினம், கீழக்கரை,
தேவிபட்டினம், இராமேஸ்வரம், தனுஸ்கோடி, பாம்பன், புதுப்பட்டினம்,
தீர்த்தாண்டதானம், நானாதேசிப்பட்டினம்உள்ளிட்ட பல துறைமுகங்கள் மூலம்
உள்ளூர் மற்றும் வெளிநாட்டு வாணிகம் மிகச் சிறந்த முறையில் நடந்து வந்துள்ளது. வணிகர்கள்
மூலமே சமணம், புத்தம், சைவ மதங்கள் பெருமளவு வளர்ந்துள்ளன. இம்மாவட்டத்தில் தங்கி
இருந்த பல வணிகக்குழுவினர் தங்களது இலாபத்தில் ஒரு பகுதியை சிவன் கோயில்
திருப்பணிகளுக்கு வழங்கியுள்ளனர்.
முதலாம் மாறவர்மன் சுந்தர பாண்டியன் காலத்தில் பாண்டிய நாட்டின் கிழக்குக்
கடற்கரைப் பகுதிகளில், வணிகத்தை பெருக்கவும் சைவ சமயத்தை வளர்க்கவும் பல இடங்களில்
புதிய சிவன் கோயில்கள் கட்டியுள்ளதாகத் தெரிகிறது. அவ்வகையில் இராமேஸ்வரம் முதல் வேம்பார்வரையிலானபல
ஊர்களில் சிவன் கோயில்கள் கட்டப்பட்டுள்ளன.
தற்போதும் கீழக்கரை, சிக்கல், மேலக்கிடாரம், மேலச்செல்வனூர், மாரியூர்,
சாயல்குடி, வேம்பார் ஆகிய ஊர்களில் சிவன் கோயில்கள் இருப்பது இதை உறுதிப்படுத்துகிறது.
இந்த வகையில் இராமநாதபுரத்தில் இருந்து தூத்துக்குடி செல்லும்
கிழக்குக் கடற்கரைச்சாலையில் சாயல்குடி அருகில் உள்ள நரிப்பையூர் ஊராட்சியில்
தெற்கு நரிப்பையூர் கடற்கரையில் ஒன்றும், வெட்டுக்காடு பகுதியில் ஒன்றும் என இரு
சிவன் கோயில்கள் மண்ணில் புதைந்த நிலையில் உள்ளதை, இராமநாதபுரம் தொல்லியல் மற்றும்
வரலாற்றுப் பாதுகாப்பு மையத்தின் (the Ramanathapuram Archaeological and Historical Conservation
Centre) தலைவர் வே.இராஜகுரு, செயலாளர் காளிமுத்து ஆகியோர் இப்பகுதிகளில் மேற்கொண்ட
களஆய்வின் போது கண்டுபிடித்துள்ளனர்.
இதுபற்றி தொல்லியல் ஆய்வாளர் வே.இராஜகுரு கூறியதாவது,
தெற்கு நரிப்பையூர் கடற்கரையில்
மீன் பிடித்து கரைக்கு கொண்டுவரும் பகுதியை பாடு என்பர். தெற்கு
நரிப்பையூர் கடற்கரையில் துறைப்பாடு, சொக்கன்பாடு, எருக்கலாம்பாடு, பள்ளிவாசல்பாடு
ஆகிய பாடுகள் உள்ளன. துறைமுகப்பாடு என்பது துறைமுகப் பகுதி என்பதன் சுருக்கம்.
இங்கு போர்ச்சுகீசியர் கால தேவாலயம் இருந்தது. எருக்கஞ்செடிகள் அதிகமாகக்
காணப்பட்ட பகுதி எருக்கலாம்பாடு. பள்ளிவாசல்
பாடு பகுதியில் ஒரு தர்ஹா உள்ளது. எனவே சொக்கன் பாடு பகுதியில் சொக்கநாதர் கோயில்
இருந்ததா என தேடினோம். சொக்கன்பாடு பகுதியில் இருந்த ஒரு தோப்பை (Coconut Grove) ஆய்வு செய்தபோது அது மேடான பகுதியாக இருந்தது. அதன் வெளியே
கொடுங்கை (Cornice) ஒன்றும் சில தூண்களும் மண்ணில் புதைந்த நிலையில் இருந்தன. கூகுள்
மேப்பில் இத்தோப்புப்பகுதியைப் பார்த்தபோது ‘எல்’ வடிவத்தில் உள்ள பகுதியில்
மட்டும் தென்னை மரங்கள் வளரவில்லை. அப்பகுதியில் தென்னை மரம் நடுவதற்கு குழி தோண்டியபோதுகற்கள்
பெயர்ந்து வந்துள்ளன. இதன் மூலம் அங்கு ஒரு கோயில் இருந்தது உறுதிப்படுத்தப்பட்டது.
தோப்பின் வெளியே கிடக்கும் கொடுங்கையும் தூண்களும்
|
தெற்கு நரிப்பையூரில் கோயில் புதைந்துள்ள தோப்பு
|
இவ்வூரைச் சேர்ந்த 85 வயதான சிதம்பர நடராஜத் தேவரிடம் விசாரித்தபோது
60 ஆண்டுகளுக்கு முன் இப்பகுதியில் பாதி புதைந்த நிலையில் ஒரு கோயில்
இருந்ததாகவும் அதைத் தான் பார்த்திருப்பதாகவும் கூறினார். அதன் அருகில் பத்தடி
நீளமான கல்லால் ஆன தொட்டியும், துணி துவைக்கும் கல்லும் இருந்ததாகவும் தற்போது அது
முழுவதும் மண்ணில் புதைந்துவிட்டதாகவும் அப்பகுதி மக்கள் கூறினர். இக்கோயில்,
கடற்கரைக்கு மிக அருகில் 1௦௦ மீட்டர் தூரத்தில் உள்ளது. இவ்வூரின் பழைய பெயர்
சம்புமாநகர் ஆகும். இது வடமொழி பெயராக இருப்பதைக் கொண்டு இங்கு பிராமணர்கள்
வாழ்ந்திருப்பதை அறிய முடிகிறது. வடமொழியில் சம்பு என்பது நரியையும் குறிக்கும். நரிப்பையூர்
என்பதற்கு நரிகள் நிறைந்த அழகிய ஊர் என்பது பொருளாக உள்ளது.
வட்டமிட்ட பகுதியில் கொடுங்கையும் எல் வடிவப் பகுதியில் கோயிலும்
உள்ளன
|
உலகம்மன் கோயில்
இங்கிருந்து சிறிது தூரத்தில் குதிரைமொழி என்ற இடத்தில் எட்டுக்கைகளுடன்
வடக்கு நோக்கி அமர்ந்த நிலையில் உள்ள உலகம்மன் (காளி) கோயில் உள்ளது. மேற்கூரை
இல்லாத இக்கோயிலில் கி.பி. 13 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த எழுத்தமைதியில் சில கல்வெட்டுகள்
உள்ளன. இவை படிக்க முடியாத அளவிற்கு சேதமடைந்துள்ளன.
உலகம்மன் கோயில்
|
வெட்டுக்காடு பகுதியில்
நரிப்பையூரில் இருந்து கன்னிராஜபுரம் செல்லும் கிழக்குக் கடற்கரைச்
சாலையில் வெட்டுக்காடு என்ற இடத்தின்
அருகில் சாலையின் இடது பக்கம் உடை மரத்தின் கீழ் ஒரு நந்தி மட்டும் உள்ளது. இப்பகுதி
மக்களால் இது கோயிலாக வணங்கப்பட்டு வருகிறது.இதன் அருகில் 2007 இல் மேல்நிலை
நீர்த்தேக்கத் தொட்டி கட்ட குழி தோண்டியபோது அம்மன், முருகன், பைரவர் சிலைகள் கிடைத்துள்ளன.
அவை தற்போது இராமநாதபுரம் அரசு அருங்காட்சியகத்தில் உள்ளன. இச்சிலைகளில் அம்மன்
சிலையும், பைரவர் சிலையும் கி.பி. 13 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தவை. முருகன் சிலை 18ஆம்
நூற்றாண்டைச் சேர்ந்தது.இக்கோயிலின் நந்தியும் கி.பி. 13 ஆம் நூற்றாண்டைச்
சேர்ந்தது. எனவே இவ்விடத்தில் ஒரு சிவன் கோயில் புதைந்த நிலையில் உள்ளது
உறுதியாகிறது.
சிவன் கோயில் புதைந்துள்ள இடம்
|
நந்தி |
பிழைபொறுத்தம்மன் காளி சிற்பம்
இதன் வலதுபக்கம் 1௦௦ மீட்டர் தூரத்தில் வடக்கு நோக்கி அமர்ந்த
நிலையிலான எட்டுக்கைகளையுடைய காளி சிற்பம் உள்ளது.இது கருங்கல்லில்
வடிக்கப்பட்டுள்ளது. இதை பிழைபொறுத்தம்மன் என உள்ளூர் மக்கள் வணங்குகிறார்கள். இதன்
அருகில் கிணறு தோண்டியபோது ஆறு அடி ஆழத்தில் இரு சுடுமண் சிற்பங்கள் (terracotta figurines)கிடைத்துள்ளன. இவை கி.பி. 13 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த அமைப்பில்
உள்ளன. இதன் அருகில் பல நூற்றாண்டுகள் பழைமையான மணிபூவந்தி எனும் சோப்புக்காய்
மரம் (Soap Nut Tree) (Sapindusemarginatus) உள்ளது.
இரு சுடுமண் சிற்பங்கள்
|
அக்கா தங்கை
குதிரைமொழியில் உள்ள உலகம்மனை அக்கா என்றும் வெட்டுக்காடு பகுதியில்
உள்ள பிழைபொறுத்தம்மனை தங்கை என்றும் உள்ளூர் மக்கள் அழைக்கிறார்கள். இது இரு
கோயில்களுக்கும் உள்ள தொடர்பைக் குறிப்பதாகக் கொள்ளலாம். இந்த இரு காளி சிற்பங்களும் கி.பி. 13 ஆம்
நூற்றாண்டைச் சேர்ந்ததாகவே உள்ளன.
எனவே மண்ணில் புதைந்த நிலையில் உள்ள இரு சிவன் கோயில்களும் கி.பி. 13
ஆம் நூற்றாண்டைச் சேர்ந்ததாகவே இருக்கவேண்டும்.
எறிவீரபட்டினம்
சாயல்குடியில் இருந்து மதுரை செல்லும் வழியில் உள்ளது திருமாலுகந்தான்கோட்டை.
இங்கு கி.பி. 13 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பாண்டியர் கால சிவன் கோயில் உள்ளது.
இக்கோயில் கல்வெட்டுக்களில் இடைவழி என்ற எறிவீரபட்டினம் எனும் ஊரின் சிவன் கோயில்
குறிக்கப்படுகிறது. அதுவெட்டுக்காடு பகுதியில் உள்ள சிவன் கோயிலாக இருக்கலாம். இவ்வூர்
திருமாலுகந்தான்கோட்டை பகுதியில் இருந்து வரும் ஒரு காட்டாற்றின் கரையிலும்
கடற்கரையின் மிக அருகிலும் உள்ளது.
இராமேஸ்வரம், கன்னியாகுமரி இடையிலான கடலோர வணிகப்பாதையில் இவ்விரு கோயில்களும் அமைந்துள்ளன. எனவே வணிகர்கள் தங்கி
இருந்து வணிகம் செய்த பகுதியாக இது இருக்கலாம்.
கோரிக்கை
திருமாலுகந்தான்கோட்டையில் உள்ள சிவன் கோயிலில் 21 கல்வெட்டுகள்
உள்ளன. மண்ணில் புதைந்த நிலையில் இருந்த இக்கோயில் 1931 இல் அகழாய்வு மூலம்
வெளிக்கொணரப்பட்டது.
வணிகத்தையும் பக்தியையும் மேம்படுத்தும் நோக்கில் இக்கோயில்கள்
கட்டப்பட்டிருக்கலாம். அகழாய்வுகள் மூலம் இக்கோயில்கள் வெளிப்படுத்தப்படும் போது பாண்டியர் கால வணிகம், ஆட்சி முறை, சமயம் போன்ற
பல புதிய தகவல்கள் நமக்குக் கிடைக்கலாம்.தமிழகத் தொல்லியல் துறை உரிய நடவடிக்கை
எடுத்து இவற்றை வெளிக்கொண்டு வரவேண்டும் எனக் கேட்டுக் கொள்வதாக தெரிவித்தார்.
நாளிதழ் செய்திகள்
தொலைக்காட்சி
செய்திகள்
தந்தி டிவி
ஜெயா பிளஸ் டிவி
No comments:
Post a Comment