Pages

Monday, 29 June 2015

திருவாடானையின் வரலாற்றுச் சிறப்புகள் (வே.இராஜகுரு)



அறிமுகம்
பாண்டிய நாட்டில் தேவாரப் பாடல் பெற்ற திருக்கோவில்கள் 14 உள்ளன. அவையாவன மதுரை, திருப்புனவாசல், திருப்பத்தூர், திருக்குற்றாலம், திருஆப்பனூர், திருவேடகம், திருநெல்வேலி, இராமேஸ்வரம், திருவாடானை, திருப்பரங்குன்றம், திருச்சுழி, காளையார்கோவில், பிரான்மலை, திருப்பூவனம். இவற்றில்  இராமேஸ்வரமும், திருவாடானையும் மட்டுமே இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ளன.
இராமநாதபுரத்தில் இருந்து காரைக்குடி செல்லும் தேசிய நெடுஞ்சாலையும் மதுரையிலிருந்து தொண்டி செல்லும் தேசிய நெடுஞ்சாலையும் சந்திக்கும் இடத்தில் இராமநாதபுரத்திலிருந்து 55 கி.மீ. தொலைவில் உள்ளது திருவாடானை. இங்கு ஆடானை நாயகர், அன்பிற்பிரியாத அம்மன் கோவில் உள்ளது.
      இவ்வூர் பாரிஜாதவனம், வன்னிவனம், குருக்கத்திவனம், வல்லவனம், முத்திபுரம், ஆதிரத்தேசுவரம், ஆடானை, மார்க்கண்டேயபுரம், அகஸ்தீசுவரம், பதுமபுரம், கோமுத்திசுவரம், விஜயேசுவரம் என 12  பெயர்களால் அழைக்கப்பட்டு வந்துள்ளது.
திருஞானசம்பந்தர்  ஆடானை நாயகர் மேல் ஒரு பதிகம் பாடியுள்ளார். அருணகிரி நாதர் இக்கோவிலில் உள்ள முருகனைப் போற்றி பாடல் பாடியுள்ளார்.
திருஞானசம்பந்தர் தேவாரப்பாடல்களிலும், கல்வெட்டுக்களிலும்  இவ்வூர், ஆடானை என்றே குறிக்கப்படுகிறது. பாண்டியர் ஆட்சிக்காலத்தில் இடையளநாடு, தழையூர்நாடு எனும் பகுதியில் இவ்வூர் இருந்துள்ளது. 

ஆடானை நாயகர் கோவில் 

துருவாச முனிவர் 12 ஆண்டுகள் தவத்துக்குப்பின் உணவு உண்ண வந்தபோது வருணபகவானின் மகன் வாருணி அவருடைய உணவை உண்டுவிட்டதால்  அவன் யானையைப்போல் உணவு உண்ணக்கூடியவனாகவும் ஆடுபோல் சிறிய வாய் உடையவனாகவும் ஆகக் கடவதாக சாபம் பெற்றான். வாருணி இவ்வூர்ச் சிவனை வழிபட்டு சாபவிமோசனம் பெற்றதாக புராணங்கள் கூறுகின்றன. சூரிய பகவான் இரத்தினக்கல்லில் லிங்கம் செய்து வழிபாடு செய்ததால் இவ்வூர் இறைவனுக்கு ஆதிரத்தினேஸ்வரர் எனவும் பெயர் உண்டு.
      இக்கோவில் இறைவன் ஆடானை நாயகர் என்ற  ஆதிரத்தினேஸ்வரர்.  அம்மன் அன்பாயிரவல்லி என்ற சிநேகவல்லி. கோவில் தலவிருட்சம் வில்வமரம். தீர்த்தம் சூரிய புஷ்கரணி. இக்கோவில் 422 அடி நீளமும்  252 அடி அகலமும் உடையது. இதன் கோபுரம் 150 அடி உயரமுடையது. மதில் சுவர்கள் மிக உயரமானவை.

விழாக்கள் 

வைகாசி விசாக வசந்தவிழா 10 நாள்கள், ஆடிப்பூரத் திருவிழா 15 நாள்கள், நவராத்திரி, பிரதோஷம், கார்த்திகை, சதுர்த்தி போன்ற விழாக்கள் இங்கு சிறப்பாகக் கொண்டாடப் படுகின்றன.

வரலாற்றுச் சிறப்புகள்
 
கோவில் அமைந்த ஊர் என்பதால் ஆடானை என்ற இவ்வூரின் பெயருடன், திரு என்ற விகுதி சேர்த்து திரு ஆடானை என அழைக்கப்படுகிறது.
      இக்கோவிலில் உள்ள நான்கு கல்வெட்டுகளை மத்திய தொல்லியல் துறை 1914 ஆம் ஆண்டு படி எடுத்துள்ளது. இதில் இரு கல்வெட்டுக்கள் மாறவர்மன் சுந்தரபாண்டியன் காலத்தைச் சேர்ந்ததாகவும், மற்ற இரண்டில் ஒன்று சடைக்கத்தேவர் என்ற தளவாய் சேதுபதி காலத்தையும், மற்றொன்று முத்து வைரவநாத சேதுபதி காலத்தையும் சேர்ந்தது.
      ஏழாம் நூற்றாண்டைச் சேர்ந்த திருஞானசம்பந்தர்  ஆடானை நாயகர் மேல் பதிகம் பாடியிருப்பதாலும், லிங்கத்தின் ஆவுடையார் சதுர வடிவில் உள்ளதாலும் சைவ வைணவ மதங்களின் மறுமலர்ச்சிக் காலமான ஏழாம் நூற்றாண்டில் பிற்காலப் பாண்டியர்களால் இக்கோவில் கட்டப்பட்டிருக்கலாம்.
      திரிபுவன சக்கரவர்த்திகள் கோனேரின்மை கொண்டான் என அழைக்கப்படும் மாறவர்மன் சுந்தரபாண்டியனின் 17 ஆம் ஆட்சியாண்டுக் கல்வெட்டு (கி.பி.1233) இக்கோவிலுக்கு நெல் தானமாக வழங்கப்பட்டதைத் தெரிவிக்கிறது.
      அதே மன்னனின் 16 ஆம் ஆட்சியாண்டுக் கல்வெட்டு (கி.பி.1232) இக்கோவிலுக்கு நிலக்கொடை வழங்கியதைத் தெரிவிக்கிறது. சோழ நாட்டை வழங்கியருளிய சுந்தர பாண்டியத் தேவர் என அவர் குறிக்கப்படுகிறார்.
      உடையான் சடைக்கண் சேதுபதி கி.பி.1605 இல் கருப்பூர் கிராமத்தையும் கி.பி.1606 இல் அச்சங்குடி கிராமத்தையும் கி.பி.1615 இல் நாகனேந்தல், இரட்டையூரணி, வல்லடிவாகை ஆகிய  கிராமங்களையும் இக்கோவிலுக்கு தானமாக வழங்கியுள்ளார்.
      கூத்தன் சேதுபதி கி.பி.1623 இல் கேசணி, பில்லூர் கிராமங்களையும், கி.பி.1624 இல் கீரமங்கலம், கீரணி கிராமங்களையும் இக்கோவிலுக்கு கொடையாக  வழங்கியுள்ளார்.
      தளவாய் சேதுபதியின் பிரதிநிதியான திருமலையன் என்பவர், திருவாடானை கோவில் ஆடானை நாயகருக்கு அபிசேகம், திருநீறு, மாலைகள் போன்றவற்றிற்காக ஒவ்வொரு கிராமமும் ஒரு காசும், ஒரு பணமும், ஒரு கலம் நெல்லும் கோவிலுக்குக் கொடுக்க வேண்டும் என  கி.பி.1635 இல் ஆணையிட்டுள்ள கல்வெட்டு இக்கோவில் இராஜகோபுர சுவரில் உள்ளது. இந்தக் கிராமங்களிலே மேற்கண்ட வரி கொடுக்காமல் இருக்க கைக்கூலி வாங்கியவன் பெண்டாட்டியையும் உடன்பிறந்தாளையும் மகளையும் மருமகளையும் கயவர்களையும் ஒரு வீட்டில் பகைவருடன் கூட்டிக்கொடுத்த பாவத்தை அடைவான் எனக் கடுமையாகக் கூறுகிறது. கையூட்டு, இலஞ்சம் என்ற பொருளில் கைக்கூலி எனும் சொல் இக்கல்வெட்டில் கையாளப்பட்டுள்ளது.
      திருமலை ரெகுநாத சேதுபதி கி.பி.1646 இல்  ஆதியாகுடி என்ற ஊரை இக்கோவிலுக்கு தானமாக அளித்துள்ளார். இரண்டு ஆண்டுகள் மட்டுமே மன்னராய் இருந்த முத்து வைரவநாத சேதுபதியின் ஆணையின்படி , இக்கோவிலுக்கென கோவில் எதிரில் சூர்ய புஷ்கரணி எனும் குளம் வெட்டப்பட்டதாக கி.பி.1710 ஆம் ஆண்டுக் கல்வெட்டு தெரிவிக்கிறது. இக்கோவிலுக்கு குமார முத்து விஜய ரகுநாத சேதுபதி வெளிமுத்தூர் கிராமத்தை கி.பி.1735 இல் தானமாக வழங்கியுள்ளார்.
      தேவகோட்டை இராம.அரு.அரு.இராம. குடும்பத்தார் கி.பி. 1889 இல் ரூபாய் 12 இலட்சம் செலவில் இக்கோவிலைப் புதுப்பித்துள்ளார்கள்.
      ஆதியில் தமிழர்கள் மரங்களில் தெய்வம் இருப்பதாக நம்பியதால் ஊரின் நடுவில் மரங்களை நட்டு வணங்கி வந்துள்ளனர். இன்றும் கோவில்களில் தலவிருட்சமாக மரங்களை வழிபட்டு வருவது இதற்கு ஆதாரமாகும்.
சங்க இலக்கியமான அகநானூறில் சொல்லப்படும் அட்டவாயில் என்ற ஊர் தற்போதைய திருவாடானையே என கூறப்படுகிறது. அட்டவாயில் என்பது போரிட்டு அழிக்கப்பட்ட வாயில் என்று பொருள்.
ஆடானை என்பதை ஆடா + னை எனப்பிரித்து ஆடா தோடை என்ற செடி அதிகமாகக் காணப்பட்ட வனம் என்ற பொருளில் இவ்வூர்ப் பெயர் அமைந்துள்ளதாகக் கொள்ளலாம். தமிழகத்தின் பல ஊர்ப் பெயர்கள் அந்த இடங்களில் அதிகமாகக் காணப்படும் மரம், செடி, கொடிகளின் பெயர்களால் அமைந்துள்ளதை நாம் நினைவில் கொள்ளவேண்டும்.

No comments:

Post a Comment