மதுரையிலிருந்து மேலூர் செல்லும் சாலையில் யானை படுத்திருப்பது போன்ற
அமைப்பில் உள்ள மலையே ஆனைமலை எனப்படுகிறது. இரண்டாயிரம் ஆண்டுகளாக இம்மலை ஆனைமலை
எனவே அழைக்கப்படுகிறது.
ஆனைமலை மூன்று தொல்லியல் சின்னங்களைக் கொண்டது.
1.
மலைமேல் உள்ள தமிழி
கல்வெட்டு, கற்படுக்கைகள்.
2.
நரசிங்கப்பெருமாள்
குடைவரைக்கோயில்
3.
10 ஆம் நூற்றாண்டைச்
சேர்ந்த சமணர் குகை மற்றும் புடைப்புச் சிற்பங்கள்
1. மலைமேல் உள்ள தமிழி கல்வெட்டு, கற்படுக்கைகள்.
ஆனைமலையின் மேல் பகுதியில் இயற்கையாகஅமைந்த குகைத்தளத்தில்
கற்படுக்கைகளும், கல்வெட்டுகளும் காணப்படுகின்றன. இவை கிறிஸ்துவின் சமகாலத்ததாகக்
கருதப்படுகிறது. அதாவது இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முந்தையது. கல்வெட்டு கீழ்கண்டவாறு உள்ளது,
“இவ குன்றத்து உறையுள் பா தந்தான் எரி
அரிதன் அத்து வாயி அரட்ட காயிபன்”
இவ என்பது
யானையைக் குறிக்கும். இபம் எனும் வடமொழிச் சொல் இவ எனக் குறிக்கப்படுகிறது.
திருப்புகழில் இவமாகி என வருகிறது. எனவே இவ குன்றம் என்பது யானைக் குன்றம் என்பதே
சரியான பொருள் என முனைவர் இரா.நாகசாமி கருதுகிறார்.
சமணர்கள்
இம்மலையில் வாழ்ந்ததை திருஞானசம்பந்தர், “ஆனைமாமலை ஆதியாய இடங்களில்” எனப் பாடியுள்ளார். பா என்பது படுக்கையைக் குறிக்கும்
எனவும் அவர் மேலும் விளக்கமளித்துள்ளார்.
2. நரசிங்கப்பெருமாள் குடைவரைக்கோயில்
நரசிங்கப்பெருமாளுக்கு அமைக்கப்பட்டுள்ள குடைவரைக்கோயில்
மலையின் மேற்குச் சரிவில் அமைந்துள்ளது. இப்பகுதி நரசிங்கம் எனும் பெயரிலேயே
அழைக்கப்படுகிறது. இகோயில் பராந்தக நெடுஞ்சடையன் காலத்தில் தோற்றுவிக்கப்பட்டதாக முனைவர் இரா.நாகசாமி தெரிவிக்கிறார். இகோயில்
மாறன்காரி எனும் தலைவனால் கி.பி.770 இல் கட்டப்பட்டதாகவும், அவன் தம்பி மாறன்
எயினன் என்பவன் தானைத் தலைவனாய் உயர்ந்தபோது இகோயில் திருமுக மண்டபத்தைக்
கட்டியதாக ஒளவை சு.துரைசாமி பிள்ளையவர்கள் கூறுகிறார். இக்கோயில் குடைவரையின்
சரிவில் ப;பல கல்வெட்டுகள் காணப்ப்டுகின்றன. இவை வட்டெழுத்தால் எழுதப்பட்டவை. இக்குடைவரையின்
முன்பு கட்டுமானக் கோயில் கட்டப்பட்டுள்ளது. இக்கோயில் தற்போதும் பிரசித்தி பெற்று
விளங்குகிறது.
3. 10 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த சமணர் குகை மற்றும் புடைப்புச் சிற்பங்கள்
இம்மலையின் மேற்குச் சரிவில் நரசிங்கப்பெருமாள் கோயிலுக்கு
அருகில் மலையின் நடுப்பகுதியில் இயற்கையாக
அமைந்த குகைத்தளத்தில் சமணர் படுக்கையும் வட்டெழுத்து, கிரந்தம், தமிழ்
கல்வெட்டுகள் காணப்படுகின்றன. இவை கி.பி. 10 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தவை. இங்குள்ள
புடைப்புச் சிற்பங்களில் மகாவீரர், பார்சுவநாதர், பாகுபலி, அம்பிகா, இயக்கி
ஆகியோர் சிற்பங்கள் இடம் பெற்றுள்ளன. இச்சிற்பங்களும் சமணர்பள்ளியும் அச்சணந்தி
என்ற சமணத் துறவியின் முயற்சியால் உருவாக்கப்பட்டுள்ளது. இச்சிற்பங்கள் மீது சுதை
பூசி வண்ணம் தீட்டப்பட்டுள்ளன.
தீர்த்தங்கரரின்
அருகில் கைவேலைப்பாடமைந்த ஒரு குத்து விளக்கும், இருமருங்கும் தாமரைகளும்
ஓவியமாகத் தீட்டப்பட்டுள்ளன. இவை பாண்டியர் காலத்தில் சமணர் இருக்கைகள் அனைத்தும்
ஓவிய வல்லுநர்கள் பணிபுரிந்திருப்பார்கள் எனப் புரிந்து கொள்ள முடிகிறது.
இங்குள்ள ஓவியங்கள் சிதைந்த நிலையில் உள்ளன. சைவ வைணவ
சமயங்களின் எழுச்சிக்குப் பின் அச்சணந்தி என்ற சமணத்துறவி தமிழகம் முழுவதும்
கால்நடையாகவே நடந்து சமணப்பள்ளிகளை நடத்தி வந்துள்ளார் என்பது
குறிப்பிடத்தகுந்தது.
உதவியவை
1. கல்வெட்டியல்,
இரா.நாகசாமி,1972, தமிழ்நாடு அரசு தொல்லியல்துறை வெளியீடு
2.
வரலாற்றுக்காட்சிகள்,
ஒளவை சு.துரைசாமி பிள்ளை, 2009, நாம் தமிழர் பதிப்பகம்.
3. ஓவியப்பாவை, இரா.நாகசாமி,1979,
தமிழ்நாடு அரசு தொல்லியல்துறை வெளியீடு
4.
தொல்லியல்துறை தகவல்பலகை
No comments:
Post a Comment