Pages

Showing posts with label மன்றச் செய்திகள். Show all posts
Showing posts with label மன்றச் செய்திகள். Show all posts

Monday, 29 December 2014

நெஞ்சை அள்ளும் தஞ்சையில் தொன்மைப் பாதுகாப்பு மன்ற பயிற்சி முகாம்







திருப்புல்லாணி சுரேஷ் சுதா அழகன் நினைவு அரசு மேல்நிலைப்பள்ளியின் தொன்மைப் பாதுகாப்பு மன்றம் மூலம் தஞ்சாவூரில், “வாழும் சோழர் கோயில்கள்” என்ற தலைப்பில் பயிற்சி முகாம் 24/12/2014 அன்று நடைபெற்றது. மன்ற உறுப்பினர்கள் 74 பேர் தேர்வு செய்யப்பட்டு தஞ்சாவூர் அழைத்துச் செல்லப்பட்டனர். 

     தஞ்சை பெரிய கோவில், தாராசுரம் அறிவட்டீஸ்வரர் கோவில், கங்கைகொண்ட சோழபுரம் கோவில் ஆகிய உலக பாரம்பரியச் சின்னங்கள் “வாழும் சோழர் கோவில்கள்” என யுனெஸ்கோவால் அறிவிக்கப்பட்டுள்ளன.

மாமன்னன் முதலாம் இராஜராஜ சோழனால் கி.பி. 1003 ஆம் ஆண்டில் கட்டத் தொடங்கப் பெற்று, கி.பி. 1010 ஆம் ஆண்டில் நிறைவு பெற்ற தஞ்சை பெரிய கோயில் இமயமலை போன்ற அமைப்பில்  அமைக்கப்பட்டுள்ளது. 3.66 மீட்டர் உயரம் கொண்ட லிங்க வடிவிலான சிவன், மாமன்னன் இராஜராஜனின் பெயரால் இராஜராஜேஸ்வரம் என்று அழைக்கப்பட்டார். ஏறத்தாழ 70 கி.மீ. தூரத்திற்கு வெளியிலிருந்து கொண்டுவரப்பட்ட கருங்கற்களைக் கொண்டு, 240 மீட்டர் நீளமும், 120 மீட்டர் அகலமும் கொண்ட பெரும்பரப்பில் இக்கோயில் நிர்மாணிக்கப் பெற்றுள்ளது.



சதுரவடிவிலான கருவறையின் மேல் 216 அடி  உயரம் கொண்ட  விமானம் கட்டப்பட்டுள்ளது. வாய்  அகலமான  கூம்பு வடிவ பாத்திரத்தை  கவிழ்த்து  வைத்தது  போல  இருக்கும்  இவ்விமானத்தின், உட்புறத்தை, வெற்றிடமாக  அமைத்திருப்பது  அரிய விஷயமாகும்.
இக்கோவிலின் நந்தி, ஒரே கல்லால் செய்யப்பட்டது. நந்தி மண்டபம் நாயக்கர் காலத்தில் கட்டப்பட்டது. 

இக்கோயிலில் இருக்கும் கல்வெட்டுக்கள் மூலம் சோழர்கால  தமிழகத்தின்  வரலாறு, கல்வெட்டியல், அரசியல், கட்டடம், சிற்பம், ஓவியம், நடனம், இசை  ஆகிய  பல்கலைகளுடன்  சமுதாயப்  பண்பியல்  மற்றும் இறைக்கொள்கை  ஆகியவற்றை அறிய முடிகிறது. மாணவர்கள் இதை நேரில் கண்டறிந்தனர். 

இங்குள்ள கல்வெட்டுகளை வாசித்து அறிந்து கொள்ளவும்,  சிற்பங்கள் அமைக்கப்பட்டுள்ள முறைகள்,  நுணுக்கங்கள் பற்றியும் இராமநாதபுரம் ராமலிங்கவிலாசம் காப்பாட்சியர் சக்திவேல் மாணவர்களுக்கு பயிற்சியளித்தார்.






பின்பு தாராசுரம், கங்கைகொண்ட சோழபுரம் கோவில்களை மாணவர்கள் பார்வையிட்டனர். இகோவில்களின்  சிறப்புகளைப் பற்றி  மன்றப் பொறுப்பாசிரியர் இராஜகுரு மாணவர்களுக்கு கூறினர். 

பயிற்சிக்குரிய ஏற்பாடுகளை முதுகலை ஆசிரியர் சண்முகநாதன், பட்டதாரி ஆசிரியர்கள் ராமு, கலையரசி, இடைநிலை ஆசிரியர் தமயந்தி மற்றும் மங்களேஸ்வரி, ராமதாஸ் ஆகியோர் செய்திருந்தனர்.