விருதுநகர் மாவட்டம், நரிக்குடி ஒன்றியம், முத்தனேரி, ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி மாணவர்கள் 30,000 ஆண்டுகள் பழமையான நுண்கற்கருவிகளைக் கண்டெடுத்துள்ளனர்.
பள்ளியில் செயல்படும் தொன்மைப் பாதுகாப்பு மன்றம் மூலம் பள்ளித் தலைமையாசிரியர் க.அன்புவேலன், தொல் பொருட்கள், கல்வெட்டுகளை அடையாளம் காண மாணவர்களுக்கு பயிற்சி கொடுத்து வருகிறார். இதன் எதிரொலியாக 5-ம் வகுப்பு முத்துமுருகன், 6-ம் வகுப்பு அக்ஷயா, வாணிஸ்ரீ, முகில்ராஜன், மணிகண்டன், 7-ம் வகுப்பு ராகுல், 8-ம் வகுப்பு அபி, ஜெனிகா ஆகியோர் தங்கள் வீட்டுக்கு அருகிலும், புதுக்கண்மாயிலும் கிடந்த பானை ஓடுகள், கற்கருவிகளை மேற்பரப்பாய்வில் கண்டெடுத்துத் தலைமையாசிரியரிடம் ஒப்படைத்தனர். இதுபற்றி அவர் கொடுத்த தகவலின் பேரில் ராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவனத்தின் தலைவர் வே.ராஜகுரு, கற்கருவிகளையும், அப்பகுதியையும் நேரில் ஆய்வு செய்தார். இதுபற்றி வே.ராஜகுரு கூறியதாவது,
நுண்கற்கருவிகள், இரும்புத் தாதுக்கள், கருப்பு சிவப்பு பானை ஓடுகள், சிவப்பு பானை ஓடுகள், கவண்கல், குறியீடு உள்ள பானை ஓடு, சுடுமண் கெண்டியின் நீர் ஊற்றும் மூக்குப்பகுதி, இரும்பாலான அம்பு முனைகள், பாண்டி ஆட்டத்துக்குப் பயன்படுத்திய வட்டச்சில்லுகள் ஆகியவற்றை மாணவர்கள் கண்டெடுத்துள்ளனர். இவை இடைக்கற்காலம், இரும்புக் காலம், வரலாற்றின் இடைக்காலத்தைச் சேர்ந்தவை.
இடைக்கற்காலம் கி.மு.38,000 முதல் கி.மு.7,000 வரையிலானது. இப்பகுதிகளில் கிடைக்கும் செர்ட், குவார்ட்ஸ், ஜாஸ்பர் போன்ற மிருதுவான கற்களால் செய்யப்பட்ட அளவில் சிறிய நுண்கற்கருவிகள் இக்கால மக்களால் பயன்படுத்தப்பட்டன. இவற்றை மரக்கம்புகளின் நுனியில் பொருத்தி அம்புமுனைகள், சிறுகத்திகள், சுரண்டிகளாக வேட்டையாடப் பயன்படுத்தியுள்ளனர். இவர்கள் ஆறு, ஓடைகளின் அருகில் வாழ்ந்துள்ளனர். இவ்வூரில் ஓடை அல்லது ஆறு திசைமாறி ஓடிய தடம் உள்ளது. அர்சுனா, வைப்பாறு, கிருதுமால், குண்டாறு ஆகிய ஆற்றுப்பகுதிகளில் நுண்கற்கருவிகள் கிடைத்திருக்கின்றன.
கருப்பு சிவப்பு பானை ஓடுகள், கவண்கல், இரும்புப் பொருட்கள் கி.மு.4,000 முதல் கி.மு.700 வரையிலான இரும்புக்காலத்தில் பயன்பாட்டில் இருந்தவை. இரும்புத்தாதுக்கள், இரும்பு அம்புமுனைகள் கிடைத்துள்ளதால் இரும்பு உருக்கும் தொழில் இங்கு நடந்திருக்கலாம். சிவப்பு பானை ஓடுகள் வரலாற்றின் இடைக்காலத்தைச் (கி.பி.300 – கி.பி.1,300) சேர்ந்தவை. ஒரு சிவப்பு பானை ஓட்டில் அச்சு பதித்தது போன்ற பூ, பறவை குறியீடுகள் உள்ளன.









No comments:
Post a Comment