“விடுதலை!
விடுதலை! விடுதலை! விடுதலை!
பறையருக்கும்
இங்குத் தீயர் புலையருக்கும் விடுதலை
பரவரோடு
குறவருக்கும் மறவருக்கும் விடுதலை!”
என்று பாரதி விடுதலை பாடலில் குறிப்பிடும் தீயர் என்போர் கேரளாவில்
அதிக அளவில் வாழும் ஈழவர் எனும் இனத்தாரோடு தொடர்புடைய ஒரு பிரிவினர்.
தீயர் பற்றி பழமையான தமிழி கல்வெட்டுகளில் காணப்படும் செய்திகள்
அவர்கள் தமிழகத்தின் தொன்மையான குடிமக்கள் என்பதை அறிய உதவுகிறது.
தீய + அர் என பிரித்து இதன் பொருள் காணலாம். தீய என்பதற்கு இனிமையான,
சுத்தமான, தீதான என கழகத் தமிழ் அகராதி கூறுகிறது. அர் என்பது பன்மை விகுதி. எனவே
தீயர் என்பதற்கு இனிமையானவர்கள் என பொருள் கொள்ளலாம். இவர்கள் தீ போன்ற வேகம்
கொண்ட அறப்போர் வீரர்களாய் இருந்ததனால் இப்பெயர் பெற்றிருக்கலாம். கேரளாவில்
இவர்களை ஈழவர், பணிக்கர், பாணர், கணியன், தண்டர் போன்ற பல
இனத்தாருடன் தொடர்புடைய இனமாக குறிக்கிறார்கள்.
சங்ககாலத் தொடர்பு
சங்ககாலத் தமிழகத்தில், 'தீயன்'
என்பது போர்க்கலைப் பயிற்சியுடனும் வீரத்துடனும் அறப்போர்
மரபுடனும் தொடர்புடைய
ஒரு குலமாக இருந்துள்ளது.
மாடுகளை செல்வங்களாகப் போற்றியவர்கள் தமிழர்கள். அத்தகைய மாடுகளை
கள்வர்கள் கவர்ந்து செல்வதை 'வெட்சிப்
போர் முறை' என்றும், கள்வர்களிடம் இருந்து மாடுகளை மீட்டுச் செல்வது 'கரந்தைப்
போர் முறை' எனவும் இலக்கியங்கள் குறிப்பிடும். கரந்தைப்
போர் முறையில் உயிர்நீத்த வீரர்களுக்கு நடுகல் வைத்து வழிபடுவது தமிழர் மரபு.
புலிமான் கோம்பை கல்வெட்டு
தேனி
மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகில் புலிமான் கோம்பை என்ற ஊரில் கண்டறியப்பட்ட கி.மு.3௦௦ ஆம் ஆண்டைச்
சேர்ந்த மூன்று தமிழி நடுகற்களுள் ஒன்றில் "கல் பேடு
தீயன் அந்தவன் கூடல் ஊர் ஆ கோள்" என்ற எழுத்துப் பொறிப்புள்ளது. இதற்கு, "கூடல் ஊரில் நடைபெற்ற ஆகோள் பூசலில் உயிர்நீத்த பேடு தீயன் அந்தவன் என்பவனுக்கு எடுப்பித்த கல்" எனப் பொருள்
கொள்வதால் இது வெட்சிப் போரில் ஈடுபட்ட வீரனுக்கு எடுக்கப் பெற்றதாகும்.
எனவே, இந்நடுகல்லில் குறிப்பிடப்படும் தீயன் அந்துவன் என்பவன்
ஆனிரைகளை மீட்கும் முயற்சியில் இறந்துள்ளதால்
அவனுக்கு
நடுகல் எடுத்துள்ளனர் என்பதை நாம் உணர்ந்துகொள்ளலாம்.
அந்தவன் என்பது இந்நடுகல் வீரனது
பெயராகும். தீயன் என்பது இவனது குலமாக
இருக்க வேண்டும்.
நாணயத்தில் தீயர் பெயர்
சமீபத்தில் நாணயவியல் அறிஞர் தினமலர்
இரா. கிருஷ்ணமூர்த்தி
அவர்கள் கண்டறிந்த ஒரு காசில் சிங்கத்துடன் போரிடும் வீரன் ஒருவனின் உருவத்தின்
கீழ் 'தீயன்' என்று தமிழி எழுத்துகளில் பொறிக்கப்பட்டிருந்தது.
அவர்கள் வீரக்குடிகள் என்பதற்கான ஆதாரமாக இதைக் கொள்ளலாம்.
திருப்பரங்குன்றம் கல்வெட்டு
திருப்பரங்குன்றம்
மலையில் பொறிக்கப்பட்டுள்ள கி.மு. முதலாம் நூற்றாண்டைச்
சேர்ந்த தமிழி கல்வெட்டில் 'அந்துவன்'
என்ற பெயர் குறிப்பிடப்படுகிறது. இக்கல்வெட்டில் குறிப்பிடப்படும்
அந்துவன், தீயர் சமூகப் பிரிவினனாகவே இருக்க வேண்டும்.
அதே
மலையில் கி.பி. முதல் நூற்றாண்டைச் சேர்ந்ததாகக் கருதப்படுகிற
"எருகாடூர் இழகுடும்பிகன்
(ஈழக் குடும்பிகன்) போலாலையன்" என்பவனின் பெயர்
குறிப்பிடப்படுகிறது. அதேபோல் சங்க காலப் புலவர்களில் ‘மதுரை
ஈழத்துப் பூதன் தேவனார்’ என்ற ஈழவர்
சமூகத்தைச் சேர்ந்த ஒருவர் இருந்துள்ளார். இதன் மூலம் அந்துவன் அல்லது அந்தவன்
என்ற பெயர் மதுரைப்
பகுதியில் பரவலாக வழங்கியுள்ளது என்பதையும் தீயர், ஈழவர் சமூகத்தவர்கள் குறிப்பிடத்தக்க சமூக அங்கீகாரத்துடன்
வாழ்ந்துள்ளார்கள் என்பதையும் உணர
முடிகிறது.
விக்கிரமங்கலம் கல்வெட்டு
மதுரை மாவட்டம் விக்கிரமங்கலம் மலைக்குன்றில் உள்ள ஒரு தமிழி
கல்வெட்டில், “எம் ஊர் சிழிவன் அதன் தியன்” என தீயன் சமூகத்தைச் சேர்ந்த சிழிவன் அதன் என்பவர் பெயர்
குறிப்பிடப்பட்டுள்ளது. இது கி.மு இரண்டாம் நூற்றாண்டைச்
சேர்ந்தது.
பிற்காலக்
கல்வெட்டுக்கள்
கி.பி. 10-12 ஆம்
நூற்றாண்டைச் சேர்ந்த தமிழகக் கல்வெட்டுகளில்
'தீயமாள்வான்'
என்ற அடைமொழியுடன் குறிப்பிடப்படும் வீரர்கள் தீயர் குலத்தைச்
சேர்ந்தவர்களாகவே இருக்கவேண்டும்.
கி.பி. 13 ஆம் நூற்றாண்டைச்
சேர்ந்த விருதுநகர் மாவட்டம் நரிக்குடி
கல்வெட்டில் பருத்திக்குடி நாட்டு தீயனேரி என்ற ஊர் குறிக்கப்படுகிறது.
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை பகுதியில் தீயாண்டைக்குடி நாடு என
நாட்டுப் பிரிவு கி.பி. 10 ஆம்
நூற்றாண்டுக்குப் பிந்தைய காலகட்டத்தில் இருந்துள்ளது. ஆண்டை என்பது தலைமைப்
பதவியில் இருந்தவர்களைக் குறிக்கும் சொல். தீயர்கள் இப்பகுதியின் தலைமைப் பதவியில்
பாண்டியர்கள் காலத்தில் இருந்திருக்கலாம்.
இடைக்காலக் கல்வெட்டுக்களில், இங்கள் நாட்டு தீயங்குடி எனக்
குறிக்கப்படும் ஊர் திருவாரூர் அருகில் உள்ள தீபங்குடியாக இருக்கலாம். தீயங்குடி
பின்னாளில் தீபங்குடி என திரிந்திருக்கலாம். இவ்வூரில் தற்போதும் வழிபாட்டில் உள்ள
சமணர் கோயில் ஒன்று உள்ளது.
தற்போதும் தீயர் பெயர் குறிக்கும் ஊர்கள்
இராமநாதபுரத்தில் இருந்து மதுரை செல்லும் பெருவழியில், சத்திரக்குடி
அருகில் ஒரு தீயனூர் உள்ளது. அதே வழியில் பார்த்திபனூர் மானாமதுரை இடையில் ஒரு
தீயனூர் உள்ளது. இந்த தீயனூர் தீயாண்டைக்குடி நாட்டில் இருந்ததாக இடைக்காலத்தைச்
சேர்ந்த கல்வெட்டுக்கள் தெரிவிக்கின்றன. மானாமதுரையிலிருந்து அருப்புக்கோட்டை
செல்லும் வழியில் நரிக்குடி அருகில் துய்யனூர் என அழைக்கப்படும் ஊர் உள்ளது. அப்பகுதி
மக்கள் இவ்வூரை பேச்சு வழக்கில் தீயனூர் என்றே அழைக்கிறார்கள்.
மதுரையில் ஒத்தக்கடை பகுதியைச் சேர்ந்த அரும்பனூர் ஊராட்சியில் தீயனேரி என்ற ஊர் உள்ளது. அப்பகுதியில் தத்தனேரி,
சிலையனேரி, உலகனேரி,
தோடனேரி, தூயனேரி
பல ஊர்கள் ஏரிகள் பெயரில் உருவாகியுள்ளன. தீயனேரி என்பதே தூயனேரி எனத்
திரிந்துள்ளது.
அரியலூர் மாவட்டத்தில் பெருமாள் தீயனூர், உடையவர் தீயனூர் என இரு
ஊர்கள் உள்ளன. சென்னையில் செங்குன்றம் அருகில் தீயம்பாக்கம் என ஒரு ஊர் உள்ளது. விழுப்புரம்
மாவட்டம் செஞ்சி அருகில் உள்ள தீவனூர் தீயனூரின் திரிபாக இருக்கலாம்.
தீயர்
தமிழகத் தொல்குடிகளே
தீயன் அந்தவன் என்ற பெயர் காணப்படும் புலிமான்கோம்பை தமிழ் பிராமிக்
கல்வெட்டு சுத்தமான தமிழில் உள்ளது. இது மதுரை மாங்குளம் கல்வெட்டுக்கும் முந்தைய
காலத்தைச் சேர்ந்தது. மாங்குளம் கல்வெட்டில் உள்ளது போல் பிறமொழிக் கலப்பு இதில்
இல்லை. இந்தியாவின் மிகப்பழமையான கல்வெட்டாக புலிமான்கோம்பை கல்வெட்டு உள்ளது. எனவே
தீயம் என்பது த்வீபம் என்ற சமஸ்கிருதச் சொல்லின் தமிழ்த் திரிபு
என்பது ஏற்கத்தக்கதல்ல.
தீயர்கள் போர்த்தொழில், உழவுத்தொழில், வணிகம் ஆகிய தொழிலில் சங்க
காலம் முதல் ஈடுபட்டிருந்த இனத்தாராய் இருந்திருக்கவேண்டும். தீயர்
போர்த்தொழில் புரிந்தவராய் இருந்ததற்கு தமிழி கல்வெட்டு
ஆதாரங்கள் உள்ளன. அவர்கள் பயிர்த்தொழில் செய்வோராகவும் இருந்துள்ளனர்
என்பதை கேரளாவின் சீரியன் கிறிஸ்தவர்கள் செப்பு பட்டயத்தால் அறியமுடிகிறது.
எனவே தீயர்
என்போர் கி.பி. 13 ஆம் நூற்றாண்டு
வரையிலான காலத்தில் தமிழகம் முழுவதும் வாழ்ந்த தொல்குடிகள் என ஊகிக்கலாம். அவர்கள்
பெயரால் தமிழகம் முழுவதும் பரவலாக உள்ள ஊர் பெயர்களால் இதை அறியமுடிகிறது. தற்போது
கேரளாவில் வாழும் தீயர்கள் தமிழ்நாட்டில் இருந்தே சென்றிருக்க வேண்டும். அவர்கள்
அறம் சார்ந்த போர்க்குடிகளாய் இருந்துள்ளனர். அக்கால சமுதாய நிலை மற்றும் ஆதிக்க இனத்தவரின் அச்சுறுத்தல் போன்ற காரணங்களால் அவர்கள் கேரளாவுக்கு இடம் பெயர்ந்திருக்கலாம்.
தற்போது தீயர் என்ற பெயரிலான இனக்குழு தமிழகத்தில் சுத்தமாக இல்லை. கேரளாவுக்கு இடம்
பெயர்ந்தவர்கள் போக மீதமுள்ள மக்கள் தங்கள் சமூக அடையாளங்களை மறைத்து இங்கேயே வேறு
பெயர்களில் வாழ்ந்து வருபவர்களாய் இருக்கவேண்டும். தற்போதும் கேரளாவில் உள்ள
தீயர்கள் பழனி முருகன் கோயிலுக்கு புனிதப்பயணம் வருகின்றனர் என்பது அவர்களின்
தமிழகத் தொடர்புக்கு ஆதாரமாக உள்ளது.
தீயர்களுடன்
தொடர்புடைய இனமாகக் குறிக்கப்படும் ஈழவர், பணிக்கர், பாணர், கணியன்,
தண்டர் போன்று இவர்களும் மருமக்கள் வழி மற்றும்
மக்கள் வழியினராக உள்ளனர். தெய்யம் எனும் கலை தீயர்களுக்கு உரிய கலையாக இருந்துள்ளது.
இது தீயம் எனும் சொல்லில் இருந்து பிறந்த சொல்லாக உள்ளது. மேலும் தெய்யம் எனும்
கலையில் அந்த நடனத்தைச் செய்பவர்கள் யாரும் தங்களை அடையாளம் காணமுடியாத அளவுக்கு
வேடமிட்டிருப்பர். இது மறைந்து அல்லது தங்கள் அடையாளங்களை மறைத்து வாழ்வதில்
அவர்கள் வல்லவர்கள் என்பதை உணர்த்துவதாக உள்ளது.
மேலும்
பஞ்சபாண்டவர் போன்று ஒரு குடும்பத்தைச் சேர்ந்த அண்ணன் தம்பிகள் அனைவரும் ஒரே
பெண்ணை மணக்கும் வழக்கும் தீயர்களிடம் இருந்ததாக ‘தென்னிந்திய குலங்களும்
குடிகளும்’ என்ற நூலில் எட்கர் தர்ஸ்டன் கூறுகிறார். பஞ்சபாண்டவர் யாருக்கும்
அடையாளம் தெரியாத வண்ணம் மறைந்து வாழ்ந்தவர்கள் என்பது அனைவரும் அறிந்ததே.
இவர்களிடம் பாண்டவர்கள் போன்ற பழக்கவழக்கங்கள் காணப்படுகின்றன.
மேலும் மதுரை உள்ளிட்ட தமிழகம் முழுவதும் உள்ள பெரும்பாலான
மலைக்குன்றுகளை பஞ்சபாண்டவர் மலை என்றே அந்தந்த பகுதி மக்கள் அழைக்கிறார்கள்.
பஞ்சபாண்டவர் மலை என அழைக்கப்படும் பகுதிகள் சங்ககாலத்ததிற்கு முன் தீயர்கள்
வாழ்ந்த பகுதிகளாக இருக்கலாம். பின் அவர்கள் சமநிலப்பகுதிகளில் ஊர் அமைத்து
வாழத் தொடங்கி இருக்கவேண்டும் எனக் கருதலாம்.
பின்னாளில் தீயர்களில் இருந்து ஈழவர் என்ற புது இனக்குழு தோன்றி
இருக்கவேண்டும். ஈழவர்களை பணிக்கன், கணியன், ஈழச்சான்றான், பாணினி, சாணார்,
இல்லத்துப்பிள்ளை என பல பெயர்களில் அழைப்பார்கள். இவர்களை தீயர்களில் இருந்து
தோன்றிய அவர்களின் மேம்பட்ட இனமாக கருதலாம். தற்போதும் கேரளாவில் களரி என்ற
போர்ப்பயிற்சி அளிக்கும் ஆசிரியர்களாய் ஈழவர் உள்ளனர். ஈழவர்
சமூகத்தவர் போர்க்கலைப் பயிற்சியில் தேர்ந்தவர்கள்
என்பதும் போர்க்கலையைக் கற்பிக்கும் ஆசான் மரபினர் என்பதும்
வடக்கன் பாட்டுகள்
என்ற கேரள நாட்டின் பழமையான நாட்டுப் பாடல்களால் தெரிய
வருகிறது.
இராமநாதபுரம்
மாவட்டத்தில் உத்தரகோசமங்கை அருகில் களரி என்ற ஊர் உள்ளது. இது ஆவணக்காப்பகமாக
செயல்பட்ட ஆவணக்களரியாக இருக்கலாம். அல்லது களரிப் பயிற்சி அளிக்கும் ஈழவர் சமுதாயத்தைச்
சேர்ந்தவர்கள் குடியிருப்பாக இருந்திருக்கலாம். களரிக்கு மிக அருகில் உள்ள
கீழச்சீத்தையில் சங்ககாலக் குடியிருப்பு இருந்துள்ளது சமீபத்தில்
கண்டறியப்பட்டுள்ளது குறிப்பிடத்தகுந்தது.
மேற்கண்ட சான்றுகள் மூலம் தீயர் தமிழகத்தின் தொல்குடிகள் என்பதை
அறிந்துகொள்ளலாம். இது பற்றி மேலும் ஆய்வு செய்தால் பல புதிய விவரங்கள்
தெரியவரும்.