Pages

Thursday, 18 December 2014

தேரிருவேலியின் தொன்மைச் சிறப்புகள் - வே.இராஜகுரு



          ராமநாதபுரத்தில் இருந்து முதுகுளத்தூர் செல்லும் சாலையில் உத்திரகோசமங்கை அருகில் உள்ள ஊர் தேரிருவேலி. இவ்வூரிலிருந்து 2 கி. மீ தூரத்தில் குண்டாறு ஓடுகிறது. 
     இவ்வூரின் வரலாற்றுக்குச் சான்றாக இலக்கியக் குறிப்புகள், கல்வெட்டுகள் தும் கிடைக்கவில்லை. எனினும் தமிழ்நாடு தொல்லியல் துறையினர் இங்கு  மேற்கொண்ட மேற்பரப்பாய்வில் நுண்கற்கால கருவிகள் செய்வதற்கான மூலக்கற்கள், ரோமானிய ரௌலட்டட் பானை ஓடுகள் கிடைத்திருப்பது வ்வூரின் பழமைக்குச் சான்றாகத் திகழ்கின்றன. 
          இவ்வூரின் வடமேற்கில் உள்ள பெரிய ஏரி இருவேலி கண்மாய் என அழைக்கப்படுகிறது. இக்கண்மாயின் பெயரால் இவ்வூர் தேரிருவேலி என அழைக்கப்பட்டிருக்கலாம். அல்லது உத்திரகோசமங்கை தேர்த்திருவிழாவிற்காக இங்கு இருவேலி நிலம் அளிக்கப்பட்டு, அதனால் தேரிருவேலி என அழைக்கப்பட்டிருக்கலாம். 
          இங்கு தொல்லியல் துறையினர் நடத்திய அகழாய்வில், பானை ஓடுகள், சங்கு வளையல்கள், மான் கொம்புகள், முதுமக்கள் தாழி, தமிழ் பிராமி எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட பானை ஓடுகள், குறியீடுகள் கொண்ட பானை ஓடுகள் ஆகியவை கண்டெடுக்கப்பட்டன. 
          இங்கு கிடைத்த பானை ஓடுகளில் 67 வகையான குறியீடுகளும், 7 எழுத்துப்பொறிப்புகளும் காணப்படுகின்றன. மீன், சூரியன், ஆமை, தராசு, அம்பு, திரிசூலம், உடுக்கை, அம்புமுனை, வில், மரம் போன்ற குறியீடுகள் பானை ஓடுகளில் காணப்படுகின்றன. 
          பனை ஓடுகளில் உள்ள குறியீடுகள் குலக்குறியீடுகளாக இருக்கலாம். எழுத்துக்கள் பயன்படுத்துவதற்க்கு முன்பு குறியீடுகள் எழுத்துக்களாகப் பயன்பட்டிருக்கலாம். பின்பு எழுத்துக்களும் பயன்படுத்தப்பட்டிருக்கலாம். பானை ஒட்டில் குறியீடுகள் கீறப்பட்ட வடிவத்திலேயே கிடைக்கின்றன. 
          பழந்தமிழ் எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட பானை ஓடுகள் இப்பகுதியில் கிடைக்கப்பட்டதன் மூலம் இப்பகுதியில் எழுத்தறிவு பெற்ற சான்றோர்கள் இருந்திருக்கலாம் எனத் தெரிகிறது. கொற்றன், நெடுங்கிள்ளி, சாத்தன் போன்ற குறுநில சோழ மன்னர்களின் பெயரையும், வணிகரையும் குறிக்கும் சொற்க்களுடன் பானை ஓடுகள் கிடைப்பதால் இப்பகுதி மக்களின் சிறப்பை அறியலாம்.
     மான் கொம்புகளும், விங்குளின் எலுப்புகளும் இங்கு கிடைப்பதைக்கொண்டு பார்க்கும்போது இப்பகுதி மக்கள் வேட்டைத்தொழில் மற்றும் மீன்பிடித்தொழில் செய்து வந்தார்கள் என ஊகிக்க முடிகிறது. பானைக்குறியீடுகளில் வில், அம்பு, ஆமை, மீன் ஆகியவற்றைக் கொண்டும் அவர்களின் தொழிலை அறியலாம். 
     இங்கு கிடைக்கும் ரௌலட்ட், ஆம்போரா பானை ஓடுகள் மூலம் இவர்கள் ரோமானியர்களுடன் வணிகத் தொடர்பில் இருந்திருக்கலாம். சூதுபவள மணிகள், வழுவழுப்பான வடஇந்திய கருப்புப்பானை  ஓடுகளும் இவ்வூர் மக்கள் குஜராத் மற்றும் வட இந்திய நகரங்களோடு நிலவழியாகவோ, நீர்வழியாகவோ தொடர்பில் இருந்திருக்கலாம். 
     பானை ஓடுகளில் சூரியன், கடிமரம், திரிசூலம், ஸ்வஸ்திகம் ஆகிய குறியீடுகள் இருப்பதைக்கொண்டு, இப்பகுதி மக்கள் இயற்கை வழிபாட்டைப் பின்பற்றி பின்பு சமயங்களைப் போற்றினார் என் அறிய முடிகிறது. 
     மேற்கண்ட அகழாய்வுப் பொருள்கள் மூலம் தேரிருவேலி கி.மு.300 முதல் கி.பி. 300 வரை உள்ள காலகட்டத்தில் சிறப்புடன் இருந்தது என அறிய முடிகிறது. 

நூறாண்டு கண்ட பாம்பன் பாலம் - வே.இராஜகுரு




   இராமேஸ்வரத்தைச் சுற்றி கடல் இருந்தாலும் பாம்பனுக்கும் மண்டபத்துக்கும் இடையில் குதிரை தாண்டும் தூரத்தில் பாம்பன் கால்வாய் அமைந்திருந்தது. கி.பி.1480 ஆம் ஏற்பட்ட மிகக் கொடிய புயல் காரணமாக அந்தக் கால்வாய் பெரியதாக ஆனது. தொடர்ந்து ஏற்பட்ட புயல்களின் காரணமாக கடல்நீர் நிலையாக ஏற்பட்டு இராமேஸ்வரம் தனித் தீவானது. 

     பாம்பன் கால்வாயின் மொத்த நீளம் 2.3 கி.மீ தூரம் ஆகும். பாம்பன் கால்வாயில் பாலம் கட்டுவதற்கு கி.பி.1810 இல் ஆங்கிலேய அரசு ஒப்புதல் அளித்தது. பாம்பனுக்கும் மண்டபத்திற்கும் இடையே கீழே கப்பலும் மேலே இரயிலும் செல்லக்கூடிய ஒரு பாலத்தைக் கட்டுவதென்றும், இந்தியாவின் தனுஷ்கோடிக்கும் இலங்கையிலுள்ள தலை மன்னாருக்கும் சிறு கப்பல் போக்குவரத்து நடத்துவதென்றும் கி.பி.1912 இல் முடிவு செய்யப்பட்டது.



இந்திய நாட்டின் நிப்பகுதியையும், இராமேஸ்வரம் தீவையும் இணைக்கும் இந்தப்பாலம் மணற்கல்லுடன்  கூடிய பவளப்பாறையில் 6740 அடி நீளத்துடன் கட்டப்பட்டிருக்கிறது. இந்த இடத்தில் தண்ணீரின் ஆழம் பாறைக்கு மேல் 6 அல்லது 7 அடி தான். பாம்பனுக்கு அருகே கடலில் கி.பி.1837 இல் இங்கிலாந்து பொறியியல் நிபுணர்கள் ஒரு கால்வாய் வெட்டி 12 அடி அகலமுள்ள படகுகள் செல்ல வழி வகுத்தனர். 

      கி.பி. 1911 ஜூன் மாதம் வேலை தொடங்கி கி.பி.1913 ஜூலை மாதம் வேலை முடிவடைந்ததது. நாற்பது அடி நீளமுள்ள 145 தூண்களைக் கொண்டு பாலம் கட்டப்பட்டுள்ளது. கப்பல்கள் செல்ல வழி விடும் தூக்குப்பாலம் 214 அடி நீளமுள்ளது. இப்பாலம் கட்டுவதற்கு தேவையான கற்கள் 170 கி.மீ. தூரத்திற்க்கு அப்பால் இரயில் மூலம் கொண்டு வரப்பட்டது.






   இடையில் வடகிழக்கு பருவக்காற்றால் ஏற்பட்ட புயல்களில் ஆறு மாத காலம் வேலை நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.
   
  இப்பாலம்  கட்ட 4,000 டன் சிமெண்ட் 1,36,000 கனசதுரஅடி களிமண் 1,800 கன சதுரஅடி மணல் 80,000 கன சதுரஅடி அளவுள்ள பெரும்பாறைகள், 2,600 டன் இரும்பு பயன்படுத்தப்பட்டுள்ளன.

     தூக்குப்பாலம் பகுதி அமைக்கும் பணி 1913 ஜூலை மாதம் தொடங்கி டிசம்பர் மாதம் முடிந்தது.

     இப்பாலத்தில் முதல் இரயில் 1914 பிப்ரவரி 24 இல் விடப்பட்டது. சென்னையில் இருந்து இலங்கையின் கொழும்புக்குச் செல்வதற்காகவே இந்த பாலம் அமைக்கப்பட்டது. இதை போட்  மெயில் சேவை என ஆங்கிலேயர் அழைத்தனர். சென்னையிலிருந்து தனுஷ்கோடி வரை இரயிலில் பயணம் செய்து, பின்பு தனுஷ்கோடி முதல் தலைமன்னருக்கு சிறு கப்பல் மூலம் பயணித்து அங்கிருந்து மீண்டும் கொழும்புக்கு இரயில் சேவை அமைக்கப்பட்டது.





  1964 ஆம் ஆண்டு தனுஷ்கோடியை புயல் தாக்கியது இப்பாலம் சிறிதளவு சேதமடைந்தது. எனவே 45 நாள்கள் பராமரிப்புக்கு பின் மீண்டும் திறக்கப்பட்டது. 2007 இல் மதுரை முதல் இரமேஸ்வரம் வரை அகல ரயில் பாதை அமைக்கப்பட்டபோது, பாம்பன் பாலத்தின் குறுகிய தண்டவாளங்கள் நீக்கப்பட்டு அகல இரயில் பாதையாக  நமது பொறியாளர்களால் மாற்றியமைக்கப்பட்டது. 2007 க்கு  முன்பு வரை கப்பல் வரும்போது, தூக்குப்பாலத்தை மனிதர்களே இயக்கினார்கள். 2007 க்குப் பிறகு இயந்திரங்களால் தூக்குப்பாலம் இயக்கப்படுகிறது.






  நூறாண்டுகள் கடந்தும் கம்பீரமாக நிற்கும் இப்பாலத்தில் இரயில்கள் மிக மெதுவான வேகத்திலேயே செல்கின்றன. இப்பாலம் காற்றின் வேகத்தால் அவ்வப்போது பாதிக்கப்பட்டு வருகிறது. மேலும் இப்பாலத்தில் எந்த ஒரு விபத்தும் நடைபெறா வண்ணம் மிகப்பாதுகாப்பாக ரயில் சேவை நடைபெறுகிறது. நூறாண்டு கடந்து  பெருமை கொண்ட இந்தியாவின் மிக நீளமான கடல் பாலம் இது மட்டும்தான். இதை உலகப் பாரம்பரிய களமாக அறிவிக்க உரிய முயற்சிகள் நடைபெற்று வருகின்றன. 2,600 டன் இரும்பு பயன்படுத்தி கட்டப்பட்டிருக்கும் இப்பாலம்  உள்ள பாம்பன் பகுதி உலகிலேயே இரண்டாவது அதிகளவு துருப்பிடிக்கும் கடல்பகுதி என்பது குறிப்பிடத்தக்கது.