Pages

Thursday, 18 December 2014

நூறாண்டு கண்ட பாம்பன் பாலம் - வே.இராஜகுரு




   இராமேஸ்வரத்தைச் சுற்றி கடல் இருந்தாலும் பாம்பனுக்கும் மண்டபத்துக்கும் இடையில் குதிரை தாண்டும் தூரத்தில் பாம்பன் கால்வாய் அமைந்திருந்தது. கி.பி.1480 ஆம் ஏற்பட்ட மிகக் கொடிய புயல் காரணமாக அந்தக் கால்வாய் பெரியதாக ஆனது. தொடர்ந்து ஏற்பட்ட புயல்களின் காரணமாக கடல்நீர் நிலையாக ஏற்பட்டு இராமேஸ்வரம் தனித் தீவானது. 

     பாம்பன் கால்வாயின் மொத்த நீளம் 2.3 கி.மீ தூரம் ஆகும். பாம்பன் கால்வாயில் பாலம் கட்டுவதற்கு கி.பி.1810 இல் ஆங்கிலேய அரசு ஒப்புதல் அளித்தது. பாம்பனுக்கும் மண்டபத்திற்கும் இடையே கீழே கப்பலும் மேலே இரயிலும் செல்லக்கூடிய ஒரு பாலத்தைக் கட்டுவதென்றும், இந்தியாவின் தனுஷ்கோடிக்கும் இலங்கையிலுள்ள தலை மன்னாருக்கும் சிறு கப்பல் போக்குவரத்து நடத்துவதென்றும் கி.பி.1912 இல் முடிவு செய்யப்பட்டது.



இந்திய நாட்டின் நிப்பகுதியையும், இராமேஸ்வரம் தீவையும் இணைக்கும் இந்தப்பாலம் மணற்கல்லுடன்  கூடிய பவளப்பாறையில் 6740 அடி நீளத்துடன் கட்டப்பட்டிருக்கிறது. இந்த இடத்தில் தண்ணீரின் ஆழம் பாறைக்கு மேல் 6 அல்லது 7 அடி தான். பாம்பனுக்கு அருகே கடலில் கி.பி.1837 இல் இங்கிலாந்து பொறியியல் நிபுணர்கள் ஒரு கால்வாய் வெட்டி 12 அடி அகலமுள்ள படகுகள் செல்ல வழி வகுத்தனர். 

      கி.பி. 1911 ஜூன் மாதம் வேலை தொடங்கி கி.பி.1913 ஜூலை மாதம் வேலை முடிவடைந்ததது. நாற்பது அடி நீளமுள்ள 145 தூண்களைக் கொண்டு பாலம் கட்டப்பட்டுள்ளது. கப்பல்கள் செல்ல வழி விடும் தூக்குப்பாலம் 214 அடி நீளமுள்ளது. இப்பாலம் கட்டுவதற்கு தேவையான கற்கள் 170 கி.மீ. தூரத்திற்க்கு அப்பால் இரயில் மூலம் கொண்டு வரப்பட்டது.






   இடையில் வடகிழக்கு பருவக்காற்றால் ஏற்பட்ட புயல்களில் ஆறு மாத காலம் வேலை நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.
   
  இப்பாலம்  கட்ட 4,000 டன் சிமெண்ட் 1,36,000 கனசதுரஅடி களிமண் 1,800 கன சதுரஅடி மணல் 80,000 கன சதுரஅடி அளவுள்ள பெரும்பாறைகள், 2,600 டன் இரும்பு பயன்படுத்தப்பட்டுள்ளன.

     தூக்குப்பாலம் பகுதி அமைக்கும் பணி 1913 ஜூலை மாதம் தொடங்கி டிசம்பர் மாதம் முடிந்தது.

     இப்பாலத்தில் முதல் இரயில் 1914 பிப்ரவரி 24 இல் விடப்பட்டது. சென்னையில் இருந்து இலங்கையின் கொழும்புக்குச் செல்வதற்காகவே இந்த பாலம் அமைக்கப்பட்டது. இதை போட்  மெயில் சேவை என ஆங்கிலேயர் அழைத்தனர். சென்னையிலிருந்து தனுஷ்கோடி வரை இரயிலில் பயணம் செய்து, பின்பு தனுஷ்கோடி முதல் தலைமன்னருக்கு சிறு கப்பல் மூலம் பயணித்து அங்கிருந்து மீண்டும் கொழும்புக்கு இரயில் சேவை அமைக்கப்பட்டது.





  1964 ஆம் ஆண்டு தனுஷ்கோடியை புயல் தாக்கியது இப்பாலம் சிறிதளவு சேதமடைந்தது. எனவே 45 நாள்கள் பராமரிப்புக்கு பின் மீண்டும் திறக்கப்பட்டது. 2007 இல் மதுரை முதல் இரமேஸ்வரம் வரை அகல ரயில் பாதை அமைக்கப்பட்டபோது, பாம்பன் பாலத்தின் குறுகிய தண்டவாளங்கள் நீக்கப்பட்டு அகல இரயில் பாதையாக  நமது பொறியாளர்களால் மாற்றியமைக்கப்பட்டது. 2007 க்கு  முன்பு வரை கப்பல் வரும்போது, தூக்குப்பாலத்தை மனிதர்களே இயக்கினார்கள். 2007 க்குப் பிறகு இயந்திரங்களால் தூக்குப்பாலம் இயக்கப்படுகிறது.






  நூறாண்டுகள் கடந்தும் கம்பீரமாக நிற்கும் இப்பாலத்தில் இரயில்கள் மிக மெதுவான வேகத்திலேயே செல்கின்றன. இப்பாலம் காற்றின் வேகத்தால் அவ்வப்போது பாதிக்கப்பட்டு வருகிறது. மேலும் இப்பாலத்தில் எந்த ஒரு விபத்தும் நடைபெறா வண்ணம் மிகப்பாதுகாப்பாக ரயில் சேவை நடைபெறுகிறது. நூறாண்டு கடந்து  பெருமை கொண்ட இந்தியாவின் மிக நீளமான கடல் பாலம் இது மட்டும்தான். இதை உலகப் பாரம்பரிய களமாக அறிவிக்க உரிய முயற்சிகள் நடைபெற்று வருகின்றன. 2,600 டன் இரும்பு பயன்படுத்தி கட்டப்பட்டிருக்கும் இப்பாலம்  உள்ள பாம்பன் பகுதி உலகிலேயே இரண்டாவது அதிகளவு துருப்பிடிக்கும் கடல்பகுதி என்பது குறிப்பிடத்தக்கது.



தொல்லியல் நோக்கில் தொண்டி - வே.இராஜகுரு



தமிழகத்தில் சிறப்புடன் விளங்கியவை  இரண்டு தொண்டி துறைமுகங்கள். ஒன்று அரபிக் கடலோரம் சேர நாட்டில் உள்ள தொண்டி. மற்றொன்று வங்கக்கடலோரம் பாண்டிய நாட்டில் இருக்கும் தொண்டி.
     வங்கக் கடலோரம் பாண்டிய நாட்டில் உள்ள நமது தொண்டியின்  சிறப்புகளை சிலப்பதிகாரம் கூறுகிறது. கிழக்கிலிருந்து வரும் காற்று தொண்டி துறைமுகத்தில் குவிக்கப்பட்டுள்ள அகில், துகில், ஆரம், கற்பூரம் ஆகிய பொருள்களின் வாசனைகளை சுமந்து கொண்டு மதுரை வருகிறது என தொண்டி பற்றிய செய்தி சிலப்பதிகாரத்தில் உள்ளது.
     சேதுப்பாதையில் அமைந்துள்ள தொண்டி பாண்டியர் ஆட்சிக்காலத்தில் இடையளநாடு, தலையூர் நாடு என வழங்கப்பட்ட பகுதியில் இருந்துள்ளது. சங்ககாலத்தில் அயல்நாட்டு வாணிகத்  தொடர்புக்கு என பாண்டியர்களுக்கு முக்கியமான இரு துறைமுகங்களாக விளங்கியவை கொற்கையும், அழகன் குளமும் ஆகும். கொற்கை தாமிரபரணி ஆற்றுக் கரையிலும் அழகன்குளம் வைகைக்கரையிலும் அமைந்துள்ளன.
     பாண்டிக்கோவை என்ற நூல் கி.பி.7ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த நெடுமாறன் என்ற பாண்டிய மன்னனின் துறைமுகமாக தொண்டி விளங்கியதாக தெரிவிக்கிறது. யாப்பெருங்கலக்காரிகை உரையில் கி.பி. 9ஆம் நூற்றாண்டில் ஆண்ட வரகுண பாண்டியன் காலத்தில் இவ்வூர் வரகுணன் தொண்டி என அழைக்கப்பட்டதாகக் கூறுகிறது.
     நந்திக்கலம்பகம் என்ற நூல் பல்லவ மன்னனான மூன்றாம் நந்திவர்மனை தொண்டியைக் கைப்பற்றியதற்காக பாராட்டுகிறது. மேற்கண்ட இலக்கிய தகவல்கள் மூலம் சிலப்பதிகார காலம் முதல் கி.பி.9 ஆம் நூற்றாண்டு வரை தொண்டி முக்கிய துறைமுகமாக இருந்துள்ளது என்பதை அறிய முடிகிறது.
     கொற்கை, அழகன்குளம் ஆகிய துறைமுகங்கள் தங்கள் முக்கியத்துவத்தை இழந்தபோது தொண்டி ஒரு முக்கியத் துறைமுகமாக மாறியது. தொண்டியைக் கைப்பற்றுவதற்காகப் பாண்டிய, சோழ, இலங்கை மன்னர்களுக்கிடையே போர் நடந்து வந்துள்ளது. இலங்கை மன்னன் தொண்டியைக் கைப்பற்றிய பின்பு மதுரை நோக்கி முன்னேறினான் என சொல்லப்படுகிறது.
     சோழர் படை இலங்கைப் படையை தொண்டியில் வைத்து தோற்கடித்து துரத்தியது என ஆற்பாக்கம் கல்வெட்டு கூறுகிறது. கி.பி.12 முதல் 14 ஆம் நூற்றாண்டுகளில் பிற்காலப் பாண்டியர் ஆட்சியின் போது கிழக்கு நாடுகளுடன் முக்கியமான வாணிகத் துறைமுகமாக தொண்டி விளங்கியது. இப்பகுதியில் கிடைத்த சீன மண்பாண்டங்களின் மூலம் இதை அறிய முடிகிறது.
     ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில்  பர்மாவில் இருந்து தேக்கு மரங்களை நகரத்தார்கள் தொண்டி துறை முகம் வழியாக இக்குமதி செய்துள்ளார்கள். அப்போது இங்கிருந்து இலங்கைக்கு 200 பயணிகள் பயணம் செய்யும் கப்பல் போக்குவரத்து நடந்து வந்துள்ளது.
     தொண்டி என்றால் கடற்கழி எனப்பொருள். தொண்டியில் உள்ள  கழிமுகப்பகுதியின் மூலம் இவ்வூருக்கும் இப்பெயர்  வந்திருக்கலாம்.  இலக்கியதீபம்  என்ற நூல் தொண்டியை கானலன் தொண்டி என அழைக்கிறது இதன் பொருள்  கடலால்  பிரித்து தனியாக்கப்பட்டது ஆகும். 
     இவ்வூரிலுள்ள  சிவன் கோயிலில் காணப்படும் கல்வெட்டுக்கள் தொண்டியை பவித்ரமாணிக்கப்பட்டினம் என அழைக்கிறது. அதன் பொருள் தூய்மையான அரசன் என்பது. இது முதலாம் இராஜராஜசோழனின் பெயர்களில் ஒன்று ஆகும். சோழர்கள் ஆட்சிக்காலத்தில் இவ்வூர் முக்கியத்துவம் பெற்று விளங்கி இருந்திருப்பதை இது காட்டுகிறது. கைக்களங்குளம் எனும் கண்மாயில் கிடைத்த வீராபாண்டிய மன்னனின் கல்வெட்டு அதை கழிகணக்குளம் எனக் கூறுகிறது.
     தொண்டியம்மன் கோயில் பகுதில் 1980 ஆம் ஆண்டு தொல்லியல் துறையால் நடத்தப்பட்ட அகழாய்வில் முதலாம் இராஜராஜ சோழன் கால செப்புக்காசு ஒன்றும் நாயக்க மன்னர்கள் கால செப்புக் காசு இரண்டும் கண்டெடுக்கப்பட்டது. இதன் மூலம் தொண்டியின் பழம் பெருமையை நாம் அறிந்து கொள்ள முடிகிறது.

அழகன்குளம் அகழாய்வு - வே.இராஜகுரு

கிறிஸ்து பிறப்பதற்க்கு முன்பே தமிழ்நாட்டின் சில துறைமுகங்கள் எகிப்து, தாய்லாந்து, ஜாவா, சுமத்ரா, மியான்மர், போன்ற நாடுகளுடன் கடல் வாணிகம் செய்து கொண்டிருந்தது என்பதற்கு பல தொல்பொருள் ஆதாரங்கள் உள்ளன. மிக நீண்டதொரு கடற்கரையைக் கொண்டுள்ள இராமநாதபுரம் மாவட்டத்திலும் அத்தகைய சில துறைமுகங்கள் இருந்துள்ளன. 


இராமநாதபுரத்தின் கிழக்கே 15 கி.மீ. தொலைவில் வைகை கடலில் கலக்கும் கழிமுகப்பகுதியில் அமைந்துள்ளது  அழகன்குளம் எனும் ஊர். இங்கு  செய்யப்பட்ட அகழாய்வு மூலம் இவ்வூர் சங்ககாலத்தில் மிக முக்கியமான துறைமுக நகராக இருந்திருக்கிறது என்பதை அறிய முடிகிறது. 

தமிழ்நாடு அரசு தொல்பொருள் ஆய்வுத் துறை மூலம் 1987 முதல் 1997 வரை நடத்தப்பட்ட அகழாய்வு மூலம் இவ்வூரின் பழமை நமக்குத் தெரிய வருகிறது. சங்க இலக்கியங்களான அகநானூறு, புறநானூறு, மதுரைக்காஞ்சி ஆகிய இலக்கியங்களில் காட்டப்படும் மருங்கூர்பட்டினம் தான் இன்றைய அழகன்குளம்.
மருங்கூர்பட்டினம் அழகாகவும், செல்வச் செழிப்புடனும் விளங்கியதாகவும், இதன் இருமருங்கிலும் உப்பங்கழிகள் இருந்தன எனவும், இவ்வூரையும் ஊனூரையும் தழும்பன் என்ற ஒரு குறு நிலத் தலைவன் ஆண்டு வந்தான் அவனைப் பாண்டிய மன்னன் வெற்றி கொண்டான் எனவும் அகநானூறு கூறுகிறது. 

மருங்கூர்பட்டினமும் ஊனூரும் சேர்ந்து நெல்லூர் அல்லது சாலியூர் எனப் பெயர் பெற்றிருந்தன எனவும், கப்பல்கள் இத்துறைமுகத்தில் தங்கிருந்த காட்சி வெள்ளத்தை முற்றுகையிடும் மலை போல் காட்சியளித்தாகவும் மதுரைக் காஞ்சி கூறுகிறது. 

நெல் என்பது சாலி எனவும் வழங்கப்படுவதால் நெல்லூர், சாலியூர் எனவும் வழங்கி இருக்கலாம். எனவே தாலமி என்ற கிரேக்க அறிஞர் கூறியுள்ள சாலியூர்  இந்தச் சாலியூரே என நாம் கருதலாம். 

     பிற்காலத்தில் நெல்லூர் என அழைக்கப்பட்ட மருங்கூர் பட்டினமும் ஊனூரும் சிறப்பு மங்கியதால் பெரிய பட்டினம் சிறப்புப் பெற்றது. சீனர்கள் பெரிய பட்டினத்தை  தா பட்டினம் என அழைத்திருக்கிறார்கள். தா என்றால் சீன மொழியில் பெரிய என்று பொருள்.

     பாண்டிய நாட்டில் கொற்கையும் மருங்கூர் பட்டினம் என அழைக்கப்பட்ட அழகன்குளமும் புகழ் பெற்ற துறைமுக நகரங்களாக இருந்துள்ளன. நிர்வாக வசதிக்காக பாண்டிய நாடு பல நாடுகளாகப் பிரிக்கப்பட்டிருந்தன. இராமநாதபுரம் பகுதி செவ்விருக்கை நாடு என அழைக்கப்பட்டது. எனவே அழகன்குளமும் செவ்விருக்கை நாட்டில் இருந்ததாகக் கொள்ளலாம். 

     அழகன்குளம் கி.மு.நான்காம் நூற்றாண்டு முதல் கி.பி.ஐந்தாம் நூற்றாண்டு வரை சிறப்புடன் விளங்கி இருந்துள்ளது. 

இங்கு கிடைத்த கருப்பு சிவப்பு நிறப் பானை ஓடுகள், மௌரியப் பானை ஓடுகள், ரெளலட்டட் மட்பாண்ட ஓடுகள், சாம்பல் நிறப் பானை ஓடுகள், சொரசொரப்பான சிவப்பு நிறப் பானை ஓடுகள், பழந்தமிழ் எழுத்துப் பொறித்த பானை ஓடுகள் முதலியவை இவ்வூரின் பழமையைச் சொல்லும்.

     ரோமானிய மதுக்குடங்களின் பகுதிகளும், ரோமானிய மன்னர்களின் காசுகளும் அகழாய்வில் கிடைத்துள்ளதால் இங்கு ரோமானியக் குடியிருப்பு இருந்திருக்கிறது என்பது தெரிய வருகிறது. இங்குள்ள மக்கள் ரோமானியர்களோடு வாணிக உறவு கொண்டிருந்தனர் என்பதும் தெரிகிறது.



AMPHORAE

இங்கு கப்பல் உருவம் வரையப்பட்ட பானை ஓடு ஒன்றும், அச்சில் பதிக்கப் பெறுவதற்காகக் குடையப்பெற்ற காளை உருவத்தோடு கூடிய பானை ஓடு ஒன்றும், யானை ஓன்று செடியைத் தும்பிக்கையால் வளைத்து உண்ண முயல்வது போன்ற உருவம் பொறிக்கப்பட்ட பானை ஓடு ஒன்றும் கிடைத்துள்ளது. 

இங்கு கிடைத்த பானை ஓடுகளில் உள்ள பண்டைத்தமிழ் எழுத்துக்கள் மதுரை மீனாட்சிபுரத்தில் உள்ள தமிழ் எழுத்துக்களைப் போன்று உள்ளதாக டாக்டர் நாகசாமி கூறுகிறார்.

இங்கு கைப்பிடியுடன் காணப்படும் இரும்புவாள் ஒன்றும், கி.மு. நான்காம் நூற்றாண்டைச் சேர்ந்த சங்ககாலப் பாண்டியர் காலச் சதுரக் காசு ஒன்றும், பல ரோமானியக் காசுகளும் கிடைத்துள்ளன.

அழகன்குளத்தில் கண்டெடுக்கப்பட்ட பானை ஓடு ஒன்றில் பண்டைய தமிழ் எழுத்தில் ‘சமூதஹ’ என்று பொறிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் காணப்படும் குகைக் கல்வெட்டுகளிலும் ‘சமூதஹ’ என்ற சொல் காணப்படுகிறது. இதன்மூலம் தமிழகத்திற்க்கும் இலங்கைக்கும் நெடுங்காலத் தொடர்பு இருந்துள்ளதை அறியலாம்.

கிரேக்க கலைப்பாணியை ஒத்துள்ள, ஒரு பெண் தன் குழந்தையை இடுப்பில் தாங்கி உள்ளதைப்போன்று சுடுமண் பொம்மை கண்டெடுக்கப்பட்டுள்ளது. மற்றொரு பானை ஓட்டில் மூன்று பெண்கள், விசிறியை தம் கைகளில் கொண்டும், ஒரு கையில் மதுக்குடத்தைத் தாங்கியும் காணப்படுகின்றனர். இவை எகிப்து பிரமீடுகளில் உள்ள வண்ண உருவங்களை போன்று உள்ளன. 


கடலில் நிற்கும் பெரிய கப்பல்களில் இருந்து சரக்குகளை சிறிய ஓடங்களில் இறக்குவதற்கு வசதியாக அழகன்குளம் வைகை ஆற்றின் கழிமுகப் பகுதியில் அமைந்துள்ளது. இலக்கியங்களில் கூறப்படும் மருங்கூர் பட்டினம் தான் அழகன்குளம் என்பதை அகழாய்வுகள் நிரூபித்துள்ளன.