Pages

Saturday, 8 August 2015

உடன்கட்டை ஏறிய பெண்களுக்கு அமைக்கப்பட்ட மாலைக்கோயில்கள் - வே.இராஜகுரு



போர், பூசல் மற்றும் பிற காரணங்களால் இறந்த வீரர்களுக்கு அவர்கள் நினைவாக நடுகற்கள் நட்டு வழிபாடு செய்வது சங்ககாலம் முதல் தமிழரிடையே காணப்படும் வழக்கம்.
நிரை கவர்தல், மீட்டல், ஊரை எதிரிகளிடமிருந்து காத்தல், புலி, பன்றி, யானையுடன் சண்டையிடுதல், அரசனின் வெற்றிக்காக போரிடுதல் ஆகிய காரணங்களால்  இறந்துபோன கணவனுடன் உடன்கட்டை ஏறிய மனைவிக்கு அமைக்கப்பட்ட நடுகல்லின் மேல் எழுப்பப்படும் கோயில் மாலைக்கோயில் எனப்படுகிறது.
இது நடுகற்களின் வகைகளில் ஒன்றாக உள்ளது. இக்கோயிலில் அமைக்கப்படும் நடுகல் சிற்பத்தில் கணவனுடன் மனைவி இருப்பது போன்று அமைக்கப்படும். இப்பெண் சுமங்கலியாக இறந்தவள் என்பதைக்காட்ட சிலையில் அவள் கையை உயர்த்தி இருப்பது போன்று அமைக்கப்பட்டிருக்கும்.  கையில் வளையல் போன்ற அணிகலன்கள் அணிந்தவளாக அப்பெண் காணப்படுவாள். மனைவியின் உருவம் வீரனின் உருவத்தை விடச் சிறியதாகவோ கைகள் மட்டுமோ அமைக்கும் வழக்கமும் இருந்துள்ளது.
இத்தகைய நடுகல்லை குடும்பத்தினருடன் ஊராரும் கோயிலாக அமைத்து வழிபட்டு வருவது வழக்கம். இதை மாலையீடு, மாலையடி, தீப்பாய்ஞ்ச அம்மன் கோயில், மாலைக்காரி, சீலைக்காரி அம்மன் கோயில் என்றும் அழைப்பர்.
இறந்த மனிதனின் உருவத்தை கல்லில் வடிக்கும் போது அவ்வுருவத்துக்குக் காது, கழுத்து, கை, கால் போன்ற உறுப்புகளில் ஆபரணங்கள் அணிவித்தும் தலையில் அழகான கொண்டையைச் செதுக்குவதும் இருந்துள்ளது. தீயில் பாய்ந்து உயிர் விடுவது போன்று சிற்பம் செதுக்கும் முறை நடுகல்லில் இல்லை. மாலை என்பதற்கு பெண் எனவும் பொருளுண்டு.
நாயக்க மன்னர்கள் ஆட்சிக்காலத்தில் விதவைப்பெண்கள் மிகுந்த கட்டுப்பாட்டிற்குள் வைக்கப்பட்டு கொடுமைக்கு ஆளாக்கப்பட்டிருந்தார்கள். ஆனால் கணவனுடன் உடன்கட்டை ஏறி இறந்துபோன பெண்களை தெய்வமாக போற்றிக்கொண்டாடினார்கள்.இதனால் அவர்களாகவே உடன்கட்டை ஏற விரும்பி இருந்திருக்கலாம். மேலும்  மன்னர்கள், போர்வீரர்கள் மட்டுமின்றி உயர்ந்த அந்தஸ்தில் இருந்தவர்களின் மனைவியரும்  நாயக்க மன்னர்கள் காலத்தில் உடன்கட்டை ஏறி உள்ளனர். கிழவன் சேதுபதி இறந்தபின்  அவரின் 47 மனைவியரும் அவருடன் உடன்கட்டை ஏறியதாக வரலாறு உள்ளது.
      திருப்புல்லாணி அரசு மேல்நிலைப்பள்ளி தொன்மைப்பாதுகாப்பு மன்ற பொறுப்பாசிரியரும் தொல்லியல் ஆர்வலருமான வே.இராஜகுரு,  இராமநாதபுரம் மாவட்டம் நரிப்பையூரில் நான்குகால் மண்டபம் போன்ற அமைப்பில்  இருந்த மூன்று பழமையான கட்டடங்களை ஆய்வு செய்தபோது அவை மாலைக்கோயில்கள் என கண்டறிந்தார். 

நரிப்பையூர் தரவையில் உள்ள 15ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த  மாலைக்கோயில்

பாரதமாதா உயர்நிலைப்பள்ளி எதிரில் இரண்டு மாலைக்கோயில்களும், கிழக்குக் கடற்கரைச்சாலையில் தரவைப் பகுதியில் ஒரு மாலைக்கோயிலும்  உள்ளன. இருகோயில்களில் நடுகல்  சிற்பம் ஏதுமில்லை. மற்றொன்றில் பாதி உடைந்த நிலையில் கருங்கல்லிலான நடுகல் உள்ளது.
இந்த நடுகல்லில், நிற்கும் வீரனின் சிற்பம் உள்ளது. உடைந்து போன பகுதியில் பெண்ணின் சிற்பம் இருந்திருக்கலாம். உள்ளூர் மக்கள் இக்கோயில்களை மாலையடி என அழைக்கிறார்கள். இக்கோயில்கள் தற்போது மக்கள் வழிபாட்டில் இல்லை. அது தொடர்பான தகவல்கள் வேறு எதுவும் அவர்களுக்கு தெரியவில்லை. இவற்றில்  கல்வெட்டுகள் எதுவும்  இல்லாததால் இது யாருக்காக கட்டப்பட்ட  மாலைக்கோயில்கள் என அறிய முடியவில்லை.
 

பாரதமாதா உயர்நிலைப்பள்ளி எதிரில் உள்ள பாண்டியர் கால மாலைக்கோயில்



இதில் இரண்டு கோயில்கள் கோபுரம் போன்ற அமைப்புடனும் ஒன்று மொட்டைக் கோபுரமாகவும் உள்ளன. கோபுரம் இல்லாத மாலையடி 13ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பாண்டியர் காலக் கட்டடக்கலை அமைப்பில் உள்ளது. இதன் நடுவில் சிலை இருந்து வழிபட்டதற்கான தடயம் உள்ளது.


பாரதமாதா உயர்நிலைப்பள்ளி எதிரில் உள்ள 15ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த  ஒரு மாலைக்கோயில். இதில்  நடுகல் உள்ளது

பாரதமாதா உயர்நிலைப்பள்ளி எதிரில் உள்ள ஒரு மாலைக்கோயிலில் பாதி உடைந்த நிலையில் உள்ள நடுகல்

மற்ற இரண்டும் 15ஆம் நூற்றாண்டில் விஜயநகர மன்னர்கள் காலத்தில் கட்டப்பட்டு இருக்கலாம். இம்மூன்று கோயில்களும்   மணற்கற்களால் கட்டப்பட்டுள்ளன. 
கொக்கரசன்கோட்டை மாலைக்காரி கோயில்

இதேபோல் சாயல்குடி அருகே கொக்கரசன்கோட்டை என்ற ஊரில் பேருந்து நிறுத்தம் அருகில் ஒரு மாலைக்காரியம்மன் கோயில் உள்ளது. இவ்வூரில் வசதி வாய்ப்புடன் இருந்த குடும்பத்தைச் சேர்ந்த ஒருவர், குதிரையில் வந்தபோது இடறி விழுந்து இறந்துவிட்டார். அவருடன் அவர் மனைவியும் உடன்கட்டை ஏறினார். இதனால் அப்பெண்ணின் விருப்பப்படி அவருடைய வம்சாவளியினர் இக்கோயிலைக் கட்டி குலதெய்வமாக வழிபட்டு வருகிறார்கள். இக்கோயில் 18ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டதாகத் தெரிகிறது. இக்கோயில் தற்போதும் வழிபாட்டில் உள்ளது.
 

கொக்கரசன்கோட்டை மாலைக்காரியம்மன் தன் கணவனுடன் கையை மேலே உயர்த்திய நிலையில் கையில் வளையல்களுடன்

  
           தூத்துக்குடி மாவட்டம் வேம்பார் என்ற ஊரில் சிவபெருங்குன்றம் என்ற பகுதியில் ஒரு மாலைக்கோயில் உள்ளது.  இது வேட்டைக்குப் போன போர் வீரன் ஒருவன்,  பாம்பு கடித்து இறந்த பின்பு அவன் மனைவி அவனுடன் உடன்கட்டை ஏறி இறந்ததின் நினைவாக அமைக்கப்பட்ட மாலைக்கோயில் ஆகும்.  மறவர் சமுதாயத்தினரின் குலதெய்வமாக அவர்களின் வம்சாவளியினரால் தற்போதும்  வழிபடப்பட்டு வருகிறது. இக்கோயிலும் கொக்கரசன் கோட்டை மாலைக்கோயிலும் ஒரே காலத்தைச் சேர்ந்ததாக உள்ளது. வேம்பார் நரிப்பையூரில் இருந்து 6 கி.மீ தூரத்தில் உள்ளது.
வேம்பார் மாலைக்கோயில்

வேம்பார்மாலைக்கோயில் நடுகல்

Tuesday, 21 July 2015

நரிப்பையூரில் 500 ஆண்டுகள் பழமையான முஸ்லிம் பள்ளிவாசல் (வே.இராஜகுரு)



மிக நீண்ட கடற்பரப்பைக் கொண்ட இராமநாதபுரம் மாவட்டம், இங்குள்ள  பல துறைமுகப் பட்டினங்கள் மூலம் ரோமானியர், சீனர், அரேபியர், போர்ச்சுகீசியர்கள் போன்ற வெளிநாட்டவருடன் வணிகம் புரிந்த வரலாறுகளைக் கொண்டு விளங்குகிறது. இதன்மூலம் பண்பாடு மொழி முதலியவற்றில் பெருமளவில் மாற்றங்கள் ஏற்பட்டன. இப்பகுதியில் இஸ்லாம், கிறித்துவ மதங்கள் பரவின.

நரிப்பையூர் மொட்டைப் பள்ளிவாசல்

திருப்புல்லாணி அரசு மேல்நிலைப்பள்ளி தொன்மைப்பாதுகாப்பு மன்ற பொறுப்பாசிரியரும் தொல்லியல் ஆர்வலருமான வே.இராஜகுரு,  இராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி அருகிலுள்ள நரிப்பையூரில் கள ஆய்வில் ஈடுபட்டிருந்தபோது, கடல்நீரைக் குடிநீராக்கும் திட்ட வளாகம் அருகில் முஸ்லிம் கபர்ஸ்தான் உள்ளே சுமார் 500 ஆண்டுகால பழமையான முஸ்லிம் பள்ளிவாசல் இருப்பதைக் கண்டறிந்தார். மேலும் அவர் கூறியதாவது,
“இப்பள்ளிவாசல் மேற்குச் சுவரின் உள்பகுதியில் தொழுகும் திசை மாடம் உள்ளது. இது ஒலி பெருக்கி இல்லாத அக்காலத்தில்  இமாம் அமர்ந்து தொழும் இடம் ஆகும். வில் போன்று வளைந்த அமைப்பில் இம்மாடம் உள்ளது. 
தொழும் மாடம்

ஒரு மண்டபம் போன்ற அமைப்பில் காணப்படும் இப்பள்ளிவாசலில் தொழும் மாடம், அர்த்தமண்டபம், முன்மண்டபம் ஆகியவை உள்ளன. இதன்மேல் மினார் எதுவும் கட்டப்படவில்லை. எனவே இதை மொட்டைப் பள்ளிவாசல் என உள்ளூர் மக்கள் அழைக்கிறார்கள். 
மேற்கூரை பெரிய கற்களால் மூடப்பட்டு செங்கற்களால் வேயப்பட்டுள்ளது

இதன் சுவர் மணற்கற்களாலும் சுண்ணாம்பாலும் கட்டப்பட்டுள்ளது. மேற்கூரை பெரிய கற்களால் மூடப்பட்டு செங்கற்களால் வேயப்பட்டுள்ளது. கீழிருந்து ஏறிச் செல்ல 18 படிகள் இதில் இருந்ததாகவும் அவை தற்போது மணலில் புதைந்திருப்பதாகவும் கூறப்படுகிறது. இப்பள்ளிவாசல் தூண்கள் தாமரைப்பூ போதிகையோடு கலை அழகுடன் அமைக்கப்பட்டுள்ளன. தூண்களிலும் மேற்கூரையிலும் பலவிதமான பூக்களின் உருவங்கள் கோட்டுருவங்களாக வெட்டப்பட்டுள்ளன. இதில் மொத்தம் மூன்று வாயில்கள் உள்ளன. இரவு நேரத்தில் தொழுவதற்கு வசதியாக விளக்கு வைக்கும் சாளரங்கள் உள்ளன. 
தூண்களில் தாமரைப்பூ போதிகை

இம்மாவட்டத்தின் அநேக கடற்கரை கிராமங்களில் இஸ்லாமியர் பெருமளவில் வாழ்கிறார்கள். கி.பி. பத்தாம் நூற்றாண்டுக்குப் பின் அரபு வணிகர்கள் மூலம் இம்மாவட்ட கடற்கரைப் பகுதிகளில் இஸ்லாம் பரவி உள்ளது. கி.பி.1224 ஆம் ஆண்டிலேயே மாறவர்மன் சுந்தரபாண்டியன் பவித்திரமாணிக்கப்பட்டினம் என்ற பெரியபட்டினம் பிலால் பள்ளிக்கு நிலக்கொடை வழங்கிய கல்வெட்டு திருப்புல்லாணி கோயிலில் உள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் மேல்மாந்தையில் உள்ள கோயில் மண்டபம், வேம்பாரில் உள்ள சர்ப்பமடம் போன்றவற்றில் உள்ள தூண்கள் இப்பள்ளிவாசல் தூண்கள்  போலவே தாமரைப்பூ போதிகை அமைப்புடன் உள்ளன. இவை கி.பி. 1550 களில் கட்டப்பட்டவை. 
வேம்பார் சர்ப்பமடம்

கி.பி. 1510 க்குப்பின், வாணிகம் செய்ய வந்த போர்ச்சுகீசியர்கள் இராமேஸ்வரம் முதல் தூத்துக்குடி வரை உள்ள கடற்பகுதிகளில் ஆதிக்கம் செலுத்தி வந்தனர். இவர்களுக்கு அரபு வணிகர்கள் பெரும் போட்டியாளர்களாக இருந்ததால் அவர்களை ஒடுக்கும் முயற்சியிலும்   போர்ச்சுகீசியர்கள் ஈடுபட்டுவந்தனர். 
மேல்மாந்தை கோயில் மண்டபம்

மதுரையை ஆண்டுவந்த விஜயநகர மன்னர்களிடமும் நாயக்க மன்னர்களிடமும் வலிமையான கடற்படை இல்லாததால் அவர்களால் போர்ச்சுகீசியர்களை ஒடுக்க முடியவில்லை. எனவே அவர்களின் ஆதிக்கம்  கிழக்குக் கடற்கரையில் சுமார் 150 ஆண்டுகளுக்கும் மேல் நீடித்தது.
 போர்ச்சுகீசியர்கள் இப்பகுதியில் ஆதிக்கம் செலுத்துவதற்கு முன் அதாவது கி.பி. 1500 க்கு முன்பே இப்பள்ளிவாசல் இங்கு கட்டப்பட்டிருக்கவேண்டும். இவ்வூரில்  குடியிருந்த இஸ்லாமியர்கள் தொழுகை நடத்துவதற்காக  அரபு நாட்டு வணிகர்கள் இதை கட்டி இருக்கலாம். இங்கு கல்வெட்டுக்கள் ஏதும் காணப்படவில்லை. மேலும் பெரியபட்டினம் பிலால் பள்ளிக்கு அடுத்து மாவட்டத்திலுள்ள மிக பழமையான பள்ளிவாசலாக இதை கருதலாம்.
பள்ளிவாசலை  மூடியிருக்கும் மணலை அகற்றி சுத்தம் செய்து தொன்மைச் சிறப்பு வாய்ந்த இதை பாதுகாத்து பராமரிக்க பொதுமக்களும் அரசும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்”.

Monday, 29 June 2015

திருவாடானையின் வரலாற்றுச் சிறப்புகள் (வே.இராஜகுரு)



அறிமுகம்
பாண்டிய நாட்டில் தேவாரப் பாடல் பெற்ற திருக்கோவில்கள் 14 உள்ளன. அவையாவன மதுரை, திருப்புனவாசல், திருப்பத்தூர், திருக்குற்றாலம், திருஆப்பனூர், திருவேடகம், திருநெல்வேலி, இராமேஸ்வரம், திருவாடானை, திருப்பரங்குன்றம், திருச்சுழி, காளையார்கோவில், பிரான்மலை, திருப்பூவனம். இவற்றில்  இராமேஸ்வரமும், திருவாடானையும் மட்டுமே இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ளன.
இராமநாதபுரத்தில் இருந்து காரைக்குடி செல்லும் தேசிய நெடுஞ்சாலையும் மதுரையிலிருந்து தொண்டி செல்லும் தேசிய நெடுஞ்சாலையும் சந்திக்கும் இடத்தில் இராமநாதபுரத்திலிருந்து 55 கி.மீ. தொலைவில் உள்ளது திருவாடானை. இங்கு ஆடானை நாயகர், அன்பிற்பிரியாத அம்மன் கோவில் உள்ளது.
      இவ்வூர் பாரிஜாதவனம், வன்னிவனம், குருக்கத்திவனம், வல்லவனம், முத்திபுரம், ஆதிரத்தேசுவரம், ஆடானை, மார்க்கண்டேயபுரம், அகஸ்தீசுவரம், பதுமபுரம், கோமுத்திசுவரம், விஜயேசுவரம் என 12  பெயர்களால் அழைக்கப்பட்டு வந்துள்ளது.
திருஞானசம்பந்தர்  ஆடானை நாயகர் மேல் ஒரு பதிகம் பாடியுள்ளார். அருணகிரி நாதர் இக்கோவிலில் உள்ள முருகனைப் போற்றி பாடல் பாடியுள்ளார்.
திருஞானசம்பந்தர் தேவாரப்பாடல்களிலும், கல்வெட்டுக்களிலும்  இவ்வூர், ஆடானை என்றே குறிக்கப்படுகிறது. பாண்டியர் ஆட்சிக்காலத்தில் இடையளநாடு, தழையூர்நாடு எனும் பகுதியில் இவ்வூர் இருந்துள்ளது. 

ஆடானை நாயகர் கோவில் 

துருவாச முனிவர் 12 ஆண்டுகள் தவத்துக்குப்பின் உணவு உண்ண வந்தபோது வருணபகவானின் மகன் வாருணி அவருடைய உணவை உண்டுவிட்டதால்  அவன் யானையைப்போல் உணவு உண்ணக்கூடியவனாகவும் ஆடுபோல் சிறிய வாய் உடையவனாகவும் ஆகக் கடவதாக சாபம் பெற்றான். வாருணி இவ்வூர்ச் சிவனை வழிபட்டு சாபவிமோசனம் பெற்றதாக புராணங்கள் கூறுகின்றன. சூரிய பகவான் இரத்தினக்கல்லில் லிங்கம் செய்து வழிபாடு செய்ததால் இவ்வூர் இறைவனுக்கு ஆதிரத்தினேஸ்வரர் எனவும் பெயர் உண்டு.
      இக்கோவில் இறைவன் ஆடானை நாயகர் என்ற  ஆதிரத்தினேஸ்வரர்.  அம்மன் அன்பாயிரவல்லி என்ற சிநேகவல்லி. கோவில் தலவிருட்சம் வில்வமரம். தீர்த்தம் சூரிய புஷ்கரணி. இக்கோவில் 422 அடி நீளமும்  252 அடி அகலமும் உடையது. இதன் கோபுரம் 150 அடி உயரமுடையது. மதில் சுவர்கள் மிக உயரமானவை.

விழாக்கள் 

வைகாசி விசாக வசந்தவிழா 10 நாள்கள், ஆடிப்பூரத் திருவிழா 15 நாள்கள், நவராத்திரி, பிரதோஷம், கார்த்திகை, சதுர்த்தி போன்ற விழாக்கள் இங்கு சிறப்பாகக் கொண்டாடப் படுகின்றன.

வரலாற்றுச் சிறப்புகள்
 
கோவில் அமைந்த ஊர் என்பதால் ஆடானை என்ற இவ்வூரின் பெயருடன், திரு என்ற விகுதி சேர்த்து திரு ஆடானை என அழைக்கப்படுகிறது.
      இக்கோவிலில் உள்ள நான்கு கல்வெட்டுகளை மத்திய தொல்லியல் துறை 1914 ஆம் ஆண்டு படி எடுத்துள்ளது. இதில் இரு கல்வெட்டுக்கள் மாறவர்மன் சுந்தரபாண்டியன் காலத்தைச் சேர்ந்ததாகவும், மற்ற இரண்டில் ஒன்று சடைக்கத்தேவர் என்ற தளவாய் சேதுபதி காலத்தையும், மற்றொன்று முத்து வைரவநாத சேதுபதி காலத்தையும் சேர்ந்தது.
      ஏழாம் நூற்றாண்டைச் சேர்ந்த திருஞானசம்பந்தர்  ஆடானை நாயகர் மேல் பதிகம் பாடியிருப்பதாலும், லிங்கத்தின் ஆவுடையார் சதுர வடிவில் உள்ளதாலும் சைவ வைணவ மதங்களின் மறுமலர்ச்சிக் காலமான ஏழாம் நூற்றாண்டில் பிற்காலப் பாண்டியர்களால் இக்கோவில் கட்டப்பட்டிருக்கலாம்.
      திரிபுவன சக்கரவர்த்திகள் கோனேரின்மை கொண்டான் என அழைக்கப்படும் மாறவர்மன் சுந்தரபாண்டியனின் 17 ஆம் ஆட்சியாண்டுக் கல்வெட்டு (கி.பி.1233) இக்கோவிலுக்கு நெல் தானமாக வழங்கப்பட்டதைத் தெரிவிக்கிறது.
      அதே மன்னனின் 16 ஆம் ஆட்சியாண்டுக் கல்வெட்டு (கி.பி.1232) இக்கோவிலுக்கு நிலக்கொடை வழங்கியதைத் தெரிவிக்கிறது. சோழ நாட்டை வழங்கியருளிய சுந்தர பாண்டியத் தேவர் என அவர் குறிக்கப்படுகிறார்.
      உடையான் சடைக்கண் சேதுபதி கி.பி.1605 இல் கருப்பூர் கிராமத்தையும் கி.பி.1606 இல் அச்சங்குடி கிராமத்தையும் கி.பி.1615 இல் நாகனேந்தல், இரட்டையூரணி, வல்லடிவாகை ஆகிய  கிராமங்களையும் இக்கோவிலுக்கு தானமாக வழங்கியுள்ளார்.
      கூத்தன் சேதுபதி கி.பி.1623 இல் கேசணி, பில்லூர் கிராமங்களையும், கி.பி.1624 இல் கீரமங்கலம், கீரணி கிராமங்களையும் இக்கோவிலுக்கு கொடையாக  வழங்கியுள்ளார்.
      தளவாய் சேதுபதியின் பிரதிநிதியான திருமலையன் என்பவர், திருவாடானை கோவில் ஆடானை நாயகருக்கு அபிசேகம், திருநீறு, மாலைகள் போன்றவற்றிற்காக ஒவ்வொரு கிராமமும் ஒரு காசும், ஒரு பணமும், ஒரு கலம் நெல்லும் கோவிலுக்குக் கொடுக்க வேண்டும் என  கி.பி.1635 இல் ஆணையிட்டுள்ள கல்வெட்டு இக்கோவில் இராஜகோபுர சுவரில் உள்ளது. இந்தக் கிராமங்களிலே மேற்கண்ட வரி கொடுக்காமல் இருக்க கைக்கூலி வாங்கியவன் பெண்டாட்டியையும் உடன்பிறந்தாளையும் மகளையும் மருமகளையும் கயவர்களையும் ஒரு வீட்டில் பகைவருடன் கூட்டிக்கொடுத்த பாவத்தை அடைவான் எனக் கடுமையாகக் கூறுகிறது. கையூட்டு, இலஞ்சம் என்ற பொருளில் கைக்கூலி எனும் சொல் இக்கல்வெட்டில் கையாளப்பட்டுள்ளது.
      திருமலை ரெகுநாத சேதுபதி கி.பி.1646 இல்  ஆதியாகுடி என்ற ஊரை இக்கோவிலுக்கு தானமாக அளித்துள்ளார். இரண்டு ஆண்டுகள் மட்டுமே மன்னராய் இருந்த முத்து வைரவநாத சேதுபதியின் ஆணையின்படி , இக்கோவிலுக்கென கோவில் எதிரில் சூர்ய புஷ்கரணி எனும் குளம் வெட்டப்பட்டதாக கி.பி.1710 ஆம் ஆண்டுக் கல்வெட்டு தெரிவிக்கிறது. இக்கோவிலுக்கு குமார முத்து விஜய ரகுநாத சேதுபதி வெளிமுத்தூர் கிராமத்தை கி.பி.1735 இல் தானமாக வழங்கியுள்ளார்.
      தேவகோட்டை இராம.அரு.அரு.இராம. குடும்பத்தார் கி.பி. 1889 இல் ரூபாய் 12 இலட்சம் செலவில் இக்கோவிலைப் புதுப்பித்துள்ளார்கள்.
      ஆதியில் தமிழர்கள் மரங்களில் தெய்வம் இருப்பதாக நம்பியதால் ஊரின் நடுவில் மரங்களை நட்டு வணங்கி வந்துள்ளனர். இன்றும் கோவில்களில் தலவிருட்சமாக மரங்களை வழிபட்டு வருவது இதற்கு ஆதாரமாகும்.
சங்க இலக்கியமான அகநானூறில் சொல்லப்படும் அட்டவாயில் என்ற ஊர் தற்போதைய திருவாடானையே என கூறப்படுகிறது. அட்டவாயில் என்பது போரிட்டு அழிக்கப்பட்ட வாயில் என்று பொருள்.
ஆடானை என்பதை ஆடா + னை எனப்பிரித்து ஆடா தோடை என்ற செடி அதிகமாகக் காணப்பட்ட வனம் என்ற பொருளில் இவ்வூர்ப் பெயர் அமைந்துள்ளதாகக் கொள்ளலாம். தமிழகத்தின் பல ஊர்ப் பெயர்கள் அந்த இடங்களில் அதிகமாகக் காணப்படும் மரம், செடி, கொடிகளின் பெயர்களால் அமைந்துள்ளதை நாம் நினைவில் கொள்ளவேண்டும்.