Pages

Showing posts with label ராமநாதபுரம் மாவட்டம். Show all posts
Showing posts with label ராமநாதபுரம் மாவட்டம். Show all posts

Sunday, 12 April 2026

ஆறும் மண்ணும் வரலாற்றை உருவாக்கும் காரணிகள் தொல்லியல் ஆய்வாளர் தகவல்

 




ராமநாதபுரம் மாவட்டத்தில் ஓடும் குண்டாறும், செம்பு நிற மண்ணும் வரலாற்றை உருவாக்கும் காரணிகள் என தொல்லியல் ஆய்வாளர் வே.இராஜகுரு தெரிவித்தார்.
ராமநாதபுரம் அருகேயுள்ள புதுக்கோயில், அரசு உயர்நிலைப் பள்ளியில் தொல்லியல் மரபு மன்றம் சார்பில் ‘வரலாற்று நோக்கில் ராமநாதபுர மாவட்டம்’ என்ற தலைப்பில் கருத்தரங்கமும் கண்காட்சியும் நடைபெற்றது. பள்ளித் தலைமையாசிரியர் ம.மலைப்பாண்டி தலைமை வகித்தார். பட்டதாரி ஆசிரியர் வழிவிட்ட அய்யனார் முன்னிலை வகித்தார். ஏழாம் வகுப்பு மாணவன் தி.துர்க்கேஷ் அனைவரையும் வரவேற்றார். தொல்லியல் மரபு மன்றச் செயலர் க.ராமச்சந்திரன் மன்றத்தின் செயல்பாடுகள் பற்றிக் கூறினார்.
திருப்புல்லாணி, அரசு மேல்நிலைப்பள்ளி ஆங்கில ஆசிரியரும், தொல்லியல் ஆய்வாளருமான வே.இராஜகுரு சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு, “ராமநாதபுரம் மாவட்டத்தில் மிகப் பழமையான கீழைப் பழங்கற்கால கற்கோடரிகள் கமுதி குண்டாற்றுப் பகுதிகளில் கண்டெடுக்கப்பட்டுள்ளன. அப்பகுதிகளில் நுண் கற்கருவிகள், இரும்புக் கால தொல் பொருட்களும் கிடைத்துள்ளன. இதன்மூலம் மிகப் பழமையான நாகரிகம் குண்டாற்றுப் பகுதியில் இருந்துள்ளதை அறிய முடிகிறது.
செம்பு நிறத்தில் வளமான மண் கொண்ட திருப்புல்லாணி, பரமக்குடி, முதுகுளத்தூர் பகுதிகள் கீழ்ச்செம்பில் நாடு, வடதலைச் செம்பில் நாடு, ஏழுர் செம்பில் நாடு என கல்வெட்டுகளில் குறிப்பிடப்படுகின்றன. அடி முதல் முடி வரை முழுவதும் கற்களால் கட்டப்பட்ட கோயிலை கற்றளி என்பர். இம்மாவட்டத்தில் சாயல்குடி அருகிலுள்ள மாரியூர், திருமாலுகந்தான்கோட்டை, நயினார்கோயில் ஆகிய ஊர்களில் உள்ள சிவன் கோயில்கள் கற்றளிகள் ஆகும். வணிகம், இயற்கைத் துறைமுகம், மண்வளம், கோயில், கல்வெட்டு, சமணம், பௌத்தம் என பலவற்றிலும் தமிழ்நாட்டில் அதிக தொல்லியல் தடங்கள் கொண்டதாக இம்மாவட்டம் விளங்குகிறது.” என்றார். ஏழாம் வகுப்பு மாணவி செ.ரியாரென்சி நன்றி கூறினார்.
பின்பு நடந்த கண்காட்சியில் மாவட்டத்தில் புதிதாக கண்டெடுக்கப்பட்ட பழைய, புதிய, நுண் கற்கால கருவிகள், பெருங்கற்கால தொல் பொருட்கள், கல்வெட்டுகளின் அச்சுப்படிகள், பாண்டியர், சோழர், சேதுபதிகள், பொந்தன் புளி, உகாய் மரம், கோயில்கள், இஸ்லாம், கிறித்தவம், சமணம், பௌத்தம் போன்ற தலைப்புகளில் புகைப்படங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன. மாணவ மாணவிகள் நேரில் பார்த்து அறிந்து கொண்டனர்.









Saturday, 20 September 2025

பரமக்குடி அருகே 407 ஆண்டு பழமையான குலசேகரப் பாண்டியன் செப்புப் பட்டையம் கண்டெடுப்பு

 



ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி அருகில் கமுதக்குடி சுந்தரவல்லியம்மன் கோயிலுக்கு குலசேகரப்பாண்டியன் கி.பி.1618-ல் கொடுத்த செப்புப் பட்டையத்தை ராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவனம் கண்டெடுத்துள்ளது.

கமுதக்குடி, சுந்தரவல்லியம்மன் கோயில், பூசாரி தங்கவேலுவிடம் ஒரு செப்புப் பட்டையம் இருப்பதாக அவ்வூரைச் சேர்ந்த சுப்பிரமணியன் கொடுத்த தகவலின் பேரில் ராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவனத்தின் தலைவர் வே.ராஜகுரு அதைப்படித்து ஆய்வு செய்தார். 


இதுபற்றி வே.ராஜகுரு கூறியதாவது,

கைப்பிடியுடன் 17 செ.மீ நீளம், 9.5 செ.மீ அகலம், 400 கிராம் எடையுடன் அளவில் சிறியதாக உள்ள செப்புப் பட்டையம், 37 வரிகளில் சுவசுதிரிமன் எனத் தொடங்கி சுந்தரேசுபர் சகாயம் என முடிகிறது.

இதில் கலியுக ஆண்டு 2810-ம், பிங்கள ஆண்டு மாசி மாதம் 20-ம் நாளும் உள்ளது. கலியுக ஆண்டு தவறாக உள்ளது. தமிழ் ஆண்டு மற்றும் எழுத்தமைதி கொண்டு இதன் காலம் கி.பி.1618 எனலாம். பட்டையத்தில் இவ்வூர் கமுதாபுரி எனப்படுகிறது.

மன்னர் குலசேகரப் பாண்டியன், மதுரை மண்டலம், வானர்வீரவகை வளநாட்டில், உத்தராயணம், பூர்வபட்சம், சதுர்த்தசி, திருவோண நட்சத்திரம் உள்ள சுபதினத்தில், கமுதாபுரி வட்டகையில் மேலேந்தலுக்கு அருகில், குளக்குமேல்பட்டி வட்டகையில் சேர்ந்த ஏந்தலாயிருந்த பகுதிக்கு சுந்தனேந்தல் என்று பெயரிட்டு, அக்கிராம கண்மாய் மற்றும் கீத்துமடை மூலம் நீர் பாய்ந்து சாகுபடியாகும் 70 விரையடி நிலத்தின் மூலம் குளப் பிறமாணமாக (நிலவரி) வரும், ஒரு கலம், 4 மரக்கால், ஒரு மா அளவுள்ள தானியம், அதனுடன் பூசைக்கு 30 குறுக்கம் நிலம் ஆகியவற்றை கமுதக்குடி பிடாரி சுந்தரவல்லி பராசத்தி கோயில் நித்திய பூசைக்குத் தானமாக கொடுத்துள்ளார்.

சுந்தனேந்தல், வைகை ஆத்துக்கு தெற்கிலும், தெளிசாத்தநல்லூருக்கு மேற்கிலும், பொதுவக்குடிக்கு வடக்கிலும் இருப்பதாக பட்டையத்தில் கூறப்பட்டுள்ளது. சுந்தரவல்லி பராசத்தி நித்திய பூசைக் கட்டளையை சூரியன், சந்திரன் உள்ளவரைக்கும், கோயில் நம்பியான் சுந்தபண்டாரம் நடத்தி வரவேண்டும். இத்தானத்தை யாரும் அடி அழிவு செய்யக் கூடாது என முடிவில் கூறப்பட்டுள்ளது. ஒரு கலம், 4 மரக்கால், ஒரு மா ஆகிய முகத்தல் அளவுகள் ‘க௱, த, ப’ என குறியீடுகளாக கொடுக்கப்பட்டுள்ளன.

கி.பி.10-11-ம் நூற்றாண்டுகளில் வானவீரவளநாடு, மானவீரவளநாடு எனப்பட்ட இவ்வூர் பகுதி, கி.பி.1618-ல் வானர்வீரவகை வளநாடு என மாற்றம் பெற்றுள்ளது. குலசேகரபாண்டியன், வானர்வீரவகை வளநாட்டுப் பகுதியை மட்டும் ஆட்சி செய்த பாண்டிய வம்சாவளியினராக இருக்கலாம்.

இவ்வூர் அருகில் மேலப்பெருங்கரை கோயிலில் உள்ள கி.பி. 1674-ம் ஆண்டு கல்வெட்டின் படி, திருமலை சேதுபதியின் காலத்திற்கு முன்பு வரை பாண்டியர்கள் இந்தப் பகுதியை ஆட்சி செய்ததாகக் கூறலாம். இவ்வாறு அவர் கூறினார்.

நாளிதழ் செய்திகள்